Search
Wednesday 15 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஒடியல் கூழ்

ஒடியல் கூழ்

ஒடியல் கூழ் யாழ்ப்பாணப் பண்பாட்டோடு ஊறிப்போன ஒன்று.

கிடுகினால் கட்டிய வேலிகள், பனைமரங்கள், கள்ளுத் தவறனை, விதானையார், சங்கக் கடை,மீன் சந்தை,வாசிக சாலை, கோயில்கள், ரியூஷன், பிரயாசையான விவசாயம், நல்லெண்ணை, கட்டுப்பாடு, கல்வி, சிக்கனம், ஒருவித தீவிரப் போக்கு போன்றன எப்படி யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தைத் தீர்மானிக்கிறதோ அதே மாதிரி கூழ்க்கும் அதன் பண்பாட்டில் ஓரிடம் உண்டு.

“……..
வண்ணப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக் கொண்டு
அண்ணை அகப்பையில் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்பமே
….”

என்று அதற்கு ஓர் இலக்கிய அந்தஸ்து தந்து போனவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

அண்மையில் ஒடியல் கூழ் என்றொரு கதையை தினக்குரலில் வாசிக்கக் கிடைத்தது.அதனை இலங்கையின் ஜனரஞ்சக எழுத்துக்களுக்குப் பெயர் போன செங்கை ஆழியான் எழுதியிருந்தார்.அவரது கதைகளிலும் சரி நாவல்களிலும் சரி மண்வாசம் அதன் சகல தத்துவார்த்தங்களோடும் தார்ப்பரியங்களோடும் உயிர்துடிப்போடும் வெளிவரும்.(13 ஞாயிறு, மாசி 2011 ,தினக்குரல்)ஆச்சி கூழ் காச்சும் பக்குவம் அதில் கீழ் வருமாறு விளக்கப் பட்டிருந்தது.

”……ஞாயிறு வந்தால் போதும். ஆச்சி கூழ் காச்சுவதற்கான ஆயத்தங்களில் இறங்கி விடுவாள்.வழக்கமாகக் கூழ் காச்சும் குண்டான் பானை கழுவித் துப்பரவாக்கி அடுக்களைக்குள் வந்து விடும்.அப்பு தவறாது கூழுக்குத் தேவையானவற்றை பெரிய உமலில் வாங்கி வருவார்.அதற்குள் மரவள்ளிக் கிழங்கு,பயிற்றங்காய்,பலாக்கொட்டை,நண்டு, வெட்டித் துப்பரவாக்கிய பாரை மீன் தலைப்பகுதியுடன்,கனிசமான அளவு றால்,ஒரு திரிக்கைத் துண்டுக் கீறல்,என்பன பிதானமாக இருக்கும்.ஆச்சிக்கு றால் அதிகமாகக் கூழில் இருக்க வேண்டும்.திரிக்கை மீன் பட்டும் படாமலும் இருக்க வேண்டும்.

குண்டானைக் கால் படி அரிசியுடன் நீரை வார்த்து அடுப்பில் அவிய விட்டு விட்டு ஆச்சி மற்ற வேலைகளைக் கவனிப்பாள்.அவளின் முன் சில சட்டிகள் பரப்பப் பட்டிருக்கும்.ஒரு ஏதனத்தில் காய்கறிகள்,மரவள்ளிக் கிழங்கு, பலாக்கொட்டை,பயிற்றங்காய் என்பன இருக்கும்.இன்னொரு சட்டியில் ஓடு களற்றித் துப்பரவு செய்யப்பட்ட நண்டுத் துண்டுகள்,மீன் துண்டுகள், திரிக்கைத் துண்டுகள் என்பன இருக்கும்.இன்னொரு சட்டியில் கரைத்த புளி,கரைத்த ஒடியல் மா பாணி தயாராகக் காத்திருக்கும்.இன்னொரு ஏதனத்தில் மிளகாய் திரணை (கூட்டு) இருக்கும்.

கூழ் குடிக்கும் பலா இலைஅரிசி வெந்ததும் ஆச்சி மரக்கறிகளைக் குண்டானின் இடுவாள்.பின்னர் அசைவங்கள்,மிளகாய்க் கூட்டு,உப்பு விட்டு விட்டு பரவலாக ஒடியல் பாணி,விட்டுக் கொதிக்க வைப்பாள்.அது அடுப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் போது பேரன் முற்றத்துப் பலாவில் இலைகளைப் பொறுக்கி வைத்திருப்பான்.பாலா இலைகளில் தான் கூழைக் குடிக்க வேண்டும்.பலா இலையின் பால் சூட்டில் அவிந்தால் தான் கூழ் சுவைக்கும் என்பது ஆச்சியின் நம்பிக்கை……”

விடுமுறை நாள் ஒன்றில் ஏற்கனவே சம்பந்தப் பட்டவர்களுக்கு அறிவித்தபடி கூழ் காச்சும் படலம் நிகழ்வது யாழ்ப்பாணத்து வழக்கம்.எல்லோருமாகக் கூடி இருந்து குடிப்பது தான் அதில் இருக்கின்ற விஷேஷம்.சுவையும் உறவும் நட்பும் ஒன்று கலக்கும் இடம் அது.அக்கம் பக்கம், நண்பர் கூட்டம் எல்லோருமாகக் குந்தியிருந்து பலாவிலையில் கோலிக் குடிப்பது மகா விஷேஷம்.

இப்போதும் அவ்வாறெல்லாம் நடக்கிறதா அல்லது போருக்கு முன்பான சந்ததியோடு அவை எல்லாம் வழக்கொழிந்து போய் விட்டதா என்று தெரியவில்லை.

‘ஈழத்து முற்றத்தில்’   வெளியான கட்டுரை. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *