செய்திகள்

ஒரு நோ பால் போட்டதால் வில்லனாகி விடமாட்டேன்: அஸ்வின் பேட்டி

மும்பையில் சென்ற வாரம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ்  அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவைத் தோற்கடித்தது.

இந்திய வீரர்கள் அஸ்வின், பாண்டியா ஆகியோர் வீசிய நோ-பால்களினால் ஆட்டமிழப்பதிலிருந்து இருமுறை தப்பிய சிம்மன்ஸ் 51 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
அஸ்வின், பாண்டியா ஆகியோர் வீசிய நோ-பால், பனி ஆகியவற்றாலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றோம் என இந்திய கேப்டன் டோனி தெரிவித்தார்.

இந்நிலையில் 9-வது ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்காக அஸ்வின் விளையாடுகிறார். நாளை மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் “மும்பை போட்டிக்குப் பிறகு அடுத்த 3 நாள்களுக்கு நான் ஒரு செய்தித்தாளையும் படிக்கவில்லை. நான் நோ பால் வீசி நீண்ட நாளாகிவிட்டது என்று விவரம் அறிந்த நல்ல செய்தியாளர்களுக்கு தெரியும். எனவே, ஒரு நோ பால் வீசியதால் நான் வில்லனாகிவிடமாட்டேன். அப்படியும் என்னை வில்லனாகப் பார்த்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை.

பனிப்பொழிவின் போது நான் வீசவில்லை. பனிப்பொழிவில் பந்து எப்படி இருக்கும் என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. நான் வீசிய 12 பந்தில் நான் விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை உருவாக்கினேன். பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் எழுத வேண்டும், ஏனெனில் லட்சக்கணக்கானோர் நீங்கள் எழுதுவதைப் படித்து அதனை வைத்து தங்கள் கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்தார்.