செய்திகள்

ஒரு ஜென்டில்மேனின் மரணம்: 20 ஓவர் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்டை அழிப்பது பற்றி கேள்வி எழுப்பும் ஆவணப்படம்

ஒரு ஜென்டில்மேனின் மரணம் என்ற புதிய ஆவணப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பற்றிய புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இப்படத்தை சாம் காலின்ஸ் மற்றும் ஜொர்ராட் கிம்பர் ஆகிய இருவரும் இணைந்து 4 ஆண்டுகளில் உருவாக்கியுள்ளனர். கடந்த வாரம் ஷெபீல்ட் ஆவணப்படம் விழாவிலும் பிறகு லண்டனிலும் இப்படம் திரையிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் தற்போதைய ஐ.சி.சி. தலைவர் என்.சீனிவாசனில் ஆரம்பித்து பல நாடுகளின் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும், ரவி சாஸ்திரி, கெவீன் பீட்டர்சன் போன்ற முக்கிய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

20 ஓவர் கிரிக்கெட் வருகைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் பாதிப்பு பற்றி இந்த ஆவணப்படம் விளக்கியுள்ளது. முக்கியமாக 20 ஓவர் கிரிக்கெட்டினால் பாரம்பரியமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு முக்கிய விஷயமாக பீக்-3 என்று அழைக்கப்படும் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எப்படி உலக கிரிக்கெட்டின் அதிகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கையில் இருந்து அகற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன என்பதையும் விரிவாக அலசியுள்ளது.

மேலும் சர்வதேச வீரர்களை ஐ.பி.எல். எப்படி அதிக பணம் கொடுத்து டெஸ்ட் போட்டியில் விளையாட விடாமல் செய்கின்றது என்பது பற்றியும் ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் இந்தியாவில் வெளிவரும் போது நிச்சயமாக கடும் விவாதங்களை கிளப்பும் என்பது மட்டும் உறுதி.