செய்திகள்

கச்சாய் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை வழங்கினார் நீதிபதி இளஞ்செழியன்

செல்லையா பொன்னுராசா என்பவரை சாவகச்சேரி கச்சாய் பகுதியில் கொலைசெய்த குற்றச்சாட்டுக்காக யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியன் இன்று இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சிவபாலு கிருஸ்ணகுமார், சுந்தரலிங்கம் செந்தில்குமார் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சட்டத்தரணி திருமதி நளினி சுபாகரன் இந்த வழக்கில் அரச தரப்பு அரச தரப்பு சாட்சிகளை நெறிப்படுத்தினார்.

அரச தரப்பு சாட்சிகளான இறந்தவருடைய மனைவி நாகபூபதியும் இறந்தவருடைய மகன் கேதீஸ்வரனும், கொலையானது 5 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட்டது என்று கூறினர்.

கொட்டிலில் படுத்திருந்த அப்பாவைத் தாக்கிவிட்டு எதிரிகள் வீட்டு வாசலுக்கு வரும்போது முதலாவது எதிரியான கிருஸ்ணகுமாரின் கையில் கத்தியும் இரண்டாவது எதிரியாகிய செந்தில்குமாரின் கையில் பொல்லும் இருந்ததைத் தான் கண்டதாகவும், அவர்கள் தன்னைக் கண்டதும் ஓடிவிட்டதாகவும் இறந்தவரின் மகன் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார். .

சத்தம் கேட்டு தான் ஓடிச் சென்றபோது, கொட்டிலில் இருந்து கேட்டடி நோக்கி இந்த இரண்டு எதிரிகளும் ஓடியதைக் கண்டதாகவும் அவர்களில் ஒருவருடைய கையில் கம்பி போன்ற ஒரு பொருள் இருந்ததைக் கண்டதாகவும் இறந்தவரின் மனைவி நாகபூபதி சாட்சியமளித்தார்.

எதிரிகள் சார்பில் எவரும் சாட்சியம் அளிக்கவில்லை. அவர்களே குற்றவாளிக்கூண்டில் நின்று சாட்சியம் அளித்தனர்.