செய்திகள்

“ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடத் தடை: உயர் நீதிமன்றம்

“ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவதற்கு 13 நிறுவனங்கள் உள்பட 14 பேருக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் பங்குதாரரும் இயக்குநருமான மணிரத்னம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எங்கள் நிறுவனம் “ஓ காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தை தயாரித்து கடந்த 17-ஆம் தேதி வெளியிட்டது. எங்களது படத்தை அடையாளம் தெரியாத நபர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இணையயதளத்தில் எங்களது படத்தை சிலர் வெளியிட்டதால். அதிலிருந்து பதிவிறக்கம் செய்து படத்தைப் பார்க்கின்றனர். இதனால், எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இணையதள சேவை வழங்கும் கூகுள் பி.எஸ்.என்.எல்., ஏர்டெல், ஏர்செல் உள்பட 13 தனியார் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். அதன் மூலம் எங்களது படத்தை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்ய முடியாது. எனவே, “ஓ காதல் கண்மணி’ படத்தை இணையதளத்தில் வெளியிட இந்த 13 நிறுவனங்கள் உள்பட அசோக்குமார் என்பவருக்கும் தடை விதிக்க வேண்டும். அவரது யூ.ஆர்.எல். முகவரியை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அபுடுகுமார் ராஜரத்தினம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, “ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட தனியார் நிறுவனங்களுக்கும், அசோக்குமார் என்பவருக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.