செய்திகள்

கரவாகு வடக்கு நகரசபை உருவாக்கமும் சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கமும் கல்முனைத் தமிழர்களுக்குப் பெரும் ஆபத்தானவை

– தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை தங்கள் பிரதேசங்களை ‘அறுக்கை’ செய்வதற்கும் தங்களது சமூக, பொருளாதார, கல்வி, கலை – இலக்கிய – பண்பாட்டு மற்றும் சூழல் பாதுகாப்புக்கான மேம்பாட்டுத் திட்டங்களைத் தாங்களே திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் பிரதேச மட்டங்களில் அரசாங்கம் அறிமுகம் செய்கின்ற அபிவிருத்தித் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள், வேலைவாய்ப்புத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளின் பலாபலன்களைப் பாரபட்சமின்றிப் பெற்றுக் கொள்வதற்கும் தங்களுக்கென்று தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகுகளும் (பிரதேச செயலாளர் பிரிவு) அதனை அடிப்படையாக கொண்ட உள்ளூராட்சி அலகுகளும் (பிரதேச சபை), பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் ஆகிய மூன்று கட்டுமானங்களும் அவசியமானவை. இந்த மூன்று கட்டுமானங்களையும் ஏனைய சமூகங்களின் அரசியல் தலைமைகள் தங்களது சமூகங்களுக்கு நன்கு திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அதனைக் குறை கூற முடியாது. அவை அவர்களது தேவை. ஆனால் துரதிஸ்டவசமாக தமிழர்களுடைய அரசியல் தலைமையானது தமிழரசுக்கட்சிக் காலத்திலிருந்து சமகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் காலம் வரை இதில் அறவே அக்கறையற்றே இருந்து வந்துள்ளது.

வெறுமனே சமஸ்டி என்றும் தனிநாடு என்றும் கோசங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்து மக்களின் வாக்குகளைத் தேர்தலுக்காகச் சேகரித்துக் கொண்டார்களே தவிர, தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் இருப்பிற்கான – வலுவூட்டலிற்கான எந்தவிதமான ‘களவேலை’ களையும் திட்டமிட்டுத் தீர்க்கதரிசனத்துடன் தமிழர்தம் அரசியல் தலைமைகள் மேற்கொள்ளவில்லை. இதன் தாக்கமும் பிரதிபலிப்பும்தான் ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறுபதம் என்பது போல கல்முனைப் பிரதேசத் தமிழர்களுக்கு இன்று வந்திருக்கின்ற ஆபத்து.

கல்முனைப் பிரதேசத் தமிழர்களைப் பொறுத்தவரை முன்பிருந்த கல்முனைப் பட்டினசபையை (Town Council) தரவைப் பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் வடபகுதியை தமிழ்ப் பெரும்பான்மைப் பட்டின சபையாகவும் உருவாக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அமரர் மு.திருச்செல்வம் அவர்கள் ஸ்தலஸ்தாபன அமைச்சராகப் (உள்ளூராட்சி அமைச்சர்) பதவிவகித்த 1960களிலிருந்தே கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இன்றுவரை இக்கோரிக்கை அரசாங்கங்களைப் பொறுத்த வரையிலும் சரி தமிழர்தம் அரசியல் தலைமைகளைப் பொறுத்த வரையிலும் சரி ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ ஆகத்தான் இருக்கிறது.

இந்த நியாயமான கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டுத்தான் 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரகாரம் அதற்கு முன்பு அமுலிலிருந்த பட்டினசபைகளும் கிராமசபைகளும் இல்லாதொழிக்கப் பெற்றுப் பதிலாகப் பிரதேசசபைகள் அறிமுகம் செய்யப்பெற்றபோது பிரதேச சபைகள் அமுலுக்கு வருமுன்னர் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியிலும் அடங்கியிருந்த கரவாகு தெற்கு கிராம சபை (சாய்ந்தமருது), கல்முனைப் பட்டினசபை, கரவாகு வடமேற்கு கிராமசபை (சேனைக்குடியிருப்பு), கரவாகுவடக்கு கிராமசபை (பெரியநீலாவணை) ஆகிய நான்கு உள்ளூராட்சி அலகுகளும் ஒன்றிணைக்கப்பெற்று முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் கரவாகுப் பற்றுப் பிரதேசசபை (கல்முனை) எனும் பெயரில் தனியானதொரு முஸ்லிம் பெரும்பான்மை ஒற்றை உள்ளூராட்சி அலகாக 1987ல் ஆக்கப் பெற்ற நிகழ்வும் – பின்னர் இப்பிரதேச சபை கல்முனைத் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சர் எம்.எச்.எம்.அஸ்ரப் காலத்தில் அலவிமௌலானா அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த போது 1998.12.11 ஆம் திகதியிடப் பெற்ற 1057/16 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 11.06.1999 இலிருந்து அமுலுக்குவருமாறு ‘கல்முனை நகரசபை’ எனும் பெயரில் நகரசபை ஆக்கப்பெற்ற நிகழ்வும் – தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அதாவுல்லா அவர்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராக இருந்த போது 2001.06.11 ஆம் திகதியிடப்பெற்ற 1188/1 இலக்கமுடைய வர்த்தமானி அறிவித்தல்மூலம் 15.04.2002 தொடக்கம் ‘கல்முனை மாநகரசபை’ யாகத் தரமுயர்த்தப் பெற்ற நிகழ்வும் நடந்தேறின.

