செய்திகள்

கனிந்த மாற்றமும் கனியாத தீர்வும்

லோ. விஜயநாதன்

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையினால் இலங்கை தொடர்பில் அமைக்கப்பட்ட சர்வதேச விசாரணைகளின் முடிவுகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனிதவுரிமை சபைக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படவுள்ள நிலையில் இவ் ஆட்சி மாற்றமானது குறிப்பிடத்தக்க வகையில் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாரிய தாக்கங்களை விளைவிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. உண்மையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்வதற்கு இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நிலையில் முன் கூட்டியே தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டமைக்கு இவ்விசாரணையே காரணம் எனலாம்.

அதாவது மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுமிடத்து அந்த விசாரணையின் முடிவுகளின் கடுமையயை ஓரளவுக்கெனினும் குறைக்க முடியும் என்றும் இலங்கை மக்கள் தனது பக்கமே உள்ளதாகவும் அரசுடன் இணங்கிச் செயற்படுமிடத்து அதில் உள்ள சில பரிந்துரைகளை அமுல்படுத்த அல்லது இணங்கிச் செயற்பட கூடும் என்ற செய்தியை சர்வதேசத்துக்குக் கூறக் கூடியதாக இருக்கும் என்றும் கணக்கு போடப்பட்டது. அத்துடன் வடமாகாண சபையை செயலற்ற நிலையில் தொடர்ந்தும் வைத்திருந்து அதனை கடைசி நேரத்தில் பேரம் பேசுவதற்கு பாவிக்க முடியும் என்றும் இதன்மூலம் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபை விசாரணையை முற்றிலும் நீர்த்துப் போக செய்யலாம் என்பதாலும் இத்தேர்தலை ஒரு வியூகமாக பாவிக்க முற்பட்டிருந்தனர். இத் தேர்தலில் வெற்றிபெறுவதினூடாக தொடர்ந்து பாராளுமன்றத்தையும் கலைத்து அத்தேர்தலிலும் வெற்றிபெறுவதினூடாக ராஜபக்சக்களின் ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனால் நம்பிக்கையுடனும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடனும் தேர்தலை மஹிந்த ராஜபக்ஸ முன்கூட்டியே அறிவித்தார்.

ஆனால் நடந்ததோ ராஜபக்சக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன் ஆட்சிக்கட்டமைப்பில் இருந்து முற்றாக அவர்களை வெளியேற்றக் கூடிய சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. மகிந்த ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை பறிகொடுத்ததுடன் அவரது குடும்ப அங்கத்தவர்களில் சபாநாயகர் சாமல் ராஜபக்சவைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நாட்டைவிட்டு தப்பி ஓடும் அல்லது ஒளிந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன இத்தேர்தலில் வென்ற உடனேயே ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ததுடன், எந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை முதல் 100 நாட்களில் ஒழிப்பதாக மக்களுக்கு உறுதியளித்தாரோ அந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். அத்துடன்இ 25 அமைச்சர்களே புதிய அரசில் பொறுப்புக்களில் நியமிக்கப்படுவர் என்று முன்னர் கூறப்பட்டிருந்தபோதிலும், தற்போது அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது அரசுக்கான ஆதரவை தக்கவைத்துக் கொள்ளும் ஒரு தேவையாக இருந்ததுடன் ராஜபக்சக்கள் மீண்டும் எழுச்சி பெறாமல் இருப்பதற்கும் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தக்கவைத்து எந்தவித இடையூறுமில்லாத வகையில் முன்னெடுத்து செல்வதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் காணப்படுகின்றது. இந்தவகையில் இது சிறிலங்காவின் அரசியல் ஸ்திரமற்ற நிலையையே தெளிவாக சுட்டி நிற்கின்றது.

உண்மையில் மாற்றம் வேண்டிய மக்களின் எழுச்சி அதிகமாக (இலங்கை முழுவதும் வாக்களிப்பு வீதம் சராசரியாக 70% க்கு மேல்) இருந்தபடியினால் தான் அதிலும் தமிழ்மக்களினதும் ஏனைய சிறுபான்மை மக்களின் அரசியல் தெளிவு தான் மகிந்த ராஜபக்சவை அலரிகை மாளிகையை விட்டு மடமுலவனவுக்கு அனுப்பியது. இத் தேர்தலில் எப்படியாகிலும் வென்றுவிடவேண்டும் என்ற நிலையில் மகிந்த முற்றுமுழுதாக முழு அரச வளங்களையும் பாவித்துள்ளார். இது அவருக்கு தென்மாகாணத்திலும் வடமத்திய மாகாணத்திலும் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை தக்க வைக்க உதவியுள்ளது.

