செய்திகள்

ஐ.ம.சு. மு.விலிருந்து வெளியேறி சுயமாக இயங்கப்போவதாக தே.சு.மு. அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி வெளியேறி சுயாதீனமாக செயற்பட  விரும்புவதால் தனிக் கட்சிக்குரிய சிறப்புரிமைகளை தனது கட்சிக்கு தர வேண்டுமென அக்கட்சியின் தலைவரும் கூட்டு எதிரணியிலுள்ள  மகிந்த ஆதரவு எம்.பி.யுமான விமல் வீரவன்ச சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்தார்.
சபாநாயகர் அறிவிப்பு, வாய்மூல விடைக்கான  வினாக்களை தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே விமல் வீரவன்ச இத்தனிக் கட்சிக் கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்தார்.
இது தொடர்பில் விமல் வீரவன்ச கூறுகையில் ;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியிலுள்ள நானும் ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படவிரும்புகின்றோம். அதேவேளை தொடர்ந்தும் நாம் கூட்டு எதிரணியில் அங்கம்  வகிப்போம்.
இது தொடர்பான கடிதத்தை நாம் ஏற்கனவே உங்களிடம் கையளித்துள்ளோம். எனவே எமது கோரிக்கையை ஏற்று எமது தேசிய சுதந்திர முன்னணியை தனிக் கட்சியாக அங்கீகரித்து எமக்குரிய  சிறப்புரிமைகளை வழங்குமாறு உங்களை கேட்கின்றேன். இவ்வாறு தனிக்கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட வரலாறுகள் இப்பாராளுமன்றத்துக்கு  உண்டென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார்.
கட்சித் தலைவர்கள் 
 கூட்டத்தில் பேசியே முடிவு
இதற்கு சபாநாயகர் கருஜயசூரிய பதிலளிக்கையில் ; உங்களின் தனிக் கட்சிக் கோரிக்கை கடிதம் கிடைத்தது. தீர்ப்பை அறிவிப்பதை நான் வேண்டுமென்று தாமதப்படுத்தவில்லை. இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசி முடிவு  எடுக்கப்பட வேண்டும். அதன் பின்னர் என் தீர்ப்பை அறிவிக்கின்றேன் என்றார்.
ஆனால் இதனை ஏற்க மறுத்த விமல் வீரவன்ச எனது கோரிக்கைக்கு கட்சித் தலைவர்களின் முடிவு தேவையில்லை. சபாநாயகரின் முடிவு மட்டும் போதுமானது. கட்சித் தலைவர்களில் ஒருவர் மறுத்துவிட்டால்  அதனை வைத்துக் கொண்டு எமது தனிக் கட்சிக் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. எனவே கட்சித் தலைவர்களின் முடிவு தேவையற்றது என்றார்.
ஐ.ம.சு. கூ.வுக்கு 
 உங்கள் முடிவு தெரியுமா?
அப்போது எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல ஐ.ம.சு. கூ. விலிருந்து வெளியேறி தனிக் கட்சியாக செயற்படும் கடிதத்தை சபாநாயகருக்கு கொடுத்து விட்டீர்கள். அதேபோல் ஐ.ம.சு. கூ. தலைமைக்கும் வெளியேறும் கடிதத்தை கொடுத்தீர்களா எனக் கேட்டார்.
இதனால் சபையில் பெரும் சிரிப்பொலி எழவே சிறிது தடுமாறிய விமல் வீரவன்ச கோபத்துடன் ஏதோ சொல்ல முற்பட நான்  உங்களுக்கு உதவுவதற்காகவே இதனைக் கேட்டேன். நீங்கள் ஐ.ம.சு.கூ. தலைமையிடமும் கடிதம் கொடுத்திருந்தால் பிரச்சினை இலகுவில் முடிந்து விடும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய பின்பே முடிவு அறிவிக்கப்படுமென சபாநாயகர் மீண்டும் தெரிவித்தார்.
n10