செய்திகள்

கட்டார் அமீர் இன்று இலங்கை வருகிறார்

கட்டார் நாட்டின் அமீர், ஷெய்க் தமீம் பின் ஹமட்-அல்-தானி இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார்.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை மாத்திரமே இலங்கையில் தங்கியிருக்கும் இவர் மூன்று ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் செய்தி பரிமாற்றம் ஆகியன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுமென தெரிய வருகிறது.

இலங்கையில் தங்கியிருக்கும் சில மணித்தியாலங்களில் கட்டார் அமீர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் அவரும் அவரது பிரதிநிதிகளும் அரசாங்க தரப்பினருடன் இருதரப்பு சந்திப்புக்களிலும் பங்குபற்றவுள்ளனர்.

கட்டார் அமீரின் இலங்கை விஜயத்தை கெளரவிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12.45 மணியளவில் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்புக்கு இணங்க இலங்கை – கட்டார் ஆகிய நாடுகளின் நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.