Kalmunai

இத்தகைய எல்லாக் கட்டங்களின்போதும் கல்முனைத் தமிழர்களின் மிக நீண்டநாள் கோரிக்கையான தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை முற்றாக உதாசீனம் செய்யப்பட்டது. தமிழர்தம் அரசியல் தலைமைகள் கண்ணைமூடிக் கொண்டு வாளாவிருந்தன.

மட்டுமல்ல, நிர்வாக அலகான கல்முனைப் பிரதேச செயலாளர் பிரிவைக் (முன்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவு) கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோவில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரண்டாகப் பிரித்துத் தென்பகுதியை ‘கரவாகுதெற்கு’ எனும் முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் வடபகுதியை ‘கரவாகு வடக்கு’ எனும் தமிழ்ப் பெரும்பான்மை நிர்வாக அலகாகவும் உருவாக்கித் தருமாறு கேட்ட கல்முனைத் தமிழர்களின் மிக நீண்டநாள் கோரிக்கையும் புறந்தள்ளப்பட்டது. அதாவது 12.04.1989ல் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகமாகத் திறக்கப்பெற்றுப் பின்னர் 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப் பெற்றும்கூட நடைமுறையில் இன்னும் அது முழு அளவிலான பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப் பெறவில்லை. அதாவது முழுமையான அதிகாரமளிக்கப்படாமல் எல்லைகள் வகுக்கப்பெற்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பெறாமல் அதிகாரமற்றதோர் உப பிரதேச செயலகப் பிரிவாகப் பெயரளவிலேயே – கல்முனைத் தமிழர்களுக்குக் கண்துடைப்பு நடிவடிக்கையாகவே இயங்கி வருகிறது. ஆனால் சமகாலத்தில் சாய்ந்தமருதுக்கென தனியான பிரதேச செயலகப்பிரிவு (நிர்வாக அலகு) ஏற்படுத்தப்பெற்று இயங்கி வருகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே இப்போது சாய்ந்தமருதுக்கென தனியான உள்ளூராட்சி அலகொன்றினை (பிரதேச சபை) ஏற்படுத்தும் முயற்சி அப்பகுதி முஸ்லீம்களிடையே முனைப்புப் பெற்றுள்ளது.

இப்பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது தற்போது முழுக் கல்முனைத்தேர்தல் தொகுதியானது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு, கல்முனை தெற்கு (முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவு, இதுவரை தரமுயர்த்தப்படாத கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய மூன்று நிர்வாக அலகுகளை உள்ளடக்கியதாகவும் அதேவேளை கல்முனை மாநகர சபை எனும் தனியான ஒற்றை உள்ளூராட்சி அலகாகவும் உள்ளது.

இப்படியிருக்கும்போது கல்முனைத் தமிழர்களுக்கெனத் தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் அதற்கு முன்பு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை நிறைவேறினால் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கை நீர்த்துப்போய் விடக்கூடிய அல்லது முற்றாக அடிபட்டுப் போகக்கூடிய ஆபத்து உள்ளது. அதே போன்றுதான், அண்மையில் மாற்றத்துக்கான எழுச்சி முன்னணியின் இயக்குனரான மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.றைசால் ஹாதி முன்வைத்துள்ள கோரிக்கையின் படி (வீரகேசரி 09.02.2019) பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாகக் கரவாகு வடக்கு நகரசபை உருவானாலும் கல்முனைத் தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கை நீர்த்துப் போய்விடக்கூடிய அல்லது முற்றாக அடிபட்டுப் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

