செய்திகள்

ஒரு நாடு இரு தேசம் என்பது வெற்றுக்கோசமா? அர்த்தமுள்ள கோட்பாடா?

சதுர் வேதி 
Gajendrakumar-Ponnambalamஅண்மைய நாட்களில் தமிழ்மக்களது அரசியல் பெருவெளியில் ஒரு நாடு இரு தேசம் ‘“One County two nations” என்கின்ற கருத்தியல் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் “அர்த்தமுள்ள அரசியல் பரவலாக்கம்” என்ற நிலைப்பாட்டிற்கு மாற்றுநிலைப்பாடாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் “ஒரு நாடு இரு தேசம்” என்பதனை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். ஆயினும் அண்மைக்காலம் வரை இவ் அரசியல் நிலைப்பாடு பெருமளவிலான கருத்தியல் முக்கியத்துவத்தை பெற்றிருக்கவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் நிலவிய அகப்புறச் சூழ்நிலைகளும் அன்று நிலவிய ஒரு இறுக்கமான அரசியல் சூழ்நிலையும் இக்கருத்தியல் பற்றி மக்கள் முக்கியத்துப்படுத்தாதற்கான காரணமாக அமைந்திருந்தது எனலாம்.  தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான அரசியல் சூழ்நிலைகளும் ஒப்பீட்டளவிலான கருத்துநிலைச் சுதந்திரமும் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் தொடர்பில் இதுபோன்ற பல்வேறு கலந்துரையாடல்களையும் கருத்துருவாக்கங்களையும் மேற்கொள்ளக்கூடிய ஓர் சூழ்நிலை உருப்பெற்று வருகிறது.
70d99a5981e49bd660ba1a8370d163a7_XLஇந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எமது பிரச்சினை ஒரு நாடு இரு தேசம் என்கின்ற அடிப்படையில் அணுகப்படவேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தார். முதலமைச்சரின் இக்கருத்தானது இவ்வெண்ணக்கரு தொடர்பிலான ஒரு பரந்த கவனத்தை ஈர்த்ததுடன் மையவிவாதப் பொருளாக பரிணமிக்கக்கூடிய முக்கியத்துவத்தை பெறஆரம்பித்தது. எவ்வாறெனினும் தமிழரசுக் கட்சியின் உயர்தலைமைபீடத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறான ஓர் கருத்துநிலை தமிழ் மக்கள் மத்தியில் மீள்உருவாக்கம் பெறுவதை விரும்பாதபோக்கும் அது தமது அரசியல் நிலைப்பாடான “அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம்” என்பதை பாதிக்கும் என அர்த்தம்கொள்கின்ற போக்கும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. இதன் ஓர் அங்கமாக திருகோணமலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழரசுக் கட்சியினர் ஒரு நாடு இரு தேசம் என்பது ஓர் வெற்றுக்கோசம் என சாடியதுடன் அது நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று என விமர்சித்திருந்தனர்.
2b-chelva-hustingsஒரு நாடு இரு தேசம் என்பது இன்று நேற்று உருவான கருத்தியல் அல்ல. தமிழரசுக் கட்சியினரது தோற்றத்திற்கு வழிவகுத்ததே இக் கருத்தியல்தான். 1949ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 18ஆந் திகதி மருதானையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் முதலாவது கூட்டத்திற்கு தலைமைவகித்து உரையாற்றிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் ஒரு நாடு இரு தேசம் என்ற கருத்தியலை முன்வைத்தே உரையினை நிகழ்த்தினார். அதில் இலங்கை ஏன் இருதேசத்தின் ஒருங்கிணைப்பாக கருதப்படவேண்டும் என்பதனையும், தமிழ்பேசும் மக்கள் ஏன் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதையும் காரணங்களோடு தெளிவாகக் கூறியிருந்தார். தந்தை செல்வாவின் இழப்பிற்குப் பின்னர் தமிழரசுக் கட்சியை வழிநடத்திய அமிர்தலிங்கம் அவர்கள்  1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்புச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் கொண்டு வரமுற்பட்ட வேளையில் பாராளுமன்றத்தில் ஒரு பிரசித்திவாய்ந்த உரையினை நிகழ்த்தியிருந்தார். அதில் கூட ஏன் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்பது பற்றி நீண்டதொரு விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து வந்த விடுதலைப் புலிகளின் காலத்தில் கூட ஒரு நாடு இரு தேசம் மற்றும் உள்ளக சுயநிர்ணயம் போன்ற கருத்தியலை முன்வைத்திருந்தனர்.  தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தமது அரசியல் நிலைப்பாடாக ஒரு நாடு இரு தேசம் என்பதனை முன்வைத்து வருகின்றனர். ஆக தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்துநிலை அண்மையில் உருவானதொன்றல்ல. இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான தமிழ் அரசியல் வெளியில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்த ஒரு கருத்திடல் ஆகும். எனவே இதனை ஒரு வெற்றுக்கோசம் என ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. குறிப்பாக தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்து நிலை உருவாக்கத்தை முதலில் செய்தவர்களே அவர்கள் தான். எனவே அவர்கள் இதனை ஒரு வெற்றுக்கோசம் என இலகுவில் மறுதலித்துவிடமுடியாது. அப்படி அவர்கள் செய்வார்களாயின் தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் தமிழரசுக்கட்சியின் ஏனைய சிரேஷ்ட தலைவர்களும் அன்று செய்தது வெற்றுக்கோசம் என்றாகிவிடும்.
