-அ. சிவபாதசுந்தரம்
“ஏன் உங்களுக்கு வடமாகாகாணக் கல்வி நிலை பற்றிய அக்கறை ஏற்பட்டது?”
“நான் இராமநாதன் கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கல்லூரியின் ஒரு கட்டிட அபிவிருத்தி தொடர்பாக நிதி திரட்டும் உதவிகளில் ஈடுபட்டிருந்தேன். அதன் காரணமாகவும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு ஏதாவது பணிகள் செய்திட வேண்டும் என்ற நோக்கத்துடனும், லண்டனிலிருந்து அடிக்கடி அங்கு சென்றும், சில மாதங்கள் அங்கு தங்கியுமிருந்தேன். அச்சமயம் யாழ்ப்பாணப் பகுதிகளில் மட்டுமல்ல, அவற்றிலும் மோசமாக, வன்னி, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் இயங்கும் பாடசாலைகள் இருப்பதைக் கண்டேன்.
ஒரு காலத்தில் இலங்கையிலேயே கல்வியில் முன்னின்ற வடமாகாணம், போரின் பாதகமான விளைவிகளில் ஒன்றாக, கல்வியில் மிகவும் பின்னடைந்திருக்கும் நிலைமையை அறிய முடிந்தது. வெளிநாட்டில் வாழும் வெவ்வேறு துறைகளில் தொழில்சார் திறமைகளைக் கொண்டுள்ள தமிழர்கள் ஏதாவது தம்மாலானவற்றை வடமாகாணக் கல்வி அமைச்சின் தேவைக்கும், நேரடியாக அதன் ஆதரவுடனும், ஒத்துழைப்புனுடனும் செய்தால் பயன் விளைவிப்பதாக இருக்கும் என எண்ணினேன்.
இந்த எண்ணத்திற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும், இலங்கையில் வாழும் தமது சோதரர்களின் எதிர்கால நலன்பால் அக்கறை கொண்ட பலர் இங்கு முன்வந்தனர். வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களை இணைத்து ‘வடமாகாண கல்வி அபிவிருத்தி அரங்கம்’ (EDFNS-UK) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.”
மேற்குறிப்பிட்ட கேள்வி என்னுடையது; அதற்கான பதில் வடமாகாண கல்வி அபிவிருத்தி அரங்கத்தின் தற்காலிகத் தலைவர் ந.சச்சிதானந்தன் அவர்களுடையது.
உண்மைதான்!—ஏறத்தாழ முப்பது தசாப்தங்களாக ஈழமண்ணில் நடைபெற்ற மிகக் கொடூர யுத்தம், அந்த மண்ணையும், அந்த மண்ணில் வாழ்ந்த மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்திவிட்டது; படாதபாடு படுத்திவிட்டது. போர் என்ற சூறாவளியினால் பற்பல நெடுதுயர்ந்த விருட்சங்கள் அங்கேயே வேரோடு சாய்க்கப்பட்டுவிட்டன; பற்பல செடிகள் பிடுங்கப்பட்டு, எங்கெல்லாமோ எறியப்பட்டும், விதைக்கப்பட்டும் விட்டன; ஈழத்தமிழ்ச் சமுதாயமும், அதன் சமுதாயக் கட்டைமைப்புகளும், நொறுங்கப் போயின.
அப்படி அங்கு நொறுங்கப்பட்டவைகளிள் ஒன்று கல்வியுமாகும். சமீபகாலமாக வெளிவரும் கல்விப் பரீட்சைப் பெறுபேறுகளின் புள்ளி விவரங்கள், வடமாகாணக் கல்வி மிகவும் பின்தங்கிய நிலைமையில் இருப்பதைக் கோடிட்டுக் காட்டிகின்றன.
