செய்திகள்

ஒபாமாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள வலியுறுத்துவேன் : ஜோன் கெரி

இலங்கையில் காணப்படும்; அமைதியான நிலைமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு தெளிவுபடுத்தி அவரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள செய்ய நடவடிக்கையெடுப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள ஜோன் கெரி நேற்று கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொள்கைத் திட்டத்தின்படி இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்படி நாட்டில் காணப்படும் சாதாரணமான நிலைமையிலேயே தான் இலங்கைக்கு வர தீர்மானித்ததாகவும் இந்த சாதாரணமான நிலைமை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எடுத்துக் கூறி அவர் அடுத்த வருடம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள ஆசிய விஜயத்தின் போது இலங்கைக்கும் வர வேண்டிய தேவை தொடர்பாக  அவருக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கையெடுப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையுடனான உறவுகளை மிகவும் பெறுமதியானதாக கருதுவதாகவும் இந்த தொடர்பை தொடர்ந்தும் பேணும் வகையில் இரண்டு நாடுகளுக்கிடையேயான வருடாந்த கலந்துரையாடல் சுற்றொன்றை நடத்த நடவடிக்கையெடுப்பதாகவும் இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டு வங்கிகளில் சில இலங்கையரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பாக ஆராய்வதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரிடம் கேட்டுக்கொண்டவேளை அதற்கு இராஜாங்க செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.