tamil-eelam-map-212x300இந்நிலையில் உங்களிடம் இயல்பான கேள்வி ஒன்று எழலாம். தேசம் என்பதையும் நாடு என்பதையும் ஒரே அர்த்தத்துடன் அன்றாடம் பயன்படுத்தி வரும் நிலையில் இவை இரண்டிற்குமிடையிலான கருத்துநிலை வேறுபாடு என்ன? என்பதே அதுவாகும். தேசம் என்ற வார்த்தையும் நாடு என்கின்ற வார்த்தையும் மாறிமாறி பயன்படுத்தி வந்தாலும் இவை இரண்டிற்கும் இடையில் கருத்தியல் வேறுபாடு உள்ளது. ஒருநாடு என்பது சர்வதேச எல்லைகளைக்கொண்ட சட்டரீதியான ஓர் புவியியல் நிலப்பரப்பு எனலாம். இவை மற்றைய நாடுகளுடனான சர்வதேச உறவுகளையும் ஏற்றுமதி இறக்குமதிகளைக் கொண்ட சர்வதேச வர்த்தகங்களையும் கொண்டிருக்கும் சட்டரீதியான அங்கீகாரம் பெற்ற ஒன்றாகும். உலகில் ஏறத்தாழ 190 நாடுகள் காணப்படுகின்றன.
தேசம் என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் காணப்பட்டாலும் கூட பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணத்தின்படி ஒரு இனம் தனக்கென தனியான மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வேறுபடுத்திக்காட்டக்கூடிய தனியான வரலாறு என்பவற்றைக் கொண்டிருப்பதுடன் குறித்த ஓர் நிலப்பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருவார்கள் ஆயின் அவர்களை தேசம் (Nation) என அங்கீகரிக்க முடியும். இங்குள்ள மயக்க நிலை என்னவென்றால் “தேசம்” (Nation) என்பதை தனிநாடு என பலர் தவறாக அர்த்தப்படுத்திக்கொள்வதுண்டு, தேசம் என்பது தனிநாடல்ல. தேசம் என்பது மேற்கூறப்பட்ட பண்புகளைக் கொண்ட ஓர் தேசிய இனத்திற்கான அரசியல் அங்கீகாரம் மட்டுமே.
courtsதேசம் என்கின்ற அரசியல் அங்கீகாரத்துக்கான முக்கியத்துவம் என்ன? ஏன் இந்த அரசியல் அங்கீகாரம் வேண்டும்? எனக் கேட்டால் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்ட இனம் தனது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். ஆக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்கள் ஓர் தேசமாக அங்கீகரிக்கப்படவேண்டும். அவ்வாறான அங்கீகாரம் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுத்தருவதற்கான அடிப்படையாக அமையும். மாறாக இலங்கை என்கின்ற ஓர் நாட்டுக்குள் தமிழ் மக்கள் வெறும் சிறுபான்மையினர் மாத்திரமே என்பதை ஏற்றுக்கொண்டு 13வது திருத்தச்சட்டம் போன்றதோர் அதிகாரப்பரவலாக்கத்தைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் தமிழர்களுக்கு தேசம் என்கின்ற அங்கீகாரம் தேவையில்லை. “அர்த்தம் உள்ள அதிகாரப் பரவலாக்கம்” என்கின்ற நிலைப்பாடே போதுமானதாகும்.
ஆக நாம் எங்கே சென்றடையப்போகிறோம் அல்லது தமிழ்மக்களுக்கு எத்தகைய தீர்வு அவசியமானது என்பதை அடைப்படையாகக் கொண்டே “ஒரு நாடு இரு தேசம்”| என்பது வெற்றுக் கோசமா? அல்லது அர்த்தமுள்ள கோட்பாடா என்பதைத் தீர்மானிக்குக.