செய்திகள்

கட்டாய தமிழ் மொழி பாடம் – அரசு உத்தரவு

2015-2016 வரும் கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளிலும் 1–வது வகுப்பில் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இதற்கான புத்தகங்கள் தயாராகிவிட்டது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், 1–வது வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரையில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.  இந்த சட்டத்தின்படி வரும் கல்வி ஆண்டில் இருந்து 1–ம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வரும் கல்வியாண்டில், பல்வேறு வாரியங்களை சேர்ந்த அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக தமிழ் மொழி பாடம் கற்றலை 1–ம் வகுப்பில் நடைமுறைப்படுத்த வேண்டும். 1–ம் வகுப்பு தமிழ் பாட புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தின் சென்னை, மதுரை வட்டார அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளன.

தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தும், தமிழக அரசு தமிழ் கற்பிக்கப்படுதல் வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

” உலகத்தில் எந்த நாட்டிலும் தாய் மொழியில் பேசுவதை இழிவாக பார்ப்பதில்லை. அப்படி பார்க்கும் ஒரு சமூகம் தமிழ்ச் சமூகம் மட்டும்தான். ஜெர்மனியில். பிரான்சில், போலந்தில், ரஷ்யாவில்,  ஜப்பானில், சீனாவில் தாய்மொழிதான் பேசுகிறார்கள். படிக்கிறார்கள். அங்கு ஆங்கிலம் கிடையாது. இந்தியாவில்தான் அதிலும் குறிப்பாக தமிழகத்தில்தான் ஆங்கிலத்தில் படித்தால் உயர்வானது என்ற கற்பனை இருக்கிறது. நாடு முழுவதும் இந்த கற்பனை விஷவிதையாக தூவப்பட்டுள்ளது இது அகற்றப்பட வேண்டும்” என்று தமிழ் மொழி ஆதரவாளர்கள் கூறுகின்றார்கள்.