அதேவேளை வடகிழக்கு தமிழ் மக்கள் இத்தேர்தலினூடாக தாம் வாழும் அரசியல் யதார்த்த நிலைமையினை புரிந்துகொண்டும் ஆயிரக்ககணக்கில் தமது உறவுகளையும் சொந்தங்களையும் அழித்தவனை தோற்கடிக்க வேண்டும் என்ற மனநிலையிலும் தமது தமது வாக்குகளைப் பாவித்துள்ளனர். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் எந்தவொரு அபிலாசையையும் வேண்டுகோளையும் சிறிதளவேணிலும் கணக்கில் எடுக்காத மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது வாக்குகளை அளித்துள்ளனர். இதன்மூலம் மீண்டும் ஒருமுறை சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் தமக்காண எந்தவொரு தீர்வையும் சிங்களம் ஒரு போதும் தாம்பாளத்தில் வைத்து தரப்போவதில்லை என்பதையும் நேரடியான சர்வதேச தலையீடுகளே தமக்கான தீர்வை உருவாக்கித் தரும் என்பதையும் எடுத்துக்கூறியுள்ளனர்.

சர்வதேசசமூகமோ தமது நீண்டகாலச் செயற்பாட்டின் ஒரு படியாகவும் தொடர்ச்சியாகவுமே இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தது. இறுதியில் சிங்கள மக்களின் தலைவர்களையும் ஏனைய கட்சிகளின் தலைவர்களையும் ஒன்று திரட்டி இவ் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசத்தின் இலங்கை பற்றிய அணுகுமுறையை ஆழமாக நோக்குவோமாக இருந்தால் அது எப்படி ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரித்து சமாதானம் என்ற பொறிக்குள் விழவைத்து இறுதியில் அப்போராட்டத்தின் தாங்கு சக்திக்கு (மக்களுக்கு) பாரிய அளவிலான அழிவை ஏற்படுத்துவதினூடாக ஆயுதப்போராட்டத்தை மீண்டும் ஒருமுறை அம்மக்கள் சிந்திக்காத அளவுக்கு முற்றிலுமாக அழிக்க முயன்று வெற்றி பெற்றது. மறுபுறத்தில், அந்த அழித்தொழிப்பில் ஈடுபட்ட அரசை (சிறிலங்கா) இனவாதரீதியில் மிகவும் பலமாக கட்டியெழுப்பி படிப்படியாக சர்வாதிகார ஆட்சி நிலைக்கு வளர அனுமதித்து கவிழ்ப்பதினூடாக ஏற்படும் ஆட்சி மாற்றத்தை தமது பிராந்திய நலன்சார்ந்த குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளை அடைந்து கொள்வதற்காக பயன்படுத்த திட்டமிட்டது.

சர்வதேசத்தின் அடுத்த நகர்வானது இலங்கையை அமைதி ஜனநாயகம், பல்லினத்தன்மை உள்ள நாடாக கட்டியெழுப்புவதினூடாக பிராந்திய அமைதியை ஏற்படுத்துதல் என்ற இலக்கை நோக்கியே அமைந்துள்ளது. தற்போதுள்ள உலக ஒழுங்கில் இலங்கையில் அமைதியும் ஜனநாயகமும் நிலவுவதே அப்பிராந்தியத்தில் வல்லாதிக்க நாடுகளின் போட்டா போட்டி காரணமான தேவையற்ற இராணுவதலையீடுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும். புனித பாப்பாண்டவரின் வருகையானது இதன் ஒரு அங்கமாகவே அமைதுள்ளது.

தமிழ்த்தேசியமானது இச்செயல்முறைகளை அவதானமாக உள்வாங்கி விழிப்புடன் செயற்படுவதன்மூலமே அதன் இலக்குகளையும் சர்வதேசத்தின் இலக்குகளையும் ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கமுடியும். அந்த வகையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினை பயன்படுத்தி அழிவின் விளிம்பில் உள்ள மக்களுக்கு நேரடி மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகள் புலம்பெயர் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து உடனே சென்று சேரும் வகையில் கட்டமைப்பு ரீதியியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தப்படுவது அழிவின் விளிம்பில் இருக்கும் மக்களை மீட்க உதவும்.

சிங்கள தேசமானது தொடர்ந்து ஸ்திரமற்ற ஆட்சியைக் கொண்டிருக்குமேயானால் தமிழ் மக்களுக்கான தீர்வு காலங்கடந்து செல்லக்கூடிய அபாயநிலை உள்ளது. எனவே தமிழ்த்தேசியமானது இடைக்கால தீர்வை நோக்கிச் செல்வதே காலத்திற்குகந்த செயலாக அமையும். இவ் இடைக்கால நிர்வாக பொறிமுறைக்கான கோரிக்கை வலுப்பெறுமானால் அது மறைமுகமாக ஏற்கனவே உள்ள அதிகார கட்டமைப்புக்களை நீர்த்துப்போக செய்வதுடன் இறுதித்தீர்வுக்கான அடித்தளத்தையும் இடும்.

