Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

போதி மரங்களில் இரத்தப் பூக்கள் (ஈழப்போரின் குரலற்றவளின் சாட்சியங்கள்) 

போதி மரங்களில் இரத்தப் பூக்கள் (ஈழப்போரின் குரலற்றவளின் சாட்சியங்கள்) 

திரு . சுப்ரமணியம் ஜெயச்சந்திரன்

மாக்சிய இலக்கியக் கோட்பாடு கலை என்பது சமூக கோட்பாடெனக் குறிப்பிடுகின்றது.கலைகளில் கவிதை முதன்மையானது. இலக்கியம் என்பது உலகம் பற்றிய நடைமுறை அளவிலான,கலாச்சார அளவிலான அறிதலாகும். மனித சமூகத்தின் கலையுணர்வு வரலாற்றளவில் கவிஞரிடம் வந்து சேரும் உணர்வாகும். வரலாற்றுப் போக்கில் மனிதன் தன்னை உருவாக்கிக் கொள்கிறான் இயற்கையை மாற்றி அமைப்பதன் மூலம் அத்தகையதை மானிடப் பண்பாக்குகிறான். இலக்கியத்தில்,கவிதையில் இயற்கை யதார்த்தம் சமூக யதார்த்தம் என இருவேறு நிலைகள் உள்ளன கவிதை என்பது யதார்த்தத்தை மனிதன் அறிந்து கொள்ள உதவும் ஒரு வகையாகும் கவிதை என்பது யதார்த்தத்தின் அழகியல் பிரதிபலிப்பு எனவும் குறிப்பிடலாம்

லெனின் அவர்கள் குறிப்பிடுவது போல ஒரு பிரதிபலிப்பு பிரதிபலிக்கப்படும் பொருள் உண்மை நகலாக அல்லது சற்றேறக்குறைய நகலாக இருக்கலாம் ஆனால் பிரதிபலிப்பும் பிரதிபலிக்கப்படும் பொருளும் ஒன்றாகவே இருக்கும் எனச் சொல்வது அபத்தமாகும் எனக் கூறுகிறார் லெனின். இங்கு தமிழ் உதயாவின் கவிதைகளிலும் இக்கூற்று உண்மை எனக் கண்டு கொள்ளலாம்.அதாவது சமூக யதார்த்தத்தின் பிரதிபலிப்பு உயிரோட்டம் உள்ளதாகக் காணப்படுகிறது புறநிலை யதார்த்தம் மிகக் குறைவாகவே பேசப்பட்டுள்ளது இக்கவிதைகளில்

அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன் “அறிவு கைகளுக்குள் வந்த சூழலில் அடக்குமுறைகள், வன்கொடுமைகள்,யுத்தம், இடப்பெயர்வு, இன வர்க்க முரண்பாடுகள், வாழ்வியல் ஏற்ற இறக்கங்கள் இப்படி பலவற்றால் பாதிப்புற்று அல்லது அவற்றுக்கு முகம் கொடுத்து அடங்கிப் போகவும் முடியாமல் ஆக்ரோஷப்பட்டுவிட முடியாத நிலையில் கை கொடுப்பது பலருக்கு எழுத்தே. ” அந்த எழுத்தின் வலிகள் ஊடாக இங்கே தமிழ் உதயா அவர்கள் எங்களுக்கு இந்த நூலைத் தந்திருக்கிறார்.

