செய்திகள்

ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி: இந்திய அணி நாளை வங்காளதேசம் பயணம்

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி வருகிற 10–ந்தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் 18–ந்தேதி ஆரம்பமாகிறது.

ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்திய அணி நாளை (திங்கட்கிழமை) வங்காளதேசம் செல்கிறது. முன்னதாக இந்திய அணி இன்று புறப்பட வேண்டியது. பிரதமர் மோடி வங்காள தேசத்தில் இருப்பதால் ஒருநாள் தாமதமாக நாளை புறப்படுகிறது.

டெஸ்ட் போட்டியில் வீராட் கோலியும், ஒருநாள் போட்டியில் டோனியும் கேப்டனாக பணியாற்றுவார்கள். டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் விர்த்திமான் சகா விக்கெட் கீப்பராக பணியாற்றுவார். இதேபோல நீண்ட இடை வேளைக்கு பிறகு டெஸ்ட் அணியில் ஹர்பஜன் சிங் ஆடுகிறார்.

டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற லோகேஷ் ராகுல் டெங்கு காய்ச்சல் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.இரு அணிகள் இடையே நடைபெற்ற 4 டெஸ்ட் தொடரையும் இந்தியாவே கைப்பற்றி இருந்தது. கடைசியாக 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் சுற்றுப் பயணம் செய்து தொடரை 2–0 என்ற கணக்கில் வென்றது.

2014–ம் ஆண்டு வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.வங்காளதேச தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் கொல்கத்தாவில் நேற்று தீவிர பயிற்சி பெற்றனர். உடல் தகுதி சோதனையும் நடந்தது. இன்றும் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். பயிற்சி ஆட்டம் எதிலும் விளையாடாமல் இந்திய அணி நேரடியாக வங்காள தேசத்துடன் ஆடுகிறது.

வங்காளதேச தொடரில் விளையாடும் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் விவரம்:–

வீராட் கோலி (கேப்டன்), ஷிகார்தவான், முரளிவிஜய், புஜாரா, ரோகித்சர்மா, ரகானே, விர்த்திமான் சகா ஹர்பஜன்சிங், அஸ்வின், கரண்சர்மா, இஷாந்த்சர்மா, உமேஷ்யாதவ், வருண் ஆரோன், புவனேஸ்வர் குமார்.

டோனி (கேப்டன்), தவான், ரோகித்சர்மா, வீராட் கோலி, ரகானே, ரெய்னா, ஸ்டூவர்ட் பின்னி, அம்பதிராயுடு, அஸ்வின், அக்சர் பட்டேல், உமேஷ்யாதவ், மொகித்சர்மா, குல்கர்னி, புவனேஸ்வர்குமார்