செய்திகள்

கட்சிகளின் செயலர்களுடன் ஆணையர் இன்று சந்திப்பு

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று சந்திக்கவுள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 13 வரை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பிலேயே இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹமட் தெரிவித்தார்.

இந்த வேட்புமனு கையளிக்கும் காலத்தில் கட்சிகள் எவ்வாறு செயற்பட வேண்டும், வேட்புமனு கையளிக்கும்போது யார் யார் சமுகமளிக்கவேண்டும் போன்ற விடயங்கள் குறித்து இன்றைய கலந்துரையாடலில் விளக்கமளிக்கப்படும்.

அதேநேரம் வேட்புமனுக்கள் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு வேட்புமனுக்கள் எவ்வாறு நிரப்பப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கட்சி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக் கவிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளைச் சந்தித்திருந்த தேர்தல்கள் ஆணையாளர், தேர்தல் தொடர்பான ஆரம்பகட்டப் பணிகள் குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.