கட்டிடங்கள் நொறுங்கப்பட்டால், வீடுகள் அழிக்கப்பட்டால் அவற்றை விரைவில் கட்டிவிடலாம். ஆனால் பாதிக்கப்பட்ட கல்வி நிலைமையை உடனேயே நிவர்த்தி செய்துவிட காலம் வேண்டும். ஆனால், அதற்கான அடித்தளம், அதற்கான அனைத்து முயற்சிகளும், அனைவராலும் உடனடியாக எடுக்கப்பட்டாக வேண்டும். கல்வி வளர்ச்சியில் —அதுவும் முக்கியமாக வெறும் ‘ஏட்டுச் சுரைக்காய்’ கல்வி என்ற எல்லைகளைத் தாண்டிய—அடிப்படை வாழ்க்கை நன்நெறிகளை உள்ளடக்கிய, அவரவர்களுக்குப் பொருத்தமானதும், மேம்பாட்டுக்கானதுமான கல்வி வளர்ச்சியில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போதிய துரித அக்கறை காட்டவில்லையெனில், அவர்களின் அந்தச் சமூகம் பாழ்பட்டுப் போகும் என்பதில் ஐயமில்லை.
லண்டனில் வாழும் பல கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், சிந்தனையாளர்கள், சமூகநலன் விரும்பிகள் ஆகியோரின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளுடன் கடந்த நான்கு மாதங்களாக மாதந்தோறும் EDFNS அமைப்பினால் நடாத்தப்பட்ட கூட்டங்கள், கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அதன் முத்தாய்ப்பாக, கடந்த ஏப்ரல் 24ந் திகதி லண்டன் உயர்வாசற் குன்று முருகன் ஆலயத்தில் ஒரு கருத்தரங்கம் ஏற்படுத்தப்பட்டது.
அந்நிகழ்வில், பிரத்தியேக வருகை தந்து கலந்து கொண்ட வடமாகாணத்தின் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், இராசா இரவீந்திரன் வடமாகாணக் கல்வி பற்றிப் பல புள்ளிவிபரங்களுடன், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் தெரிவித்த விடயங்களும், விபரங்களும், ஆலோசனைகளும் வடமாகாணத்கில் கல்வி பற்றிய நிலைமையைத் தெளிவாக்கின. அவரது பங்களிப்புடன், இக்கருத்தரங்கிலும், முன்னைய சந்திப்புகள், கலந்தரையாடல்களில் பங்குபற்றியோரின் பற்பல ஆக்கபூர்வமான செயல் முன்னெடுப்புகளுக்கான கருத்துக்களும், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பங்களிப்புகளைப் பட்டியலிடுவதற்கான ஆதாரமாக அமைந்தன.
அன்றைய தினம், கல்வி சம்பந்தமான நல்ல பல கட்டுரைகளும், மத்திய அரசின் அமைச்சர் உயர்திரு டி.எம் சுவாமிநாதன், வடமாகாகாண முதலைமைச்சர நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரி.குருகுலராஜா ஆகியோர் இலங்கையியிருந்து அனுப்பிய வாழ்த்துச் செய்திகளும் அடங்கிய மலரும் வெளியிடப்பட்டது.
வடமாகாணத்தின் தற்போதைய அரசியல், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், ஆகியவற்றில் நடைபெறுபவனவற்றை கேட்கும்போதும், படிக்கும்போதும், கல்வி சம்பந்தமான (எல்லோரும் அல்ல, ஆனால் அனேகமான) அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் மனநிலையும் கரிசனையும் எப்படியெல்லாம் தரம் தாழ்ந்து கிடக்கிறது என்பதை அறியவரும்போது, ‘எப்படி இருந்த தமிழ்ச் சமூகம் இப்படி ஆகிவிட்டதே’ என ஏங்காமல் இருக்க முடியவில்லை; கணக்கற்ற உயிர், உடமைகளின் தியாகங்களின் பின்னரும், ஒன்றுமே இல்லாமல் எல்லாமே அர்த்தமற்றுப் போய்விட்டதோ? என்ற வியாகூலம் நெஞ்சைத் துளைப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
கல்வித்துறை எதிர்நோக்கும் சவால்கள் பற்பல: பயனாகப் பலனடைபவர்கள் சொற்ப மாணவர்களேதானெனினும், ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்குப் பாடங்கள் படிப்பிக்கும், பெரும் பணம் ஈட்டும், தனியார் பாடசாலைகள் (‘Tutories’); விதிவிலக்காக இருக்கும் சொற்பமானவர்களைத் தவிர, அனேகமாக அக்கறையற்ற பாடசாலை அதிபர்கள்; ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய பாடங்களில் சிரத்தை காட்டாத மாணவர்கள்; அவற்றைப் படிப்பிப்பதற்குப் போதிய பயிற்சியில்லாத, மற்றும் பாடத்திட்டங்களை படிப்பித்து முடிக்காத ஆசிரியர்கள்; நல்லொழுக்கம் இல்லாதுபோய் பெற்றோர்களையோ ஆசிரியர்களையோ மதிக்காத மாணவர்கள்; நிராகரிக்கப்பட்ட, கவனிக்கப்படாத பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், அவற்றின் மாணவர்கள்;—-இப்படி அடுக்கிக் கொண்ட போகலாம்.
