செய்திகள்

கடமைகளை நேர்மையாக மேற்கொண்டுவரும் அதிகாரிகளை அச்சுறுத்தும் சம்பவம்: குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்

மட்டக்களப்பில் தமது கடமைகளை நேர்மையாக மேற்கொண்டுவரும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளரின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் நேர்மையான முறையில் கடமையாற்றும் அதிகாரிகளை இலக்குவைத்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டுவருவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக நாங்கள் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலத்தில் பலஅ ச்சுறுத்தல்கள் மத்தியில்கடமையாற்றிய அரச அதிகாரிகள் இன்று ஏற்பட்டுள்ள நல்லாட்சியின் கீழ் ஓரளவு சுதந்திரமாக தமது கடமையினை மேற்கொண்டுவரும் நிலையில் மீண்டும் அவர்களை அச்ச நிலைக்குள் கொண்டு செல்ல சிலர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மையில் நாவற்குடாவில் பொதுச்சுகாதார பரிசோதரின் வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன் இன்று மாநாகர ஆணையாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இவற்றினை நாங்கள் சாதாரண விடயங்களாக எடுத்துக்கொள்ளமுடியாது.கடந்த காலத்தில் பாதிப்பினை எதிர்கொண்ட சமூகம் என்ற அடிப்படையில் நேர்மையான அதிகாரிகளின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாகவுள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில்ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும்.அதற்கான நடவடிக்கையினை பொலிஸார் விரைவாக மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

n10