செய்திகள்

கட்டுநாயக்க உட்பட விமான நிலையங்களிலிருந்து வான் படையினரை வெளியேற்றத் திட்டம்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களிலிருந்து விமானப்படையை வெளியேற்றப்போவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் 14 விமான நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலிருந்தும் விமானப்படை வெளியேற்றப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.

விமானப் படைக்காக அதிகளவு நிலப்பரப்பு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அமைச்சர், விமான நிலையங்களின் அபிவிருத்திக்கு இது பெரும் தடையாக இருப்பதாகவும் அமைச்சில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் ஒன்றில் அமைச்சர் குறிப்பிட்டார்.

விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் இந்த நிலங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும், விமானப்படை மற்றும் கடற்படைத் தளபதிகளுடனும் விரைவில் ஆராயப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்

தேசிய பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தாத வகையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

பலாலி, வவுனியா, சீனன்குடா, அனுராதபுர, ஹிங்குராங்கொட, மட்டக்களப்பு, அம்பாறை, கட்டுநாயக்கா, இரத்மலானை, கொக்கலை, வீரவிலை, சிகிரியா ஆகிய பகுதிகளிலுள்ள விமான நிலையங்களிலிருந்து விமானப் படையை வெளியேற்றுவது தொடர்பாக முதலில் ஆராயப்படவிருக்கின்றது.

இதன் மூலம் உல்லாசப்பயணிகள் இந்த விமான நிலையங்களை அதிகளவுக்குப் பயன்படுத்துவதை ஊக்கிவிக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூட்டிக்காட்டியுள்ளனர்.  இது தொடர்பில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.