இவை எல்லாவற்றையும் நிவர்த்தி செய்ய வேண்டிய, அவற்றிற்குப் பரிகாரங்கள் கண்டறிய வேண்டிய, அவசரத் தேவைகள் இருக்கின்றன.
இலண்டனிலிருந்து பழைய மாணவர்கள் சங்கங்கள் தமது பழைய பாடசாலைகளுக்கு பணம் சேர்த்து அனுப்புகிறார்கள். அனேகமாக அவை ஒரு சில பெரும் பாடசாலைகளே. பின்தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் கவனிப்பாரற்றுப் போகின்றன. அவர்கள் அப்படிச் சேர்த்து அனுப்பும் பணம் பெரும்பாலும் கட்டிடத் தேவைகளுக்கும், கல்லூரி விழாக்களுக்குமே செலவாகின்றன. அத்துடன் அனுப்பப்படும் பணம் உண்மையில் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது விரயமாகிறதா, அல்லது தனிப்பட்டவர்களைச் சேர்கிறதா என்பனவும் கேள்விக்குறிகளாக எதிர்நிற்கின்றன.
“நெல்லுக்கு இறைக்கும் நீர் வாய்க்கால் வழியேறிப் புல்லுக்கும் ஆங்கே பொசிந்தால்” பரவாயில்லை எனக் கொள்ளலாம். ஆனால் நெல்லுக்கு இறைப்பதாக எண்ணிக் கொண்டு, புல்லுக்கே இறைக்கும் பயனற்ற பணி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமல்லவா?
வடமாகாணசபையின் கல்வி அமைச்சிற்கு இலங்கை அரசினால் நிதி ஒதுக்கப்படுகிறது; அந்த நிதி முழுமையாகப் பிரயோகப்படுத்தப்படாது, கணிசமான பகுதி மத்திய அரசாங்கத்திடமே திரும்பச் செல்லும் நிலையும் உள்ளது என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
அதன் காரணம், அந்த நிதியை குறிப்பிட்ட கால எல்லைக்குள் உபயோகப்படுத்துவதற்கு வேண்டிய மார்க்கங்களை வடமாகாண அரசாங்கம் முன்னெடுக்காமை, அவற்றிற்கு வேண்டிய நியதிச் சட்டங்களை மாகாண சபையில் நிறைவேற்றாமை என்று கூறப்படுகிறது. வெற்று உணர்ச்சி அரசியல், தனிப்பட அகங்கார, அகந்தைப் போட்டிகள், அடுத்த தேர்தலிலேயே முழுவதுமாகக் கண்களைச் செலுத்துதல் ஆகிய இன்னோரன்ன கொல்லைகளில் அதிகம் மெனக்கடாமல், வடமாகாண சபையைப் சரிவரப் பரிபாலனம் செய்ய வேண்டிய கட்டாயக் கடமை, அதற்காகவே வடமாகாண சபைக்கு மக்களால் தேர்வுசெய்யப்பட்டு அனுப்பப்பட்ட பிரதிநிதிகளுக்கு இருக்கிறது என்பதினைச் சம்பந்தப்பட்டவர்கள் தமது மனச்சாட்சிக்கு அடிக்கடி நினைவு கூர வேண்டும். அதனை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமையையும் உரிமையையும் மக்களும் முன்னெடுக்காமை, ‘தமிழர்களின் தலைவிதியோ’ என எண்ணத் தோன்றுகிறது.
