Search
Monday 16 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

விக்னேஸ்வரனின் மாற்றம்

விக்னேஸ்வரனின் மாற்றம்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மைக்காலத்தில் தெரிவித்துவரும் கருத்துக்கள் அரசியலில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடபகுதி சென்றிருந்த போது, யாழ். செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றினார். அங்கு அவர் தெரிவித்த “ஒரு நாடு இரண்டு தேசங்கள்” என்ற கருத்து தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. அதிர்வுகளை உருவாக்கியிருக்கின்றது. அனைவருடைய கவனத்தையும் அவர் பக்கம் திருப்பியிருக்கின்றது. ஒரு மிதவாதி தீவிரவாதியாக மாறிவிட்டாரா என்ற கேள்வியை அவரது அண்மைக்கால நகர்வுகள் எழுப்பியிருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று மத்தியில் ஒரு ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், விக்னேஸ்வரன் மேற்கொள்ளும் நகர்வுகள் தென்னிலங்கை அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். இருந்தபோதிலும், தமிழ் மக்களின் உணர்வுகளையே தான் பிரதிபலிப்பதாக அவர் சொல்கின்றார். உள்நாட்டு அரசியலிலும், இராஜதந்திரிகளுடனான பேச்சுக்களின் போதும் தன்னுடைய இந்த நகர்வுகளில் உள்ள நியாயத் தன்மையை அவர் தெளிவாக வெளிப்படுத்திவருகின்றார். ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்லாமல்   ஒரு முன்னாள் நீதியரசர் என்ற முறையில் அவர் தெரிவித்துவரும் கருத்துக்கள் மறுதலிக்க முடியாதவையாக உள்ளன என்பது உண்மை.

பெப்ரவரி 4 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என அறிவித்ததிலிருந்து அவரது அதிரடி நகர்வுகள் ஆரம்பமானது எனச் சொல்லலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில், விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு கூட்டமைப்பின் மிதவாதிகள் மத்தியில் கூட பிளவு ஒன்று உருவாகியிருக்கின்றதா என்ற கேள்வியை தவிர்க்க முடியாமல் எழுப்பியது.

அதனையடுத்து,”இனப்படுகொலை”த் தீர்மானத்தை தானே  வட மாகாண சபையில் கொண்டுவந்து அதனை ஏகமனதாக நிறைவேற்றுவதில் விக்னேஸ்வரன் வெற்றி பெற்றார். கடும்போக்கான ஒருவர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவருவதை விட, மிதவாதியும் முன்னாள் நீதியரசருமான முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தைக்கொண்டுவந்தமை இதன் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியது. நம்பகத்தன்மையைப் பலப்படுத்தியது. யாரும் நிராகரித்துவிடமுடியாதளவுக்கு சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனையுடன் இந்தப் பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்தமை  கவனிக்கத்தக்கது. இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த ஒரு ஆவணமாக இது தயாரிக்கப்பட்டிருப்பதும் முக்கியமானதாகும்.

இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது ஒத்திவைக்கப்படப்போகின்றது என்பதை உணர்ந்துகொண்ட நிலையிலேயே இனப்படுகொலைப் பிரேரணையைக் கொண்டுவருவது என்ற தீர்மானத்தைதான் எடுத்ததாக முதலமைச்சர் தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதுகூட, இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டதற்கான காரணத்தை முதலமைச்சர் விளக்கியிருக்கின்றார். அதனை நியாயப்படுத்தியிருக்கின்றார். பிரேரணை மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் ஜனாதிபதியிடம் நேரில் தெரிவிப்பதற்கு முதலமைச்சர் தயங்கவில்லை.

மறுபுறத்தில் தன்னைச் சந்திக்கவரும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் இது குறித்து அவர் விளக்கம் கொடுத்துவருகின்றார். குறிப்பாக ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறீட் லோகின் ஆகியோருடனான சந்திப்புக்களின் போது இனப்படுகொலைத் தீர்மானம் தொடர்பில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது. புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள தருணத்தில் இவ்வாறான தீர்மானம் ஒன்றைக்கொண்டுவருவது நல்லெண்ணத்தைப் பாதிப்பதாக அமையாதா என்ற கேள்வியைத்தான் இராஜதந்திர வட்டாரங்கள் அவரிடம் நேரில் எழுப்பியிருந்தன. நடைபெற்றவைகளை ஒப்புக்கொள்வதன் மூலமாகவே உண்மையான நல்லிணக்கத்தைக் கொண்டுவரமுடியும் என முதலமைச்சர் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கின்றார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்தின்பின்னர் இவ்வாறான தீர்மானம் ஒன்றைக்கொண்டுவருவதற்கும், அதனை நியாயப்படுத்துவதற்கும்மான ஜனநாயக இடைவெளி ஒன்று உருவாகியிருக்கின்றது என்பது உண்மை.

விக்கினேஸ்வரணைனப் பொறுத்தவரையில் அவர் ஒரு கடும்போக்காளராக என்றும் கருதப்பட்டவரல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மென்போக்காளர்களாக அடையாளம் காணப்பட்ட மும்மூர்த்திகளில் அவரும் ஒருவர். முதலமைச்சராகத் தெரிவானவுடன் நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்பாக பதவியேற்பதற்கு அவர் எடுத்த தீர்மானம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதற்குப் பின்னரும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் பல நகர்வுகளை அவர் முன்னெடுத்திருந்தார். இந்தநகர்வுகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாகவே இருந்தன. அரச தரப்பிலிருந்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நகர்வுகள் எதுவும் ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை.

அதிகார மாற்றத்தின் பின்னர் சில சாதகமான நகர்வுகள் இடம்பெற்றன என்பது உண்மை. முதலமைச்சருக்குப் போட்டியாக சமாந்தரமான ஒரு நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்த இராணுவப் பின்னணியைக்கொண்ட அளுநர் மாற்றப்பட்டார். முதலமைச்சருக்கு கட்டுப்படமறுத்த பிரதம செயலாளரும் அகற்றப்பட்டார். இவைபோன்ற சாதகமான சில நகர்வுகள் இடம்பெற்றிருந்தாலும் கூட, வடமாகாணத்தில் முழு அளவிலான இயல்பு நிலை ஒன்றைத் தோற்றுவிப்பதற்கான நகர்வுகள் எதுவும் இடம்பெறவில்லை. இடம்பெறுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

குறிப்பாக – வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்பதை வடமாகாண தேர்தல் காலத்திலிருந்து விக்னேஸ்வரன் வலியுறுத்திவருகின்றார். இராணுவம் குறைக்கப்படும் நிலையில்தான் மீள்குடியேற்றம் பூரணமாக்கப்படும். இதனைவிட காணாமல்போனோர் பிரச்சினை, கைதிகள் விவகாரம் என்பனவும் உறுத்திக்கொண்டுள்ளன.

இவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முதலமைச்சர் நடத்திய பேச்சுகள் திருப்திகரமாக அமையவில்லை. அரசுக்கு எதிராக வேட்டுக்களைத் தீர்க்க விக்னேஸ்வரன் ஆரம்பித்தமைக்கு அதுவும் பிரதான காரணம். புதிய அரசாங்கத்தின் அணுகுமுறை தமிழர் பகுதிகளில் இயல்பு நிலையைக்கொண்டுவருவதற்கு உதவப்போவதில்லை என்பதை உணர்ந்துகொண்ட நிலையில்தான் தன்னுடைய மிதவாதப்போக்கை மாற்றிக்கொள்வதற்கு விக்னேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் எனக் கருதலாம். விக்னேஸ்வரின் இந்த அணுகுமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்கின்றது என்பது தெரியவில்லை. மக்களின் உணர்வுகளையோ தான் பிரதிபலிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துவருகின்றார்.

விக்னேஸ்லரின் இந்த நகர்வுகள் புதிய அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் என்பது உண்மை. சர்வதேச அரங்கிலும் சங்கடமான ஒரு நிலையை அரசுக்கு இது தோற்றுவிக்கும். மறுபுறத்தில் தீர்வுகாணப்பட வேண்டிய பல பிச்சினைகள் முன்னாள் உள்ளது என்பதை அவரது நகர்வுகள்தான் புதிய அரசாங்கத்துக்கு உணர்த்திக்கொண்டிருக்கின்றன. புதிய அரசாங்கத்தை சங்கடத்துக்குள்ளாகக்கூடாது என்பதைவிட எமது மக்களின் பிரச்சினைகள்தான் எமக்கு முக்கியம் என்பதைத்தான் விக்கினேஸ்வரனின் நகர்வுகள் உணர்த்திநிற்கின்றன.

(ஞாயிறு தினக்குரல் ஆசிரியர் தலையங்கம்: 2015-03-08)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *