செய்திகள்

கடன் தொல்லையால் மனைவி பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தகப்பன் (படங்கள்)

இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு பிரதேசத்தில் கட்டுமான தொழில் ஒப்பந்ததாரர் ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாமல்லபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் குமரன். கட்டுமான தொழில் செய்து வரும் இவர், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பி கொடுக்க முடியாமல் சிக்கி தவித்து வந்திருக்கின்றார். கடன் தொல்லையால் ஏற்பட்ட மனஉளைச்சலால், குமரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரண்டு பூச்சி கொல்லி மருந்து போத்தல்களை வாங்கி கொண்டு, தன் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் ரயில்வே கடவைக்கு அருகே சென்றிருக்கிறார். விஷம் குடித்தும் மரணம் அடையாவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிய குமரன், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு விட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.

அதன்படி நேற்று மாலை 4.30 மணிக்கு அங்குள்ள ரயில்வே இரும்புப் பாதையில் தனது குடும்பத்தினருடன் ரயில் முன் பாய குமரன் காத்திருந்திருக்கிறார். அந்த நேரத்தில், விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி ஒரு ரயில் வந்துள்ளது. இதை பார்த்த குமரன், திடீரென தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ் (6), ஆகியோருடன் ரயில் முன் பாய்ந்திருக்கிறார்.

இதில், குமரனின் 6 வயது மகன் கணேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக பலத்த காயத்துடன் உயிர் தப்ப, மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே பொலிசார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

train

train1

train2

train3