இன்னுமொரு விடயமும் புரிந்தது: —-ஒரு சமூகம் கல்வியில் வளர்ச்சி பெற்று முன்னேற வேண்டுமெனில், அந்தச் சமூகத்திலுள்ள கல்வி சம்பந்தமாகச் செயல்படும் அரசியல் அதிகாரத்தில் உள்ளோர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் மனநிலயில் (mind-setல்) மாற்றம் ஏற்பட வேண்டுவது அவசியம். அந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உந்துதல் அங்குள்ள அரசாங்க நிர்வாகத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினரடன் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுடமிருந்தும் வர வேண்டியது அத்தியாவசியமானது.
வெளிநாடுகளில் வாழும் பெரும்பான்மையான இலங்கைத் தமிழர்கள் போருக்குக்குக் கை கொடுத்தார்கள். போரினால் களைத்துச் சலித்திருக்கும் பாதிக்கப்பட்ட தமது சமூகத்திற்கு இப்பொழுது கை கொடுத்துத் தூக்கி விடும் கடமை அவர்களுக்கு இருக்கிறதா? அவர்கள் பங்களிப்புகள் ஆற்ற வேண்டிய துறைகளாக கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொருளாதாரம், சமூகம் ஆகியன இருக்கின்றனவா? அவற்றில் வருங்காலச் சமுதாயத்தின் மேம்பாட்டைத் தீர்மானிப்பதில் கல்வித் துறை அதிமுக்கியமானது எனக் கருதப்படுகிறதா? அந்தத் துறையில் ஆக்கபூர்வமானதும், வீண்விரயமற்றதுமான தம்மாலான வெவ்வேறு பங்களிப்புகளை வழங்குவது நல்லதும், மேன்மையானதுமானதுமான செயல்களா?
இவற்றிற்கான பதில்கள் “ஆம்” என்றால், “ எப்படியான பங்களிப்புகளை வழங்கலாம்? ”
இந்தக் கேள்வியை, சச்சிதானந்தம் அவர்களையே கேட்டேன்.
அவர் தந்த பதில்:
“வடமாகாண கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டுக் கருத்தரங்கில் பங்குபற்றிய இராசா இரவீந்திரன் அவர்களால் வடக்கு மாகாண கல்வி வளர்ச்சி சம்பந்தமாகத் தெரிவிக்கப்பட்டதும், அக்கருத்தரங்கத்திலும் அதற்கு முன்னரான சந்திப்புகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றில் பங்குபற்றியோரினால் முன்வைக்கப்பட்டதுமான விபரங்கள், ஆலோசனைகள், கருத்துக்கள், ஈடுபாடுகள், செயற்பாடுகளை உள்ளடக்கிய விடயங்கள் ஒரு அறிக்கையாகத் திரட்டப்படுகிறது.
அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்ட விடயங்களில் எவை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் மேற்கொள்ளப்பட வேண்டியதும், நன்மைபயப்பதுமாகும் என வடமாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்ததும், அதன் அங்கீகாரத்துடனும், ஆதரவுடனும், அதனுடன் ஒருங்கிணைந்து அனைவரது உறுதுணையுடன் மேற்கொண்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்”
“அது சரி!—ஏன் வட மாகாணக் கல்வி வளர்ச்சி என்று மட்டும்? ஏன் கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கவில்லை?”
இது இங்கு சிலரால் கேட்கப்பட்ட கேள்வி.– அதை அவரிடமே கேட்டேன்.
அவர் கூறிய பதில்:
“வடமாகாணக் கல்வி அமைச்சருடனும், சில கல்வி அதிகராரிகள், மற்றும் சமூகநலன் கருதுபவர்கள் ஆகியோருடன்தான் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது; வடமாகாணக் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான எமது முயற்சிகள் இலக்குகளை எய்தும் பட்சத்தில், கிழக்கு மாகாண அமைச்சும் விரும்பின், அந்த முயற்சிகளை கிழக்கு மாகாணக் கல்வி சம்பந்தவர்களின் ஒத்துழைப்புடன் அங்கும் விஸ்தரிக்க முடியும்”.
R-06