செய்திகள்

கடைகளை உடைத்து திருடி வந்த முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது

களவாடிய தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளை உபயோகித்தவரை, அவரின் கைபேசி இலக்கத்தைக் கொண்டு சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்தது. இவரை மல்லாகம் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது –

மல்லாகம் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் ஒரு வருடத்துக்கு முன்னர் மயிலணி, இணுவில் பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கக் கிளைகளை உடைத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை களவாடியிருந்தார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

களவாடப்;பட்ட பொருட்களில் தொலைபேசிகளுக்கான மீள்நிரப்பு அட்டைகளும் காணப்பட்டதை அவதானித்த பொலிஸார், குறித்த நிறுவனத்திடம் கடைகளுக்கு வழங்கிய மீள்நிரப்பு அட்டைகளின் தொடர் இலக்கங்களைப் பெற்றிருந்தனர்.

களவாடிய நபர் குறித்த மீள் அட்டைகளைப் பயன்படுத்திய போது அவரின் இலக்கத்தை தொழில்நுட்பத்தின் உதவியுடன் பின் தொடர்ந்தனர்.

இதையறியாத சந்தேக நபர் தொடர்ச்சியாக மீள் நிரப்பு அட்டைகளைப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் 16 வருடங்களாக ஈ.பி.டி.பியின் உறுப்பினராக இருந்தவர் என்பதும் 2007 ஆம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து விலகியவர் என்றும் தெரிய வந்தது.