போதி மரங்களில் இரத்தப் பூக்கள் அல்லது ஈழப்போரின் குரலற்றவளின் சாட்சியங்கள் என்ற இந்த இரு தலைப்புக்களைக் கொண்ட கவித்தொகுதியில் 61 கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன இந்த கவிதைகள் ஊடாக கடந்து போன வரலாற்றுச் சுவடுகளும் அதன் வலிகளும் துயரங்களும் துன்பங்களும் வெளிப்பட்டிருக்கின்ற அதேநேரம் எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளும் துளிர் விடப் பட்டிருக்கின்றன. தற்காலக் கவிதைகள் எப்போதும் இருமுனைத்தளங்களில் இயங்குபவை அதாவது ஒன்று அடையக் கூடியவை,சமூகத்தை சரியாக விளக்குபவை நடைமுறைக்குத் தூண்டி சரியான மாற்றத்தை துரிதப்படுத்துபவை ஆகும். இரண்டாவது தெளிவற்றவை,எய்த இயலாதவை,மயக்கம் தருபவை, மாற்றத்தை வேண்டாதவை.இந்த நிலையில் தமிழ் உதயாவின் கவிதைகள் முற்பகுதியில் அடங்குகின்றன.அதாவது அடையக் கூடியவை, சமூகத்தை சரியாக விளக்குபவை, நடைமுறைக்குத் தூண்டியாக சரியான மாற்றத்தை துரிதப்படுத்துபவையாக இருக்கின்றன.

“அமேசன் நதியின்
சிலிர்க்கும் பாதச் சிறகுகள் படர்கிறது
ஐந்து மகா சமுத்திரங்களில்
செங்காந்தள் பூக்களின் 
மென்னிதயங்கள் விரிகிறது”

என்று தொடர்கின்ற ஒன்பதாம் பக்கத்தில் உள்ள கவிதையில் பல துயரங்களும் இந்த மக்கள் அனுபவித்த வலிகளும் எடுத்துப் பேசப்பட்டிருக்கின்றன கவிஞனின் கற்பனைகளும் கனவுகளும் விண்ணில் பறப்பவை எனினும் அவை மண்ணில் காலூன்ற சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் கவிஞன் தான் காணாததையும் கேளாததையும் கவிதையில் படைக்க இயலாது. இதற்கு நல்ல உதாரணம் தமிழ் உதயாவின் போதி மரங்களில் இரத்தப் பூக்கள் கவித்தொகுப்பு சுருங்கச் சொன்னால் கவிஞன் தனக்குத் தொடர்பில்லாத எவற்றையும் கவிதையில் கொணர முடியாது அதாவது சமூக யதார்த்தத்தின் பாதிப்பை கவிஞன் உள்வாங்கி வெளியிடாத கவிதை கவிதையில்லை எனலாம்.

BHOTHI MARANGALIN ---

கவிதையின் இயல்பு கவிதை தரும் தொனிப்பொருள் போன்றன போதி மரங்களில் இரத்தப் பூக்கள் என்ற தலைப்புக்கு பொருத்தமாகவே அமைந்திருக்கின்றன. எனவே சமூக உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை மனித வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளது.மனித வாழ்க்கை இருதளச் சிந்தனைகளில் போராடிக்கொண்டு இருக்கிறது. ஒன்று இயற்கையினூடான போராட்டம் இரண்டு மனித சக்தியினூடான போராட்டம் தமிழ் உதயாவின் கவிதைகள் இரண்டாவது தளத்தில் இயங்குபவையாக உள்ளன அதாவது மனித சக்தியுடனான போராட்டம் அது இலங்கைத் தேசத்தினுடைய இரு சமூகத்தினுடைய அல்லது இரு இன மோதல்களாக வெடித்திருப்பதை இந்தக் கவிதைகளில் காணலாம். இங்கு இரண்டு அம்சங்கள் முக்கியம் பெறுகின்றன.

