Search
Saturday 25 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மயான அமைதியில் அம்பாந்தோட்டை விமானநிலையம்

மயான அமைதியில் அம்பாந்தோட்டை விமானநிலையம்

சுமார் இரண்டு வருடத்திற்கு முன்னர் இதே காலப்பகுதியில் தனது சொந்த ஊரில் 210 மில்லியன் டொலர் பெறுமதியான சர்வதேச விமானநியைத்தை திறப்பதற்காக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விமானநிலையத்தில் தனது அமைச்சர்களுடன் அங்கு சென்றார்.

இலங்கையின் சிறிய நகரங்களில் ஓன்றான அம்பாந்தோட்டையின் அபிவிருத்திக்கு குறிப்பிட்ட விமானநிலையம் அடித்தளமிடும் என்ற எதிர்பார்ப்பிலேயே அந்த ஆர்ப்பாட்டமான நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.எங்கும் அவரது சுவரொட்டிகளும், பதாகைகளும் காணப்பட்டன. மகிந்த ராஜபக்சவும் தான் பிறந்த மண் இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமாக மாறும் என நம்பினார்.
Mattala-airport-DSC_1412
மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகம்,விமானநிலையம்,35.000 பார்வையாளர்கள் வரை பார்வையிடக்கூடிய கிரிக்கெட் மைதானம்,300ஏக்கர் தாவரவியல் பூங்கா,நவீன மகாநாட்டு மண்டபம்,ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், சிறந்த வீதிகள் போன்றவற்றை உருவாக்குவதன் மூலமாக அந்த நகரத்தை வர்த்தக மற்றும் உல்லாசப்பயண தளமாக மாற்றலாம் என அவர் எண்ணினார்.விமானநிலையம், துறைமுகம், கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றிற்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

சீனாவின் வங்கிகளின் கடனுதவிகளுடன் அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் மகிந்தராஜபக்ச விரும்பியபடி பூர்த்திசெய்யப்பட்டன.இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கான சாத்தியப்பாடுகள் மற்றும் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையிலான அதிகரித்துவரும் நட்புறவு,ராஜபக்ச தனக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்து கொண்டிருந்த நம்பிக்கை என்பவற்றிற்கான சான்றுகளாக அவை காணப்பட்டன.

எனினும் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர் செவ்வாய்கிழமை ராஜபக்ச சர்வதேச விமானநிலையம் தனது இறுதி பயணியை சந்தித்தது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் காணப்பட்ட வெளிப்படை தன்மையின்மைக்கும், அந்த அரசாங்கம் பெருமளவு பணத்தை அர்த்தமற்றவிதத்தில் செலவுசெய்தமைக்குமான எடுத்துக்காட்டு இந்த அபிவிருத்தி திட்டங்கள் என எதிர்கட்சிகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றார் மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்று இயக்குநர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து.பணத்தை அர்த்தமில்லாமல் வீணடித்ததே எதிர்கட்சிகளின்தேர்தல்பிரச்சாரத்தில் விடயமாக விளங்கியது, மகிந்த ராஜபகச் தான் என்றென்றும் ஆட்சியிலிருப்பேன் என்ற எதிர்பார்ப்பில் முன்னெடுத்த வீண் தற்பெருமை திட்டங்கள் இவை என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

மகிந்தராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட சில நாட்களிலேயே ஸ்ரீலங்கன்எயர்லைன்ஸ் இந்த விமானநிலையத்திற்கான தனது சேவையை நிறுத்திக்கொண்டது.ஐக்கிய அராபிய இராச்சியத்தின் பிளைதுபாய் என்ற விமானசேவையின் குறைந்த கட்டண விமானங்கள் மாத்திரமே அவ்வப்போது வந்துகொண்டிருந்தன.

அம்பாந்தோட்டை23.000 மக்கள் வசிக்கும் சிறிய நகரம்,கொழும்புடன் இதனை ஓப்பிடவே முடியாத நிலை காணப்படுகின்றது.மேலும் அம்பாந்தோட்டையின் மக்களில் 96 வீதமானவர்கள் கிராமத்தவர்கள், 32 வீதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர்,போன்ற புள்ளிவிபரங்களையும் கருத்தில்கொள்ளும்போது பலரிற்கு அந்த நகரில் இவ்வாறான விமானநிலையம் அமைக்கப்பட்டது ஆச்சரியமளிப்பதாக காணப்படுகின்றது.

அம்பாந்தோட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட துறைமுகம், மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான இடங்கள் போன்றவை காணப்பட்ட போதிலும்,பயணிகள் இல்லாததன் காரணமாக பல விமானசேவைகள் அம்பாந்தோட்டைக்கான தங்களது சேவையை நிறுத்தியிருந்தன.

கடந்த வருடம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் குறிப்பிட்ட விமானநிலையத்தின் ஓரு மாதவருமானம் 120 அமெரிக்க டொலர் என குறிப்பிட்டார்.இது இலங்கையில் வீதியோர உணவகத்தின் மூலம் பெறப்படும் வருமானத்தை விட மிக குறைவானதாகும்.
MR05222011_3
முன்னைய அரசாங்கத்தின் இயல்புகளில் ஓன்றாக காணப்பட்ட அளவுக்கதிகமான செலவீனங்கள் மற்றும்.ஊழலை கட்டுப்படுத்தி அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார்.

