செய்திகள்

கடந்த ஆட்சியினர் திறைசேரியை காலியாகவே விட்டுச் சென்றுள்ளனர்: சந்திரிகா

யுத்தத்தை வெற்றி கொண்டு பாரிய அபிவிருத்தி பணிகளை மேற்கொண் டோம் என்று தம்பட்டமடித்த முன்னைய ஆட்சியாளர்கள் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் கடனை கொடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பெற்றப்பட்ட கடனை செலுத்த ஒரு ட்ரில்லியன் டொலரும் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு ஒரு ட்ரில்லியன் டொலர் என்ற அடிப்படையிலே இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் கடனை கொடுக்க வேண்டிய நிலைமை தற்போதைய அரசுக்கு நேர்ந்துள்ளதாக அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அரச இயந்திரம் முற்று முழுவதுமாக ஊழல் நிறைந்ததாக மாற்றப்பட்டதாக தெரிவித்த அவர், மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை மாற்ற வேண்டியுள்ளது என்றார்.

மார்ச் மாதம் மகளிர் தினத்தை கொண்டாடியதை முன்னிட்டு தாய் நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த படை வீரர்களின் தாய் மார்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்களை பாராட்டி கெளரவிக்கும் பொருட்டு ரணவிரு சேவா அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “விருமவ் பிரணாமய – 2015” என்ற நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள அபேகமவில் நேற்று இடம்பெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி திருமதி அனோமா பொன் சேகாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் உரையாற்றுகையில் :

கடந்த ஆட்சியினரால் அரசு இயந்திரம் முழுவதும் ஊழல் மற்றும் மோசடி மயமாக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு இயந்திரத்தை கீழ் மட்டத்தில் இருந்து சீர் செய்ய வேண்டிய சவாலுக்கு தற் போதைய அரசாங்கம் முகம் கொடுத்திருப் பதாக தெரிவித்த அவர் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை அரசாங்கம் முடிந்த வரை முன்னெடுக்கின்ற போதிலும் ஊழல் மோசடிகளில் ஊறிப்போனவர்களே அந்த பணிகளை மேற்கொள்பவர்களாக இருப்பதே பாரிய சிக்கலாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

“தாங்களே யுத்தத்தை வெற்றி கொண்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட ஆட்சியாளர்கள் கடந்த காலத் தில் இருந்தனர். யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த படையினர், அவர்களது பெற்றோர் மற்றும் உயர்த்தியாகம் செய்த தலைவர்கள் போன்றோரை மறந்துவிட்டு தாமே இதை செய்ததாக (யுத்த வெற்றியை) ஒருவர் கூறினார். ஆனால் படையினருக்கோ அவர்களது பெற்றோருக்கோ செய்யவிருந்த எத்தனையோ விடயங்களை கடந்த ஆட்சியினர் செய்திருக்கவில்லை.

எமது மக்கள் அச்சம், சந்தேகம் இன்றி சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் படையினர் உயிர்த்தியாகம் செய்தனர். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட போதிலும் பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்ட போதிலும் அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு கிடைத்ததா என்பது கேள்விக் குறியே. யுத்த முடிபில் பிரதிபலனை ஒரு குடும்பத்தினரும் அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அனுபவித்தார்களே தவிர மக்களுக்கு அவற்றை அனுபவிக்க வாய்ப்பளிக்கப் பட்டிருக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அந்த சுதந்திரம் மக்களுக்கு கிடைத்திருக்கவில்லை. பதிலாக சுதந்திரம் என்பது வீழ்ச்சியடையவே ஆரம்பித்திருந்து. ஒரு குடும்பத்தினரும் அவர்களை சுற்றியிருந்தவர்களும் தான் யுத்த நிறைவின் பிரதிபலனை முற்றுமுழுதாக அனுபவித்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்தால் ஒரு நாட்டில் பெருந்தொகை நிதி சேமிக்கப்படும். அப்படி பார்க்கும் போது திறைசேரியில் கோடி கணக்கு பணம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆட்சியினர் திறைசேரியை காலியாகவே விட்டுச் சென்றுள்ளனர். இந்த பணம் எங்கு சென்றது என்பது எமக்குத் தெரியும்.

அத்துடன் ஒரு ட்ரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. அதுமட்டு மல்லாது, நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு கட்டமைப்பு ஒப்பந்தகாரர்களுக்கு மேலும் ஒரு ட்ரில்லியன் (ஒரு இலட்சம் கோடி) டொலர் செலுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் தற்போதைய அரசாங்கம் தான் செலுத்த வேண்டியுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததும் முழு நாளும் தாங்கள் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட மீண்டும் ஆட்சிக்கு வரும் பேராசையில் சிலர் உயரிழந்த படையினரை விற்று பிழைக்கின்றனர்.

நான் தேர்தலில் தோல்வியடைந்ததில்லை. நான் 2 தடவைகள் பதவியில் இருந்ததன் பின்னர் மீண்டும் போட்டியிடுமாறு கேட்டனர். நான் நினைத்திருந்தால் சட்டத்தை மாற்றி அப்படி செய்திருக்க முடியும். ஆனால் நான் அப்படி செய்யமாட்டேன், வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.

இன்று மக்கள் புதிய ஆட்சியொன்றை ஏற்படுத்தியுள்ளனர். யுத்த வெற்றியின் பலனை தற்போது மக்களுக்கு கொடுக்க முடியும். ஆனால் அதை நிறைவேற்ற பல சவால்கள் இருக்கின்றன. ஏனெனில் கடந்த ஆட்சியினரால் அரச இயந்திரம் முழுவதும் ஊழல் மற்றும் மோசடி மயமாக்கப்பட்டுள்ளது. சிறியவர்களை திருட அனுமதித்தால் தான் பெரியவர்களும் பிரச்சினையின்றி திருட முடியும் என்பதனால் அனைவரும் மோசடியில் ஈடுபடுவதற்கு ஆனால் அதை தெரியாமல் செய்வதற்கும் கடந்த ஆட்சியில் இடமளிக்கப்பட்டிருந்தது. ஒரு 10 சதவீதத்தினர் மட்டும் அவ்வாறு மோசடியில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம்.

100 நாட்கள் வேலைத்திட்டத்தை தற்போதைய அரசாங்கம் முடிந்த வரை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் ஊழல் மோசடிகளில் ஊறிப் போனவர்களே அது தொடர்பான பணிகளை மேற்கொள்ளுகின்றனர். என்பதே இங்குள்ள பிரச்சினை. நாடு என்ற வகையில் செய்ய வேண்டிய சேவை களைக்கூட செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசு தவறிவிட்டது. பிரதேச சபை தொடக்கம் பாரளுமன்ற வரை சகல மட்டத்திலும் ஊழல், மோசடி நிறைந்து காணப்படுகிறது. முன்னைய ஆட்சியில் ஒட்டுமொத்த அரச இயந்திரமுமே ஊழல் நிறைந்ததாக மாற்றப்பட்டுள்ளது. இராஜதந்திர மட்டத்திலும் அந்த நிலைமை காணப்பட்டுள்ளது.

சிக்கிக் கொள்ளாமல் வேண்டிய திருட்டுத்தனங்களை செய்துகொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது. திறமையானவர்கள் ஓரந்தள்ளப்பட்டு தமக்கு தேவையான தகுதியற்றவர்கள் பதவியில் அமர்த்தப் பட்டுள்ளனர். கல்வித்துறை முற்றாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அரச இயந்திரம் மோசடி நிறைந்து காணப்பட் டது, சட்டத்துறை மதிக்கப்படாத அளவுக்கு தள்ளப்பட்டது என்றார்.

தாய் நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்த மேல் மாகாணத்தைச் சேர்ந்த படைவீரர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களின் மனைவிமார்கள் விசேட பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.