செய்திகள்

கச்சதீவு திருவிழா: இலங்கை, இந்தியாவிலிருந்து 6 ஆயிரம் பேர் பங்கேற்பு

கச்சத்தீவில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் நடைபெற்ற புனித அந்தோணியார் தேவாலயத் திருவிழாவில் இந்தியா, இலங்கையைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கையிலிருந்து மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் இலங்கை நெடுந்தீவு பங்குத் தந்தை நேசநாயகம் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி பூஜைகளும், சிலுவை பாதை நிகழ்ச்சியும் நடைபெற்றன.
02
தொடர்ந்து புனித அந்தோணியார் உருவச் சிலை முன்பு பிரார்த்தனை நடைபெற்றது. இரவில் தேர் பவனி நடைபெற்றது.

திருவிழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம், யாழ்ப்பாணம் பகுதி இந்திய தூதரக துணை அதிகாரி ஏ. நடராஜன், இலங்கை கடற்படை துணை தளபதி ஆர்.ஆர். பெரைரா ஆகியோர் தேவாலயத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் திருப்பலி பூஜைகளும், பிரார்த்தனையும் நடைபெற்றன. காலை 8 மணியளவில் கொடியிறக்கம் நடைபெற்றது. இதையடுத்து இருநாட்டு மக்களும் தங்கள் நாட்டுக்கு படகுகளில் திரும்பிச் சென்றனர்.