செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பெருமளவில் அதிகரிப்பு

பிரசல்ஸ் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து கட்டுநாயக்கவிலுள்ள  இலங்கை சர்வதேச விமான நிலையத்திற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகசிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பிரசல்ஸ் தாக்குதலின் பின்னர் பல்வேறு நாடுகள் தமது விமானப் போக்குவரத்து சேவையின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையும் பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளதாக  சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் ஜெயரட்ன தெரிவித்தார்.

பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் 30 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன் இத்தாக்குதலையடுத்து முழு ஐரோப்பிய நாடுகளும் தமது பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளன.

ஐரோப்பிய நாடுகளை போன்று இலங்கையும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பினை  பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு தொடர்பிலான விபரங்களை தெளிவாக விபரிக்க முடியாத போதும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாட்டால் பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது.

அனைத்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் விமான நிலைய பாதுகாப்பு சம்பந்தமாக வெவ்வேறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முதல் விமான நிலையத்திற்கு மேலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 பயணிகளின் அனைத்து பயணப் பொதிகளும் பல இடங்களில் பரிசோதனைக்குட்படுத்தப்படும். இதன்மூலம் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் பயணிகள்  தொடர்பில் தாம்  மனம் வருந்துவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

n10