கவிஞனுக்கு சமூகம் தரும் சிந்தனை தன்னுள் உள்ளீர்த்துக் கொண்டு சமூகத்திற்கு கவிஞன் தரும் சிந்தனை., இந்த இரண்டு நிலைகளும் இக்கவிதைகளில் பிரதிபலிப்பதைக் காணலாம் அதாவது கவிஞனுக்கு சமுகம் தந்திருக்கின்ற சிந்தனை என்ன அதனூடாகக் கவிஞன் சமூகத்திற்கு கொடுக்க விரும்புகின்ற சிந்தனை என்ன? இரண்டும் இயங்கியல் பிணைப்பு பெறுகின்ற போது தான் உன்னதமான கவிதைகள் உருவெடுக்கின்றன எனவே கவிதை இலக்கியத்தின் ஊற்றுக்கண்ணான சமூக நடைமுறைகள் முக்கியமாக இத்தொகுப்பில் பேசப்பட்டிருக்கின்றன.

தமிழ் உதயாவின் போதி மரங்களில் இரத்தப் பூக்கள் வாழ்க்கையும் கவிதையும் ஒருங்கிணைவு பெற்று நெறியாக,அறம், விழுமியமாக, ஒழுங்காக ஒழுக்கமாக மேற்கிளம்பியுள்ளது. ஏனெனில் கவிதை என்பது மனித உள்ளம் தான் மேற்கொள்ளும் உறவு நிலைகள் உணர்வு நிலைகள் ஆகின்ற போது கிளம்பும், காணப்படும்,முனைப்புக் படுத்தப்படும் உணர்ச்சி ஊக்கத்தால் தோன்றுவதாகும்.
அதாவது கவிதை என்பது ஓர் உணர்ச்சி அல்லது உணர்வு நிலையில் வெளிப்படும் உணர்வு வெளிப்பாடாகும் அந்த வெளிப்பாடு சொல்லொழுங்கு வழியாக வருவதாகும். உணர்ச்சி உணர்வு நிலையை வெளிப்படுத்த கிளம்பும் சொல்லொழுங்கு ஒரு தொடரும் உடமையாகி விடுகிறது இதனால் கவிதை வெளிப்பாடு ஒரு தொடர்புமாகிறது.

எங்களுடைய தேசத்தை நேசிக்கிறவர்கள் அல்லது பார்க்க விரும்புபவர்களுக்கான ஒரு தொடர்பாகவும் அதே நேரத்தில் உணர்வின் வெளிப்பாடாகவும் இத் தொகுப்பு காணப்படுகின்றன

குறிப்பிட்ட உணர்ச்சியின் உண்மைத்தன்மை அந்த உணர்ச்சி வெளிப்பாட்டின் நேர்மை வெளிப்படுத்தப்படும் சொற்களின் பொதுமை என்பன இந்த சொல்லொழுங்குக்கு ஆழத்தையும் வலிமையையும் வழங்கி இருக்கின்றன. இதனால் கவிதை செம்மையாக்கப் பட்டிருக்கிறது அந்த வாக்கியங்கள் சொல்லொழுங்குகள் சொல்லும் முறைமை அவற்றின் பொதுப்பகிர்வு காரணமாக உணர்வுளைச் சுட்டி நிற்கிறது அந்த உணர்வுகள் வாசகனையும் தூண்டச் செய்கின்றன அந்த உணர்ச்சிகள் எங்களதும் உணர்வுகளாக உணர்ச்சிகளாக ஆகி விடுகின்றன. மனித அனுபவத்திற்கான குறியீடுகள் குறிப்பான்கள் கவிதைகளில் களிநடம் புரிகின்றன

இந்த அறிமுகத்தோடு ஓரிரு கவிதைகளை சுட்டிக்காட்டலாம் என நினைக்கிறேன் இது மிக முக்கியமான கவிதை. இந்த தேசத்தினுடைய கடந்த கால நிகழ்வுகள் ஒரு கவிஞனை எவ்வாறு பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. காற்று வெளியில் தொலைந்து போன வாழ்வு பற்றி சிந்திக்க வைக்கிறது. இளமை மண்பற்று பழகிய இடங்கள் பற்றி நினைக்க வைக்கிறது