மேலும் மேற்படி இருகோரிக்கைளும் அதாவது சாய்ந்தமருதுப் பிரதேசசபையும் கரவாகு வடக்கு நகரசபையும் தற்போதுள்ள கல்முனை மாநகரசபையில் இருந்து தனியே பிரிக்கப்பெற்று உருவானால் எஞ்சியிருக்கப்போகின்ற கல்முனை மாநகரசபையின் கீழ் தெற்கில் தற்போதைய கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதிக்கும் வடக்கில் கல்முனை – பாண்டிருப்பு எல்லையான தாளவெட்டுவான் வீதிக்கும் இடையில் உள்ள கல்முனைத் தமிழர்கள் காலவரையில் காணாமல் போய்விடுவார்கள்ளூ மட்டுமல்ல 1946 ஆம் ஆண்டின் 3ம் இலக்க பட்டின சபைகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் 1948இல் கல்முனைபட்டின சபை (Town Council) ) உருவாக்கப்பெற்ற காலத்தில் இருந்து அதாவது 1892 ஆண்டின் 18ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தினால் நிறுவப்பெற்ற கல்முனைத் தனித்தமிழ் உள்ளூராட்சி சபையில் (Sanitory Board) அடங்கியிருந்த கல்முனை மூன்று தமிழ்க் குறிச்சிகளும் முஸ்லீம் கிராமமான கல்முனைக் குடியின் ஐந்து குறிச்சிகளும் இணைக்கப்பெற்று ஏழுவட்டாரங்கள் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மைக் கல்முனை பட்டினசபையாக உருவாக்கப்பெற்ற காலத்திலிருந்து கல்முனைத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பெற்ற பாரபட்சங்கள் யாவும் உத்தேச கரவாகுவடக்கு நகரசபையின் கீழ்வரும் பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவணைத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும்.

Kalmunai 2

இத்தகையதொரு பின்புலத்;தில் கல்முனைப் பிரதேசத் தமிழர்கள் தங்கள் இருப்பைத் தற்காத்துக் கொள்வதற்கான ஒரேயொரு மார்க்கம் யாதெனில், கல்முனைத் தமிழர்களுக்கென தெற்கே கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோவில் வீதியையும் வடக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு எல்லைக்கோட்டையும் (பெரியநீலாவணைக் கிராமம் வரை) கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லைகளாகக் கொண்ட தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகொன்றினை (அது பிரதேச சபையாகவோ அல்லது நகரசபையாகவோ அல்லது தனியான மாநகரசபையாகவோ இருந்து விட்டுப் போகட்டும் ) ஏற்படுத்திக் கொள்வதேயோகும். இதனைப் பெற்றுக் கொள்ள உடனடியாகத் தேவைப்படுவது கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவைத் தரமுயர்த்துவதாகும். கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவு தரமுயர்த்தப்பெற்றால் மட்டுமே அதனை அடிப்படையாகவைத்து தனியான உள்ளூராட்சி அலகு அமைய வாய்ப்புண்டு.

இதனைப் பெற்றுத்தருவதற்கான அக்கறையோ – அர்ப்பணிப்போ – ஆற்றலோ – ஆளுமையோ – அதற்கான அரசியல் வல்லமையோ தற்போதைய தமிழர்தம் அரசியல் தலைமையிடம் இல்லை. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபைகளுக்கான தேர்தல் காலத்தில் கல்முனையில் வைத்து ‘உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள் கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலாளர் பிரிவைத் தரமுயர்த்தித்தருவேன்’ என்று வாக்குறுதியளித்து வாக்குக் கேட்டுப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்; இரா.சம்பந்தன் அவர்கள் அது பற்றி மறந்துவிட்டார். எனவே ‘அழுதும்பி;ள்ளை அவளே பெறவேண்டும்’ என்பதற்கிணங்க கல்முனைத் தமிழர்களிடையே உள்ள பொது மக்கள் அமைப்புகள் அதற்கான அரசியல் களவேலைகளையும் வெகுஜன அழுத்தங்களையும் தாமதியாது தொடங்க வேண்டும். முன்னரே உத்தேச சாய்ந்தமருது பிரதேசசபையும், கரவாகு வடக்கு நகரசபையும் உருவாகிவிடுமானால் கல்முனைத் தமிழர்களின் தனியான தமிழ்ப் பெரும்பான்மை உள்ளூராட்சி அலகுக் கோரிக்கை அடிபட்டுப் போய்விடும். கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் பண்ணமுடியாது.