Search
Friday 6 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

மேற்கத்தைய ஊடகங்களின் பாலியல் ரீதியான அறிக்கையிடல்களால் அவமதிக்கப்பட்ட குர்திஷ் ‘ஏஞ்சலினா ஜீலி’ யின் தியாகம்

மேற்கத்தைய ஊடகங்களின் பாலியல் ரீதியான அறிக்கையிடல்களால் அவமதிக்கப்பட்ட குர்திஷ் ‘ஏஞ்சலினா ஜீலி’ யின் தியாகம்

அவளின் இராணுவ திறமைகளை போல அவளின் எழில்மிகு தோற்றம் மேற்கத்தைய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அவளின் சக போராளிகளை பொறுத்தவரை மேற்கத்தைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவளின் அழகிய தோற்றம் காரணமாக அவள் ( ஏசியா ராமசன் அண்டார்) விபரிக்கப்பட்ட விதம் ஏமாற்றமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

சிரியாவின் குவமிஷ்லி என்ற குர்திஷ் இன மக்களின் நகரத்தை சேர்ந்த இந்த 19 வயது போராளி கடந்த மாதம் ஐ.எஸ் ஐ. எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டாள். அவளின் அழகினால் கவரப்பட்ட சில மேற்கு ஊடகங்கள் கொலிவூட் கவர்ச்சிகர நடிகை ஏஞ்சலினா ஜீலியுடன் அவளை ஒப்பிட்டு ‘குர்டிஸ்தானின் ஏஞ்சலினா ஜீலி’ என்று வர்ணித்தன.

ஆனால் அவளது சக போராளிகள் ஊடகங்களின் இந்த விபரிப்பை பாலியல் ரீதியானதும் பெண்களை போகப்பொருளாக கருதுவதுமான ஒரு ஒப்பீடு என்று விமர்சித்துள்ளனர்.

ஏசியா ராமசன் அண்டார் உறுப்பினராக இருந்த குர்திஷ் பெண்கள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் எளிமை மற்றும் தன்மானம் என்பவையே தமது தத்துவம் என்கின்றனர். அவர்களைப்பொறுத்தவரையில் எவருமே அவர்களின் தோற்றம், அங்க வளைவு மற்றும் அளவு ஆகியவற்றால் மதிப்பிடப்படுவதில்லை என்றும் ஒரு பொது நன்மைக்காக தாங்கள் தனிப்பட்ட தியாகம் செய்வதாகவும் கூறுகின்றனர்.

1

பழமைவாத சமய குழுக்களின் கடும் எதிர்ப்பு மத்தியிலும் கடந்த வருடம் குர்திஷ் போராளிகள் சிரிய குர்டிஸ்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை, பலவந்த திருமணம் மற்றும் பல தார திருமணம் ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவருவதில் வெற்றி கண்டனர். இவற்றை அமுல்படுத்துவதற்காக பெண்கள் பொலிஸ் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டது.

ஆனால், சிரிய குர்திஷ் ஊடகங்களை பொறுத்தவரையில் ஏசியா ராமசன் அண்டாரின் இறப்பு ஏனைய போராளிகளினுடையது போல சாதாரணமான ஒன்று தான்.

2015 ஆம் ஆண்டு தன்னை போராளிகள் குழுவுடன் இணைத்துக்கொண்ட ஏசியா ராமசன் அண்டார் ‘ வியன் அண்டார்’ என்ற இயக்க பெயரை கொண்டிருந்தாள். தனது பயிற்சியை முடித்த அவள் யுத்த முன்னரங்குக்கு சென்று ஐ. எஸ் ஐ. எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடினாள். கடந்த இரு கிழமைகளுக்கு முன்னர் அவள் சண்டை ஒன்றில் பலியாவதற்கு முன்னர் 5 சண்டைகளில் பங்குபற்றி இருந்தாள். அவள் ஒரு குழுவுக்கு பொறுப்பாக இருந்ததுடன் இயந்திர துப்பாக்கி சுடுவதில் திறமையானவளாகவும் இருந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களில் அவளின் மைத்துனர்கள் மற்றும் மாமா மார் என்று 6 பேர் ஐ .எஸ்.ஐ. ஸுக்கு எதிராம்ப சண்டையில் பலியாகியுள்ளனர்.

அவளைப்போல நூற்றுக்கணக்கான பெண் போராளிகள் பலியாகியுள்ளனர். அவர்களில் அநேகமானவர்கள் இளம் வயதுடையவர்கள். ஆனால் ஏசியா ராமசன் அண்டார் போன்று எவருமே ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.

Syrian-Kurdish-femle-fighter-known-as-Angelina-Jolie-2015-photo-courtesy-Kurdishstruggle-flickrஐ. எஸ் ஐ. எஸ் இடம் இருந்து மீட்கப்பட்ட நகரம் ஒன்றை மீள கட்டி எழுப்பும் பொறுப்பில் உள்ள ஒரு குர்திஷ் போராளியான சோமான் கானானி என்ற போராளி ஏசியா ராமசன் அண்டார் மீதான மேற்கு ஊடகங்களின் விபரிப்பை பாலியல் அடிப்படையிலானது என்று கண்டிக்கிறார். குர்திஷ் பெண்கள் பாதுகாப்பு பிரிவை பொறுத்தவரை பெண்களை ‘பாலியல் மற்றும் ஒரு போக பொருளாக ‘ நடத்துவதற்கு எதிராக போராடுவதே தத்துவமாக இருப்பதாக கூறுகிறார்.

” பெண்களுக்கு சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடத்தை கொடுப்பதுடன் அவர்கள் விதியை அவர்களே தீர்மானிப்பதற்கு இடமளிக்கவேண்டும். இதற்காகவே ஏசியா ராமசன் அண்டார் இறந்தாள். ஆனால் எந்த நோக்கத்துக்காக ஏசியா ராமசன் அண்டார் இறந்தாள் என்பதையோ கடந்த 4 வருடங்களில் பெண்களுக்காக அவள் இவற்றை சாதித்துள்ளாள் என்பதையோ ஊடகங்களில் எவரும் எழுதவில்லை” என்று சோமான் கானானி கூறுகிறார்.

குர்திஷ் பெண்கள் பாதுகாப்பு பிரிவின் தளபதிகளில் ஒருவரான அக்ரின் சென்னா மன்பிஜ் என்ற நகரத்தை ஐ. எஸ் ஐ. எஸ் இடமிருந்து மீட்பதற்கான சண்டையில் தனது கால்களில் ஒன்றை இழந்தாள். தனது நண்பிகளில் பலரையும் அவர் பறி கொடுத்துள்ளாள்.

ஐ. எஸ் ஐ. எஸ்ஸுக்கு எதிரான சண்டைகளில் உயிரிழந்த சக போராளிகளின் படங்களை பார்க்குமாறு கூறிய அவள், ” அவர்களின் படங்களை பாருங்கள், அவர்கள் அனைவருமே ஏஞ்சல்கள் , அனைவரும் அழகானவர்கள் . ஏஞ்சலினா ஜீலி அல்லது ஜீலியா ரொபேர்ட் போல இருக்கிறாள் என்று ஒருவரின் படத்தை மட்டும் நீங்கள் எடுத்துவிட முடியாது ” என்கிறாள்.

பி.பி.சி யில் 12.09.2016 அன்று வெளியான செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *