செய்திகள்

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்திரை பதித்த முஸ்தாபிஜூர் ரஹ்மான்

வங்காளதேச கிரிக்கெட்டின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ள இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான், இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆனார். அறிமுக போட்டியிலேயே அவர் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். அத்துடன் அந்த ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் குறுக்கிட்டு ரன் எடுக்க ஓடிய ரோகித் சர்மா, டோனி ஆகியோருடன் மோதிய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்திலும் முத்திரை பதித்த முஸ்தாபிஜூர் ரஹ்மான், இந்திய கேப்டன் டோனி, ரெய்னா உள்பட முன்னணி வீரர்களை கபளீகரம் செய்து, இந்திய அணியின் ரன்வேகத்தை தடம் புரள வைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 10 ஓவர்களில் 43 ரன் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் தனது முதல் இரு போட்டியிலேயே தலா 5 விக்கெட் அதற்கு மேல் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு ஜிம்பாப்வேயின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, 2011-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 30-5, 20-5 என்று விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
என்றாலும் தனது முதல் இரு ஆட்டங்களில் ஒரு வீரர் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்திருப்பது ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். 19 வயதான முஸ்தாபிஜூர் ரஹ்மான், சதிரா என்ற கிராமத்தில் இருந்து கிரிக்கெட் உலகத்திற்கு வந்தவர். ஜிம்பாப்வேயின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹீத் ஸ்டீரிக் வங்காளதேசத்தின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்கிறார். முஸ்தாபிஜூர் ரஹ்மானின் வியப்புக்குரிய பந்து வீச்சுக்கு அவருடைய ஆலோசனைகளும் முக்கிய காரணமாகும்