செய்திகள்

கட்சியில் தனது பிடியை இறுக்கும் மைத்திரி: மகிந்வின் பிடி தளர்கின்றது

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் தன்னுடைய பிடியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் பலப்படுத்திக் கொண்டுள்ள அதேவேளையில், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்கவுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலர் இறங்கியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும், அவர் அதில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளையில், கட்சியில் மைத்திரிபால சிறிசேனவின் பிடி இறுகிவருவதை அவதானிக்க முடிவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கட்சியின் போஷகர்களில் ஒருவராக மகிந்த ராஜபக்ஷ உள்ளபோதிலும், தேர்தல் இரவு இடம்பெற்றதாகக் கூறப்படும் இராணுவச் சதியில் அவர் சம்பந்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், அந்தப் பதவியை அவர் இழக்க வேண்டியிருக்கும் என மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இதன்மூலம் கட்சி உறுப்பினர் தகைமையையும் அவர் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் சொல்லப்படுகின்றது.

கட்சியின் தற்போதைய நிலையிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டால், சுதந்திரக்கட்சிக்குள் சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுப்பதாக அமையும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியிலிருந்து மகிந்தவை வெளியேற்றும் திட்டத்துடனேயே சந்திரிகாவின் ஆதரவாளர்கள் செயற்பட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளையில், அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவையும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் இணைக்கும் முயற்சியை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுடன் முன்னாள் பிரதமர்களான ரத்தனசிறி விக்கிரமநாயக்க, தி.மு.ஜயரத்ன ஆகியோரோடு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஒன்றிணைத்து ஐந்து பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க இவர்கள் முற்பட்டுள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க்கட்சிகள், ஜாதிக ஹெல உறுமய, மக்கள் விடுலை முன்னணி ஆகிய கட்சிகளை தம்முடன் ஒன்றிணைத்து ஜுன்மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் களமிறங்குவதற்கான பேச்சுக்களை இவர்கள் நடத்தியுள்ளனர்.