செய்திகள்

கணவனை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரினால் கணவனை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுவாக்கேணி சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சி.பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர்  பிரசன்னா இந்திரகுமார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தையல் இயந்திரங்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களான ஏ.நஜீம், க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 2015 ஆம் ஆண்டுக்கான மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட தையல் இயந்திரங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது  மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார உதவிகள் தொடர்பான கோரிக்கை சமூக சேவைகள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் பொழுது அவர்களுக்கான உதவிகளை எதிர்வரும் 2016 ஆம் வருடத்திற்கான மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கிவைப்பதாக பிரதித் தவிசாளர் தெரிவித்தார்.
n10