செய்திகள்

கடிவாளம் இப்போதும் மத்திய அரசிடம்தான்: வடக்கு முதலமைச்சர் குற்றஞ்சாட்டுகின்றார்

இப்பவும் மத்தியே எம்மை வழிநடத்திவருகிறது. நாங்கள் சேர்ந்தே செய்வோம் வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தை சட்டப்படி தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவே வெகுவிரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

மாந்தை கிழக்கு பாலிநகரில் புதன்கிழமை இடம்பெற்ற கடைத்தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது:-

“எமக்குத் தேவையான பணம் ஒரு தொகை என்று அதைத் தெரிவித்தால் குறைந்த தொகையே எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. எமக்குத் தேவையான ஆளணி ஒரு தொகை என்றால் குறைந்த தொகையே எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. இப்பவும் மத்தியே எம்மை வழிநடத்தி வருகின்றது. மத்தியையே எதற்கும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது.

ஒரேயொரு சிறு மாற்றம். முன்னர் மத்திக்கே எல்லாம் சொந்தம் நீங்கள் வெறும் கைப் பொம்மைகள் தான் என்று வெளிப்படையாகக் கூறினார்கள். இப்பொழுது நாங்கள் சேர்ந்தே செய்வோம், வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தைச் சட்டப்படி தம்வசமே வைத்திருக்கின்றனர்.

ஆகவே அரசியல் தீர்வொன்று வெகுவிரைவில் கொண்டு வரப்பட வேண்டும். எமக்கான அதிகாரங்கள் திடமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பொதுத் தேர்தல் ஒன்று வர இருப்பதால் இப்போதைக்கு எதையுமே உருப்படியாக எதிர் பார்க்க முடியாதுள்ளது. எமது அரசாங்கமானது வெளிப்படைத் தன்மையையே விரும்புகின்றது.

பொத்தி வைத்துப் பொத்தி வைத்துத் தமது தனிப்பட்ட நன்மைகளுக்காகப் பொதுப் பணங்களைப் பாவிப்பதையும் அதன் பொருட்டு உண்மையான உதவிகளை எதிர் நோக்கியிருப்பவர்களை உதாசீனஞ் செய்து தமது உற்றவர்களின் எதிர்பார்ப்புக்களை மட்டும் பூர்த்தி செய்வதையும் நாங்கள் கண்டிக்கின்றோம். அவ்வாறு எங்களுடைய அமைச்சர்களோ, திணைக்கள அலுவலர்களே, எமது அலுவலர்களோ செயற்பட முனைந்தால் அதனை எமக்குத் தெரியப்படுத்தத் தயங்காதீர்கள்.

நாம் வெளிப்படைத்தன்மையை விரும்புவது போல்தான் சட்டத்திற்கு அமைவாக உரிய செயல்முறைகளைப் பின்பற்ற உறுதி எடுத்துள்ளோம். பிழையான செயல்முறைகளில் கரவாக எமது அலுவலர்கள் ஈடுபட்டால் எமக்குத் தெரியப்படுத்துங்கள்; உரிய நடவடிக்கைகள் எடுப்போம். மக்கள் சேவை என்று வந்துவிட்டால் மக்களுக்காகவே நாங்கள் வாழத் தலைப்பட வேண்டும். உற்றார், உறவினர், உடன் இருப்பவர்களுக்கென்று எமது உத்தியோக பூர்வ அதிகாரங்களைப் பாவித்து சுய நன்மைகளைப் பெற விழையக் கூடாது.

என்னுடைய சிங்கள நண்பர் ஒருவர் இருந்தார். நாங்கள் இருவரும் ஒருமித்து சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள். அவர் 1977ஆம் ஆண்டில் ஒரு கனிஷ்ட மந்திரியாக நியமனம் பெற்றார். நான் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அமைச்சராக எதைச் செய்ய விரும்புகின்றாய் என்று கேட்டேன். சற்றும் பதட்டம் இல்லாமல் “ஏன்! என்னுடைய தேர்தலுக்கு நான் எவ்வளவு பணம் செலவழித்து வென்றேன் தெரியுமா? அவ்வளவு பணத்தையும் நான் திரும்ப உழைக்க வேண்டாமா? அந்தப் பணத்தை உழைப்பது தான் என்னுடைய முன்னுரிமை” என்றார் அவர்.

அவ்வாறு சொன்னவாறே சட்டமுறையற்ற பல விதங்களில் பணத்தைச் சேர்த்தார். தேவையான பணம், அதாவது அவர் தேர்தலுக்குச் செலவழித்த பணத்தைப் பெற்ற பின்னரும் மீண்டும் மீண்டும், மேலும் மேலும் பணத்தை உழைத்தார். முன்னைய ஜனாதிபதி ஒருவரின் சகோதரர் போலத்தான் அவரையும் 10% 15% என்றெல்லாம் அழைத்தார்கள் அந்தக் காலத்தில். ஈற்றில் நடந்தது என்ன? ஜே.வி.பி யினரால் அவர் கொல்லப்பட்டார் என்று சொல்லப்பட்டது.

மக்கள் சேவையாகத் தொடங்கி சுய தேவைகளைப் பூர்த்தி செய்யப்போய் ஈற்றில் மக்களின் வன்முறைக்கு அவர் ஆளாக நேரிட்டது. முன்னைய ஜனாதிபதி ஒருவரின் சகோதரருக்கும் இப்பொழுது நடந்திருக்குங் கதி என்ன என்று எமக்குத் தெரியும். எனவேதான் மக்கள் சேவை என்று மன்றுக்கு வருபவர்கள் சுயநலத்தை மறந்து விட வேண்டும். நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தேர்வுகளில் தகுதிக்கே முதலிடம் வழங்க வேண்டும். தமது சொந்த நன்மைகளும் ஊரார் நன்மைகளும் முரண்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுமேயானால் சுய இலாபத்தையும் நன்மையையும் புறக்கணிக்கும் மனோபக்குவம் எமக்கு வர வேண்டும். நாம் நடந்து கொள்ளும் விதத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து பொது வாழ்க்கையில் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக வாழும் அளவுக்குத் தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் வெளிக்கொண்டு வர வேண்டும்.

பொது வாழ்வு என்றால் பொது மக்களை முன் வைத்துப் பணம் சம்பாதிப்பது என்ற நிலை மாற வேண்டும். எமது வடமாகாணம் பண்பான நிர்வாக முறைமைக்குப் பெயர் போனதாக அமைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அதற்கேற்ற விதத்தில் எனது சகோதர சகோதரிகளான நீங்கள் யாவரும் நடந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன். எம்மால் முடிந்த உதவிகளை உங்களுக்கு நல்க நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் வடமாகாணத் தேர்தலில் எங்களை வெல்ல வைக்க நீங்கள் செய்த சேவை மகத்தானது. உங்கள் மக்களின் நல்வாழ்வுக்காக எம்மால் முடிந்ததைச் செய்வது எமது கடப்பாடு, கட்டாயம், கடமை என்று கூறி என்னை அழைத்தமைக்கு நன்றி கூறி அமர்கின்றேன். – என்றார். மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அ.தனிநாயகம் அவர்களின் தலமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ, வடமாகாணசபை உறுப்பினர் லிங்கநாதன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.