“இப்போதும் நகலற்ற அந்தப் புளியமரத்தை
என் மண்ணின் முச்சந்தியில்
வளர்த்து வைத்திருக்கிறேன் 
எண்பதுகளில் இனித்துக் காய்த்த வேனில்கள்
அப்படித்தான் அது இனியமரம் என்று
பெயர் மாற்றம் பெற்றது
தங்கராசு அண்ணன் விடத்தல் தீவு பாரைமீனை
அந்த வேரில் வைத்து வெட்டி விற்றதால் தான்
அதன் சுளை இனிப்பாய்
சுவை கூட்டும் பால் திரட்டாய் மாறியது என்று
அம்மா அடிக்கடி சொல்வாள்
அடி பெருத்த அவமானம்
அது பல அடிகளைத் தாங்கி நின்றது
நிழலில் உலர வைத்த தட்டி வான்கள்,மினிபஸ்கள்,
குடை விரிந்த நோயாளர் இருக்கை,
துயர் வாதை வடியும்
கூடை நகரும் பாலைப்பழப் பையன்,
ஐஸ்பழம் நீட்டும் ராமு அண்ணன்,
கச்சான் சுருளுடன் தும்புமிட்டாய் அடுக்கி
வறுமைக் கடகத்துடன்
பொக்கைவாய் முழுவதும் சிரிக்கும்
புளியங்குடிப் பெத்தாச்சி,
பலமுறை விழுந்து எழுந்த பாதிச் சைக்கிளும் நானும்,
குஞ்சுப் பறவைகளின் காதல் முகாரி கேட்டு
உறங்கிக் கிடக்கும் மந்திக் குடும்பமும்,
தொண்ணூறுகளில் சகடைகளின் 

உலோகப் பொறிக்குண்டு வீழ்ந்து
மொழியைக் கருக்கியதால் தானே
தன்னைத் தீய்த்துக் கொண்டது.
அடர்ந்த வேர்களில் முளைத்த சிறகுகள் படர்ந்து
இன்னும் எழுதி முடியாத தீயிற்கு இரையாகாத
மண் காத்த மாவீரர் சுடரும் தாரகைகளின்
தூபியாய் மாறி மிளிர்ந்தது
இப்போதெல்லாம்
வெறும் கருந்தார் ஊற்றிய கல்பாதையும்

இனக் கலப்படமான திருமண வீடுகளும்
பொட்டழித்த விதவை நெற்றிகளும்
மறுபடி தளிர்க்காத கருகிப் பட்ட தாய்மரங்களும்
கெட்டழிந்த பெருநிலப்பரப்பும் 
இன்னும் கருக் கொள்ளாத வெடித்த தாமரைக் குளங்களும்
ஆக. …..
துள்ளி விளையாடும் காலப்பூச்சி
வாதைக்கொடுக்குகளை மட்டும் குற்றி
அதிலேயே விட்டு நகர்ந்த பின்னரும்
அந்த இனிய மரத்தை
வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
மரம் வாழ்ந்த வாழ்க்கையை
மரத்தோடு வாழ்ந்த காலத்தை
எந்தப் பறவையால் மறந்து விட முடியும்? “

இந்த தமிழ் உதயா பறவையாலும் மறந்து விடமுடியாது. துயிலும் இல்லங்கள் என்ற சொல்லுக்கு மிக அற்புதமான சொல்லடுக்கைப் பயன்படுத்தி இருக்கிறார்

“கர்ப்பக் கிரகங்கள் 
கார்த்திகைக் குழந்தைகளை
சனித்துக் கொண்டிருக்கின்றன “

வடபுலத்திலே இருக்கின்ற அந்தத் துயிலும் இல்லங்களைப் பெயர் சுட்டிக் காட்டி இறுதியாக கர்ப்பக் கிரகங்கள் கார்த்திகைக் குழந்தைகளை சனித்துக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிடுவது அந்த கவிதையினுடைய ஆழமான சொல்லடுக்கின் சிறப்பைக் காட்டி நிற்கிறது