இல்லாவிட்டால் சர்வதேச சமூகமானது நீடித்த நிலையான சமாதானத் தீர்வுக்கு சிறிலங்காவை நிர்ப்பந்திக்கும் போது அது புதிய தீர்வுகளை பரீட்சித்துப்பார்ப்பதிலும் பார்க்க (இதன் மூலம் சிங்கள இனவாதத்தை உசுப்பி விடுவதை விட) செயலற்று இருக்கின்ற பழைய தீர்வுத்திட்டங்களை தூசுதட்டி அதில் சில மாற்றங்களைச் செய்வதினூடாக அதை தமிழ்மக்களுக்கான தீர்வாக தர முயற்சிக்கலாம். இதுவே எமது அயல்நாட்டின் விருப்பமும் கூட. இதை தடுப்பதற்கு குறிப்பாக புலம்பெயர் தமிழர்களும் தமிழ் நாட்டு மக்களும் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து உடனடியாக எடுப்பதினூடாக குறிப்பிடதக்க அளவில் இந்த கோட்பாட்டில் தாக்கத்தைச் செலுத்த முடியும்.

இல்லையெனில் இவ் ஆட்சி மாற்றமானது எம்மை 2000ம் ஆண்டு பேச்சுவார்த்தை போன்ற நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு இட்டுச் சென்றதைப்போல ஒட்டுமொத்த தமிழ்த்தேசியத்தின் சிதைவுகே வழிகோலும். சிங்களத்தின் ஆட்சிப்பீடத்தில் அன்று முள்ளிவாய்க்கால் அழிவுக்கு அடித்தளம் இட்ட ரணில், சந்திரிகா போன்றவர்களே இன்று அரியணையில் இருப்பதையும் மறந்து விடலாகாது.

எமது விடுதலைக்காக நாம் தான் போராட வேண்டும். அதைவிடுத்து அடுத்தவன் பெற்றுத்தருவான் அல்லது அவன் தோள்மீதேறி நின்றால் ஏதாவது கிடைக்கும் என்று செயற்பட்டால் நாம் 1987ம் ஆண்டின் நிலைக்கு செல்வதற்கான அதாவது அடுத்தவன் முற்று முழுதாக எமது பிரச்சினையை தன்நலம் நோக்கி மாற்றிவிடுவதற்கான நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

இவ்வகையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் விசாரணையும் எவ்வேளையிலும் சர்வதேசத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் காலப்போக்கில் சிறிலங்காவின் மனித உரிமை மீறலுக்கான விசாரணை என்ற நிலையிலிருந்து தனி நபர்களுக்கான யுத்தக்குற்றச்சாட்டுக்களாக மாற்றமடையலாம். போர்குற்றச்சாட்டின் பிரதான பங்களியாக இந்தியாவே இருப்பதால் அது ஒரு போதும் ஒரு முழுமையான விசாரணைக்கு சிறிலங்காவை இட்டுச் செல்ல அனுமதிக்கப்போவதில்லை. சர்வதேசமும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளது. ஆனால் சர்வதேசம் இதை தமது துருப்புச் சீட்டாக பயன்படுத்தி இலங்கைத் தீவில் ஒரு நிலையான இன நல்லிணக்கத்தை மேற்சொன்ன காரணத்துக்காக ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தவே முற்படும். எனவே நாம் தனியே ஒரு பொறிமுறை சார்ந்து செயற்படாமல் பல தளங்களில் வெவ்வேறு பொறிமுறைகளுக்கூடாக துடிப்பு மிக்க செயற்திறனுடன் செயற்படுவதே தமிழ் தேசியத்தின் பாதுகாப்புக்கு உறுதுணையாக அமையும்.

இத்தேர்தலானது இன்னொருவிடயத்தையும் கற்றுத் தந்துள்ளது. அதாவது  முஸ்லிம் மக்கள் தமிழ் தேசியத்துடன் ஒன்றினைந்து  செயற்படுமிடத்து பலமிக்க ஒரு சக்தியாக, சிங்களதேசத்தை ஆட்டுவின்கின்ற சக்தியாக மாறமுடியும் என்பதையே ஆகும். அந்தவகையில் தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்தித்து செயலாற்றுமிடத்து நல்லதொரு தீர்வினை வட-கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுகொடுக்க முடியும்