செய்திகள்

கட்சித் தாவுபவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமில்லை : ஶ்ரீ.ல.சு.க , ஐ.தே.க தலைவர்களிடையே இணக்கப்பாடு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கிடையே கட்சித் தாவுபவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிலர் கட்சித் தாவவுள்ளதாகவும் இவர்களில் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து மற்றைய கட்சியிலிருந்து தமது கட்சிக்கு வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு இடமளிக்காத வகையில் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.