மிகச்சிறிய கவிதையாக இருந்த போதிலும் இது முக்கியமான ஒரு கவிதை

“நானும் ஓர் அரசமரம்
நட்டு வைத்திருக்கிறேன்
மிதி வெடியில்
ஒற்றைக் காலிழந்த
புத்தனுக்காக “

இந்தக் கவிதைகளிலே கவிதைக்கும் தலைப்புக்கும் என்ன விதமான தொடர்புகள் இருக்கின்றன என்று பார்க்கின்ற போது மிக முக்கியமான ஒரு விடயம் தொனிக்கிறது

எல்லாக் கவிதைகளிலும் ஏதோ ஒரு விதத்தில் புத்தன் வந்து போகிறான். 1983 ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1986 ஆம் ஆண்டு மரணத்துள் வாழ்கிறோம் என்ற கவிதைத்தொகுதி வந்த போது பேராசிரியர் எம். ஏ.நுஃமான் அவர்களால் புத்தரின் படுகொலை என்கிற ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்பட்டு முதன்முதலில் புத்தரை வைத்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட இலக்கிய வடிவமாக அதுதான் வந்தது. அது இலங்கைப் பாராளுமன்றத்தில் தடைசெய்யப்பட்ட கவிதையாக மிளிர்ந்தது .அதன் பின்னர் புத்தர் பற்றிய அல்லது புத்தருடைய சித்தாந்தம் பற்றிய பல விமர்சனக் கவிதைகள் வெளிவந்த போதிலும் இந்தக் கவிதைத் தொகுதியான ஈழப்போரின் குரலற்றவளின் சாட்சியங்களில் பல்வேறு இடங்களில் புத்தனும் புத்தனுடைய சித்தாந்தமும் வந்து போகின்றது.

இன்னும் ஓரிடத்தில்

“புத்தன் சிறகுரித்து
விருந்துக் கறி சமைத்த
குட்டிமணியின் கண்களும் 
தங்கத்துரையின் கரங்களும்
காந்தளுக்கு இதழ்களையும்
விரல்களையும் பொருத்தின
தீட்டுப்பட்ட தீர்ப்புக்கள்
மொழி பேசும் கருமேகங்களை
வலைபின்னி செடிகளைப் படர்த்தின
யார் தட்டினாலும் திறக்காத பூமி
திரட்டிய முள்ளெலும்புச் சீசாவிற்குள்
குருதிப்பானம் கொண்டு திறக்கிறது
ஆம்
இது சூரியன்கள் விரியும் ஏகாந்த மாதம்
பிறிதொரு நாளில்
விடுதலைக் கணமொன்றில்
நாங்கள் அடிமை என்றே
தனித்தனியாக கையெழுத்திட்டோம் “

காந்தள் என்பது எதைக் குறிக்கிறது என்பது எங்களுக்கு சிறப்பாகத் தெரியும். ஆகவே இந்த போதி மரங்களில் இரத்தப் பூக்கள் ஈழப்போரின் குரலற்றவளின் சாட்சியங்கள் என்பது சர்வதேசத்திற்கு சாட்சியைத் தருகின்ற ஒரு தொகுதியாக காணப்படுகின்றது

இந்த தொகுதியில் எந்தக் கவிதைக்கும் தலைப்பிடப்படவில்லை ஆகவே இரண்டு நிலைமைகளில் நாங்கள் வாசித்துக் கொள்ளலாம் ஒன்று தனித்தனியாக வாசித்து பொருளை அறிந்து கொள்ளலாம் அல்லது ஒட்டு மொத்தமாக முதலாம் பக்கத்தில் இருந்து 103 ஆம் பக்கம் வரை வாசிக்கும் போது ஒரு வரலாறு எங்களுக்குத் தென்படும். அந்த வரலாறு போதி மரங்களில் இரத்தப் பூக்கள்.

தமிழ் உதயாவிற்கு வாழ்த்துக்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *