Search
Thursday 23 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

வரலாற்றுக்கு முற்பட்ட கால பெருமை வாய்ந்த நயினை நாகப்பூசணி அம்மன் ஆலய ‘தேர்’ உற்சவம் இன்று

வரலாற்றுக்கு முற்பட்ட கால பெருமை வாய்ந்த நயினை நாகப்பூசணி அம்மன் ஆலய ‘தேர்’ உற்சவம் இன்று

பிறேமலதா பஞ்சாட்சரம்

ஈழத் திருநாட்டில் ஆதித்தமிழினத்தின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்றளவும் தொடர்ச்சியான இருப்பை உலகுக்கு பறைசாற்றி நிற்கும் வரலாறுப் பெருமை மிக்கதும் தமிழினத்தின் தாய்த்தெய்வ மற்றும்இயற்கை வழிபாடான நாக வழிபாட்டுக்கும் சான்றாக விளங்குகின்றதும் தன்னை நினைக்கும்அடியார்களுக்கு என்றென்றும் அருளமுதை வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு நயினாதீவு நாகபூசணிஅம்மனின் தேர்த் திருவிழா இன்றாகும்.

இத்திருத்தலம் பிரம்மபுராணம் குறிப்பிடுகின்ற 64 சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரிபீடம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவியின் பெயர் நாகபூசணி அம்பாள் அல்லது புவனேஸ்வரி , இறைவன் நாகனார் அல்லது நாகநாதர் எனவும் அழைக்கப்படுகின்றார். நாகனார் தீவு என்பதே மருவி நயினார் தீவாகவும் கால ஓட்டத்தில் அதுவே நாயினாதீவு என்று அழைக்கப்படலாயிற்று.

nakapoosaniநயினாதீவு பல பெயர்கள் கொண்டு காலத்துக்குக் காலம் அழைக்கப்பட்டமை பல வராலாற்றுக் குறிப்புக்களிருந்தும் பழங்கால இலக்கிய நூல்களிலிருந்தும் செவிவழிக் கதைகளூடாகவும் அறியகூடியதாக இருக்கின்றது.

ஐம் பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் (கி பி 2ம் நூற்றாண்டு) கோவலனுக்கும் மாதவிக்கும்மகளாகப் பிறந்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்தீவுக்கு கொண்டுவந்து அவளுக்குஅமுத சுரபி கிடைக்கச் செய்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. அங்கே குறிப்பிடப் படுகின்றமணிபல்லவத்தீவே நயினா தீவு என்று சொல்லப்படுகின்றது.

மேலும் மணிமேகலையில்

“திரை இரும் பௌவத்துத் (பெருங்கடல்) தெய்வம் ஒன்று உண்டு”

என்று குறிப்பிடுவதானது நயினா தீவில் அமர்துள்ள நாகபூசணி அம்மனையேயன்றி வேறில்லை என்பதுமணிமேகலையின் மூலமும் அதன் முன்னெழுந்த சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில் வரும்

‘எம் குலதெய்வப் பெயர் ஈங்கு இடுக’ என

அணி மேகலையார் ஆயிரம் கணிகையர்,

“மணிமேகலை” என வாழ்த்திய ஞான்று ‘

என்ற பாடலூடாக கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் அவனது குலத் தெய்வம் மணிமேகலையின் பெயரினை மாதவியின் வயிற்றில் உதிக்கப் போகும் தனது மகளுக்கு வைத்ததை கூறுகின்றார்.

இவை தவிர இலங்கையின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் மா காவம்சத்தில் (கி பி 6ம் நூற்றாண்டு ) புத்தபிரான் மகோதரன் குலோதரன் என்னும் இரு நாக அரசர்களுக்கிடையில் இரத்தின சிம்மாசனம் தொடர்பிலான பிணக்கைத் தீர்த்துவைக்க எழுந்தருளியுள்ளதாக குறிப்பிடுகின்றது.

புத்தரின் பிரசன்னதின் உண்மைத்தன்மை கேள்விகுறியாகின்ற போதிலும் சிங்கள வரலாறு தொடக்க காலத்திற்கு முன்பிருந்தே இலங்கைத் தீவில் ஆதித் தமிழர்களின் மூதாதையர்களான நாகர் இனத்தவர்கள் வாழ்ந்துள்ளமையை நிரூபிக்க அகழ்வாய்வுகளின் பொழுது கிடைக்கப் பெற்ற நாகத்துடன் தொடர்புடைய சின்னங்கள் சான்று பகர்கின்றன.

இவ்வாலயத்தின் கருவறையில் எழுந்தருளியுள்ள அம்மனின் திருவுருவச் சிலையைப் பற்றி கருத்துத்தெரிவித்த தென்னிந்திய சிற்பசாரியாரான திரு. நரசிம்மன் கருவறையில் அம்மன் போல இருப்பது நாகப்பிரதிஷடையே என்றும் இது தேய்ந்து அம்மன் போலத் தெரிகின்றது என்று கூறுகின்றார். இச் சிலைக்குப் பின்புறம் காட்சியளிக்கும் 5 தலையுடைய நாகவடிவ சிலை பிற்காலத்தில் நிறுவப்பட்டிருக்கலாம் ஆயினும்அவ்விரு சிலைகளின் கால அளவைத் தெரிந்து கொள்ள முறையான தொல்லியல் ஆய்வு அவசியமாகும் .

இவ்வாறான வலராற்று முக்கியத்துவத்தைக் கொண்ட ஆலயத்தை கி பி 1620 ம் ஆண்டில்போத்துகேயர்கள்இடித்தழித்துள்ளனர் .அதன்பின்னர் கி பி 1788 சிறிய ஆலயம் ஒன்றைக் கட்டி அம்மனை வைத்து வழிபட்டுவரும்பொழுது கி பி 1792ல் ஒல்லாந்தர்கள் அதனை அழிக்க வந்தபொழுது அவர்களிடமிருந்து அதனைக்காப்பற்ற கத்திரித் தம்பி என்னும் அம்பாள் அடியவர் இது ஒரு மாதா கோவிலென்று அவர்களுக்கு எடுத்துக்கூறி மீண்டும் அழிவுறாது காத்துள்ளார். 1958ம் ஆண்டும் 1986 ஆம் ஆண்டும் சிறிலங்கா படைகளின்தாக்குதல்களில் எரியூட்டப்பட்டும், சேதப்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதன்பின்னர் இலங்கையில் ஏற்பட்டபெரும்போர் சூழலி ல்லிலும் அழிவுறாது இன்றளவும் நின்று நிலைத்து ஆருளை வாரி வழங்குகின்றது.

இத்திருத்தலத்தில் 4 கோபுரங்களும், வசந்த மண்டபம், வாகன மண்டபம், கல்யாண மண்டபம், அன்னபூரணனேஸ்வரி அன்னதான மண்டபம், அமுதசுரபி அன்னதான மண்டபம், ஸ்ரீ புவனேஸ்வரிகலையரங்க மண்டபம் முதலான 6 மண்டபங்களும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் ஏனைய மதத்தினரும் கலந்து சிறப்பிப்பது பெருமைக்குரிய விடயமாகும் என்பதுடன் நாகபூசணி அன்னையின் அன்னையின் அருளின் சிறப்புமாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *