செய்திகள்

ஐ.நா.வின் விசாரணை செயற்பாடுகளுக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்: டேவிட் கமரூன் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுவருகின்ற விசாரணை செயற்பாட்டுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

கடந்தகால விவகாரங்களை கையாள்வதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரிட்டன் பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் கடந்த மாதம் சந்தித்தபோது கடந்த கால செயற்பாடுகளை ஆராய்வதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப் பிட்டேன்.

ஆனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை தொடர்பில் மேற்கொண்டுவருகின்ற விசாரணைகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்கவேண்டும் என்ற விடயத்திலும் நான் தெளிவாக இருந்தேன்.

இந்த புத்தாண்டானது இலங்கையின் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதுடன் கடந்தகால காயங்களை ஆற்றும் என்று நம்புகின்றோம். இதேவேளை பிரிட்டனின் தொழில் கட்சி தலைவர் எட் மிலிபேன்ட் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் சர்வதேச விசாரணை அவ­சியம் என்றும் அதற்காக அழுத்தம் பிரயோகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.