கொழும்பிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு செல்லும் 26 கிலோமீற்றர் அதிவேகப்பாதை பாதையை அமைப்பதற்கு தெரிவிக்கப்பட்டதை விடஇரண்டு மடங்கு செலவானது இந்த ஊழலிற்கும், நிதிவீணடிப்பிற்கும் நல்ல உதாரணமாக காணப்படுகின்றது.

இந்த வீதியை அமைப்பதற்கு 13.5 மில்லியன் செலவானதாக தெரிவிக்கும் அதிகாரிகள் உலகிலேயே அதிக செலவில் அமைக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையிது என்கின்றனர்.

தோல்வியில் முடிவடைந்துள்ள விமானம் நிலையம் போன்ற பாரிய முதலீடுகளுக்கு மீண்டும் எவ்வாறு புத்துயுர் கொடுப்பது என சிந்திக்க வேண்டிய நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளதாக தெரிவிக்கின்றார் முதலீட்டு ஊக்குவிப்பிற்கான பிரதியமைச்சர் எரான்விக்கிரமரட்ண.அது சாத்தியதாமானதா என்பது தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.

எப்படிப்பார்த்தாலும் அடுத்த ஓரு தசாப்த காலத்திற்கு அம்பாந்தோட்டையின் அபிவிருத்தி திட்டங்களால் பயன்கிடைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்,அம்பாந்தோட்டையில் அதற்கு மாறான நிலை காணப்படுகின்றது,என சுட்டிக்காட்டும் பிரதியமைச்சர் தான் அம்பாந்தோட்டை விமானநிலையத்திற்கு விஜயம் செய்தவேளை அங்கிருந்த ஒரேயொருகுடிவரவு துறை அதிகாரியிடம் எத்தனை பயணிகள் வந்தனர் எனக்கேட்டதற்கு அவர் ஒரேயொரு பயணி என தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

நான்கு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்ட விமானநிலையத்தின் நிர்வாகம் கொழும்பிற்கு மாற்றப்பட்டது,விமானநிலையத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.அவரது பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது. அவர் அம்பாந்தோட்டை விமானசேவைக்கான பொருத்தமான இடமில்லை என்கிறார்.

விமானசேவைகள் இங்கு அபிவிருத்தி ஏற்படுவதற்காக காத்திருக்கின்றன,ஆனால் அது இல்லாமல் எங்களுக்கு நிலைமை கடினமாகவுள்ளது, நான் ஒரு விமானசேவையின் பிரதம அதிகாரி என்றால் எனது விமானத்தில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வதற்கான பயணிகளை எவ்வாறு நிரப்புவது என்பது குறித்தே சிந்திப்பேன் என்கிறார் அவர். விமானநிலையத்தின் தோல்வி,குறித்து சுட்டிக்காட்டப்படும் அதேவேளை சூழலியாளர்களின் கரிசனையொன்று குறித்தும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

குறிப்பிட்ட விமானநிலைய ஓடுபாதையை மேலும் விஸ்தரிப்பதற்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடாந்து, ஆறு கிலோமீற்றர் தொலைவிலுள்ள 5000 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்தது,அந்த பகுதியில் 400ற்கும் மேற்பட்டயானைகள் உள்ளன என சூழல் பாதுகாப்பு ஆர்வலர் பிரித்திவிராஜ் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

அவர்கள் அந்த பகுதியிலுள்ள மரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டனர் மேலும் அதிவேக பாதைகள் காரணமாக நாங்கள் எங்கள் இயற்கை வளத்தை இழந்துவிட்டோம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இதற்கிடையில் மார்ச் 18 ம் திகதி விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டுவருடங்கள் பூர்த்தியாவதை குறிக்குமுகமாக சிறிய பௌத்த மத நிகழ்வொன்று இடம்பெற்றது.விமான நிலையத்தின் வாயிலில் உள்ள புத்தசிலைக்கு அருகிலிருந்த படி மூன்று பௌத்த துறவிகள் விமானநிலையபணியாளர்களின் கைகளில்வெள்ளை நூலொன்றை கட்டினர்.பாடசாலை மாணவிகள் சீருடையுடன் காணப்பட்னர். அதற்கு அப்பால் விமானநிலைய ஓடு பாதை வெறுமையாக காணப்பட்டது.

அந்த நிகழ்வும் முடிந்து அனைவரும் வெளியேறிய பின்னர் விமானநிலையத்தில் மயான அமைதிகாணப்பட்டது. அவ்வப்போது வீசும் கடும்காற்றுகள் மாத்திரம் விமானங்கள் வருகின்றன என்ற பிரமையை ஏற்படுத்துபவனவாக காணப்பட்டன.

மக்ஸ் பியேரக்  அல்ஜசீராவுக்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *