செய்திகள்

ஓரு விக்கெட் கைவசமிருக்கையில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி-

2015 உலக கிண்ண போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இவ்வாறனதொரு போட்டியைத்தான். இரு முக்கிய அணிகள் மத்தியில் இடம்பெற்ற சமமான பலப்பரீட்சை. உலககிண்ணப்போட்டிகளை நடத்தும் இரு அணிகள் இரசிகர்கள் கூட்டத்தின் முன் பரபரப்பான கிரிக்கெட்டை விளையாடினர்.
அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று பந்துவீச்சாளர்களை வைத்துகொண்டு எந்த அணியும் அவர்களை ஆட்டமிழக்கச்செய்ததில்லை.இன்றைய போடடியில் கிட்டத்தட்ட அது நடைபெற்றது . நியுசிலாந்து அணிதலைவர் சௌத்தீ, வெட்டோரி, போல்ட் ஆகியோரை மாத்திரம் பயன்படுத்தினார்.27 ஓவர்களுக்கு பின்னர் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையே நான்காவது பந்து வீச்சாளரை பயன்படுத்தினார்.

அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடிய வேளை சௌத்தீ ஆக்ரோசமாக பந்துவீசினார்- சிலவேளைகளில் கட்டுப்பாடின்றி,வெட்டோரி ஓரு வித அமைதியை வழங்கினார். போல்ட் அவுஸ்திரேலிய அணியின் மத்தியவரிசை மற்றும் பின்வரிசை வீரர்களை இலகுவாக வெளியேற்றினார். அவுஸ்திரேலியா 32 ஓவரில் 151 ஓட்டங்களுக்கு சுருண்டது. வெலிங்டனில் இங்கிலாந்தை 32 ஓவர்களில் ஆட்டமிழக்கச்செய்த பின்னர் ஆடியதுபோன்று மக்கலம் துடுப்பெடுத்தாடினார்.ஜோன்சனின் பந்தினால் கையில் தாக்கப்பட்ட நிலையிலும் சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடித்தார். 24 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டமிழந்து வெளியேறினார். அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அவ்வளவு இலகுவில் வெற்றிபெற முடியாது என்பதை ஸ்டார்க் பின்னர் நிரூபித்தார்.ரொஸ்டெய்லர் மற்றும் எலியட்டை ஓட்டங்கள் பெறாமலே வெளியேற்றினார். நியுசிலாந்து அணிக்கு அந்த தருணத்தில் பதட்டமில்லாமல் நிலைமையை எதிகொள்ள ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு மிகவும் பொருத்தமான வில்லியம்சன் ஆடுகளத்திலிருந்தார்.அவர் இல்லாவிட்டால் நியுசிலாந்து அணி நிச்சயம் தோல்வியை தழுவியிருக்கும் அவர் ஆன்டர்சனுடன் இணைந்து 52 ஓட்டங்களை பெற்றார். நியுசிலாந்து அணி வெல்வதற்கு 21 ஓட்டஙகள் இருந்தவேளை அன்டர்சனை இழந்தது. கேன் வில்லியம்சனின் நிதானம் இன்னமும் கடுமையாக அவுஸ்திரேலிய அணியினால் பரிசோதிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஓவர்களில் நியுசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்தது,வெற்றி பெறுவதற்கு ஏழு ஓட்டங்கள் அவசியம் ஆனால் 3 விக்கெட்கள் மாத்திரம் கைவசமிருந்தது. அதன் பின்னர் வில்லியம்சன் ஓரேயொரு தவறை செய்தார், ஓரு ஓட்டம் பெற்றதுதான் அந்த தவறு அடுத்த இரு அற்புதமான யோர்க்கர்களில் ஸ்டார்க் இரு வீரர்களை வெளியேற்றினார். அடுத்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் ஓன்றினை அடித்து வில்லியம்சன் பரபரப்பான வெற்றியை அணிக்கு பெற்றுக்கொடுத்தார்