செய்திகள்

கடும் வெப்பம் காரணமாக நல்லூரில் உண்ணாவிரதிகளின் உடல் நிலை மோசம்

யாழ்.நல்லூரில் வலிகாமம் கிணற்று நீரைப்; பருகலாமா? கூடாதா?என 78 மணித்தியாலங்களுக்குள் உறுதிப்படுத்தும் வரையில் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள மாணவர்களின் உடல் நிலை தற்போது மோசமடைந்து வருவதாக டாக்டர்.தியாகராஜா சிறீதரன் தெரிவித்தார்.குறித்த மாணவர்களைப் பரிசோதனைக்குட்படுத்திய போதே இந்த விடயம் தெரியவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தூயநீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வலியுறுத்தி இன்று யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் அமைதிப் போராட்டம் இடம்பெற்றது. ‘நீருக்காகத் திரண்ட யாழ்ப்பாணம்;’எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கலந்து கொண்ட ஐந்து மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்தனர்.

இந்த நிலையிலேயே நீராகாரம் கூட அருந்தாது உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அவர்களின் உடல் நிலை தற்போது மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான வெப்பமான காலநிலை நிலவி வரும் சூழ்நிலையில் 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நீராகாரம் கூட அருந்தாமலிருந்தால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் ஏற்படாலாமென வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் உரிய தலைப்புக்கள் தலையிட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்காவிடில் மாணவர்களின் உடல்நிலை மிகவும் மோசமடையும் அபாயம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று இரவு உண்ணாவிரதிகளை சந்தித்த வட மாகாண முதல்வர் சி. வி விக்னேஸ்வரன் உண்ணாவிரதிகளை தமது போராட்டத்தை கைவிடுமாறும் 12 ஆம் திகதிவரை கால அவகாசம் தருமாறும் கோரியபோதிலும் அவர்கள் அதற்கு மறுத்து விட்டனர்.

யாழ்.நகர் நிருபர்-