செய்திகள்

கண்டி மாவட்டத் தமிழ் மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுதிபடுத்தும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்வதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி முனைப்புடன் செயற்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலுகுமாருக்கு ஆதரவுத் தெரிவித்து நாவலப்பிட்டி கடியலேன நகரில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோகணேசன், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான வேலுகுமார்,  ராஜாராம் ,ஐக்கிய தேசிய கட்சியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் ஆனந்த அலுத்கமகே  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எஸ்.ஸ்ரீதரன் தொடர்ந்து தெரிவிக்கையில்..

கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ள போதும் கடந்த இரண்டு தசாப்தகாலமாக தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாகவில்லை . இதனால் கண்டி மாவட்டத்தமிழ் மக்கள் பிறரில் தங்கி வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டது. குறிப்பாக நாவலப்பிட்டி தொகுதி தமிழ் மக்கள் பல்வேறு நெருக்குதலுக்கு உள்ளாகி வந்தனர். இந்தத் தொகுதியில் தமிழ் மக்கள் பாதுகாத்த நிலம் வெளியாருக்குப் பலாத்காரமாக பிரித்துக் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்தமை அனைவரும் அறிந்த விடயமாகும்.

கண்டி மாவட்டத்தமிழ் மக்களின் அரசியல் உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் ஒன்றிணைந்து கண்டி மாவட்டத்தில் தமிழர் ஒருவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் வியூகத்தினை அமைத்துள்ளனர். அந்த வகையில் அனைவரினதும் நன்மதிப்பைப் பெற்ற மத்திய மாகாணசபை உறுப்பினர் வேலுகுமாரை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில்  களமிறக்கவுள்ளோம். இவரின் வெற்றிக்காக எமது கூட்டணி முனைப்புடன் செயற்படும்.

இவ்வாறானதொரு நிலையில் கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான வேட்பாளர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ,தொகுதி அமைப்பாளர் ஆனந்த அலுத்கமகே இவர்களுக்கும் தமிழ் மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும். இன்று இந்த நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழுவதற்கு நல்லாட்சி வழிசமைத்துள்ளது. இந்த நல்லாட்சியை ஏற்படுத்துவதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் அரும்பாடு பட்டுள்ளனர். ஆகவே எதிர்வரும் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து இலங்கையில் வாழுகின்ற மலையகத்தமிழ் மக்களின் சக்திமிக்க அமைப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணி திகழப்போகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.