செய்திகள்

கேள்விக்குறியாகும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அரசியல் எதிர் காலம்

தமிழ் தேசிய போராட்டத்தில் காலத்துக்கு காலம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.அவற்றினால் தமிழ் மக்களுக்கான அரசியல் நடைமுறைகள் நன்மை பயக்கும் வகையில் அமைந்ததான எந்தவித தடயங்களும் இல்லை.காலத்துக்கு காலம் ஏமாற்றங்களையும் அழிவுகளையுமே தமிழ் மக்கள் அனுபவித்துவந்தனர்.

இந்த போராட்டங்களினால் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்ட மாகாணமாக கிழக்கு மாகாணம் இருந்துவந்ததை யாரும் மறுக்கமுடியாது. வடக்குடன் கிழக்கு மாகாணத்தினை இணைத்துப் பார்க்கும் பார்வையானது அரசியல் தீர்வுக்கு அப்பால் பார்க்கப்படவில்லையென்பதே யாதார்த்தமானதாக இருக்கின்றது.

வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் கிழக்கு மாகாணத்தின் நிலைமைகளுடன் வேறுபட்டு உள்ளது.இந்த கண்ணோட்டத்துடன் நாங்கள் பார்க்கத்தவறியதன் காரணமாகவே இன்று கிழக்கு மாகாணத்தில் பாரிய சவால்கள் தோன்றியுள்ளது.

வடகிழக்கு இணைந்த மாகாணமாக நாங்கள் பார்க்கும் நிலையில் தான் நாங்கள் உண்மையான சமாதானத்தினை காணமுடியும் என்பது எனது வாதமாகும்.இருந்தாலும் தற்போது கிழக்கு மாகாணம் பிரிந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களின் நிலைமையினை வீழ்ச்சியடையச்செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை நாங்கள் முறியடிக்க என்ன செய்துள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.

eastern2கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் கடந்த 30வருட அகிம்சை போராட்டமாக இருக்கலாம்,35வருட ஆயுதப்போராட்டமாக இருக்கலாம் வடக்கினை விட அதிகளவு அழிவுகளையும் நெருக்குவாரங்களையும் சந்தித்த மாகாணமாகவுள்ளது.

வடக்கில் இலங்கை அரசாங்கத்தினது வழிகளில் பல்வேறு தாக்கங்கள் இருந்தாலும் கிழக்கு மாகாணத்தில் சிங்கள அரசாங்கம் உட்பட முஸ்லிம் இனவாதக்குழுக்களினாலும் பல்வேறு தாக்கங்கள் காணப்படுகின்றன. இன்று மீட்சிபெறமுடியாமல்,யாரும் கைகொடுக்காத மாகாணமாகவும் கைவிடப்பட்டதாக தமிழ் மக்கள் உணரும் மாகாணமாகவும் கிழக்கு மாகாணம் இருப்பதை யாதார்த்தபூர்வமாக நாங்கள் காணக்கூடியதாகவுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின்போது பாரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். அதன் காரணமாக ஒன்றுதிரண்டு புதிய ஆட்சிக்காக வாக்களித்தனர். ஆனால் இன்று தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தமிழ் மக்கள் உணரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் அரசியல் சாணக்கியம் இல்லாததே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அரசியல் சாணக்கியமற்ற நகர்வுகள் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் காலூன்ற நினைக்கும் அரசியல் ஒட்டுண்ணிகளுக்கு சந்தர்ப்பத்தினை வழங்குவதாக அமையலாம்.

P1020073-e1425925811667கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுத்த சம்பவமானது கிழக்கு வாழ் தமிழ் மக்களால் ஜீரணிக்கமுடியாத ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்குரிய சந்தர்ப்பம் இருந்த நிலையில் அதனை கைவிட்டு மீண்டும் கிழக்கு தமிழ் மக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடுகளை அது மேற்கொண்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சில பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தபோதிலும் அவற்றினை புறந்தள்ளி முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதில் என்ன அரசியல் சாணக்கியம் உள்ளது என்பது வாதமாகவுள்ளது.

Sampanthan-Wigneswaran-531x300நாங்கள் வடகிழக்கு இணைந்த தாயக கோட்பாட்டைக் கொண்டுள்ளோம். கிழக்கினை தனித்து ஆட்சி அமைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கம் அல்ல. அவ்வாறானால் ஒரு தற்காலிக ஏற்பாட்டையாவது செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்து தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிப்பதற்கு முன்வராதமை புரியாத புதிராக உள்ளது.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அமைச்சர்கள்,முதலமைச்சர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் நாங்கள். அவ்வாறான நிலையில் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தினை அவர்களுக்கு வழங்கி அதே பார்வையாளர்களாக இருக்கும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளதாகவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு நிகழும் அநியாயங்களை தடுத்து நிறுத்தவும் தட்டிக்கேட்கவுமே அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அண்மைக்காலமாக கூறிவருகின்றனர். அப்படியானால் மத்திய அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தடுத்து நிறுத்தவும் தட்டிக்கேட்கவும் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரங்களை பெறவில்லை.

Champoor_16_11_2013_18_105502_445அரசியல் சாணக்கியம் வெறுமனே கதிரையை மட்டும் நோக்காகக்கொண்டுவருமானால் அவற்றினால் தமிழ் மக்கள் எந்தவித நன்மையினையும் அடையப்போவதில்லை. அறிக்கைகளினாலும் வீரவசனங்களினாலும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் அது வடக்குடன் இணையும் வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துவமான அரசியல்பாதையினை வகுத்து அதற்கு ஏற்றாற்போல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அங்கு மாற்றங்களையோ தமிழ் மக்கள் மத்தியில் விழிப்பு நிலையினையோ கொண்டுவரமுடியும்.

எதிர்வரும் காலம் தேர்தல் காலம் என்றபடியினால் அதனை எந்தளவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்த்திச்செல்லும் என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே இருந்துவருகின்றது.

(மட்டு.மைந்தன்)