செய்திகள்

கரையோரமாவட்டம் உருவாக்கப்பட முன்னர் தீர்க்கப்பட வேண்டிய அம்பாறை மாவட்டத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள்

முஸ்லிம் காங்கிரஸ் வேண்டி நிற்கும் அம்பாறை மாவட்டத் தமிழ்பேசும் மக்களுக்கான கரையோர மாவட்டக் கோரிக்கையைத் தமிழ் மக்கள் ஏற்று ஆதரவளிக்க முன்வரவேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸனலி தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (வீரகேசரி 29.09.2014).

இக்கோரிக்கையையிட்டு அம்பாறை மாவட்டத் தமிழர்கள் சார்பில் சில மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க வேண்டியுள்ளது.

தற்போதுள்ள அம்பாறை நிருவாக மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலாக மீதியான பொத்துவில், கல்முனை, சம்மாந்துறைத் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிப் புதிதாகக் கல்முனை மாவட்டம் என்ற முஸ்லிம் பெரும்பான்மைக் கரையோர மாவட்டம் ஒன்றினை உருவாக்கும் முயற்சி அதன் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் காலத்திலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடுக்கிவிடப்பட்டதாகும். இக்கரையோர மாவட்ட உருவாக்கம் பற்றிய மாற்றுக் கருத்தொன்றினை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் நலன்களை மனம் கொண்டு வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மேற்கூறப்பட்ட கரையோரமாவட்டம் உருவாக்கப்படுவதை அம்பாறை மாவட்டத் தமிழர்கள் இப்போது விரும்பவில்லை. ஏன் இப்போது விரும்பவில்லை என்பதில் உள்ள நியாயங்களை அம்பாறை மாவட்டத் தமிழர்களின் 1947 இன் பின்னரான கடந்த அறுபத்தியேழு வருடகால அரசியல் வரலாற்றினைத் தெரிந்து கொள்ளுவதன் ஊடாகவே புரிந்து கொள்ள முடியும்.

அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப் பெற்று 1961 இல் புதிய அம்பாறை மாவட்டம் ஆக உருவாக்கப்படும்வரை தற்போதைய அம்பாறை மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டமும் இணைந்த நிலப்பரப்பே முன்னைய  மட்டக்களப்பு நிருவாக மாவட்டமாக இருந்தது. இதன் எல்லைகள் வடக்கே வெருகல் ஆறு, தெற்கே குமுக்கன் ஆறு, கிழக்கே வங்காள விரிகுடாக்கடல், மேற்கே வடமத்திய – மத்திய – ஊவா மாகாண எல்லைக்கோடுகள். (ஊவா மலைக்குன்றுகள்).

இலங்கையின் சோல்பரி அரசியலமைப்பின் கீழான முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 1947 ஆகஸ்ட்- செப்டெம்பரில் நடைபெற்றது. சோல்பரி ஆணைக்குழுவின் சிபார்சுக்கமைய பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை 1946 இல் 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் 89 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இத்தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே இலங்கையின் முதலாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அம்பாறை மாவட்டம் உருவாகி இருக்கவில்லை.

1947 க்கு முன்னர் பின்னைய (1947-1959) பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய முழுநிலப்பரப்பும் சட்டசபைக் காலத்தில் (1931 – 1947) ~மட்டக்களப்பு தெற்கு| என அழைக்கப்பட்ட தனித் தேர்தல் தொகுதியாக இருந்தது.

மேற்கூறப்பட்ட மட்டக்களப்பு தெற்கு தேர்தல் தொகுதியே 1946 தேர்தல் தொகுதிகள் எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது பட்டிருப்பு, கல்முனை, பொத்துவில் தொகுதிகளாகின. அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த அதாவது 1947 இல் பிரதானமாக கல்முனை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களே தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்கள் ஆவர். அப்போதைய பட்டிருப்புத் தொகுதியின் (1947 – 1959) தெற்கு எல்லை கல்முனை தாளவெட்டுவான் சந்திவரை – தாளவட்டுவான் சந்தியிலிருந்து கிட்டங்கித் துறையை ஊடறுத்து அம்பாறைக்குச் செல்லும் பிரதான வீதி வரை – பரந்திருந்தது என்பதை மனங்கொள்ளும் போது அப்போதைய (1947 – 1959) கல்முனை, பொத்துவில் தொகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களும் அப்போதைய பட்டிருப்புத் தொகுதியின் தெற்கு எல்லையில் வாழ்ந்த தமிழ் மக்களும் சேர்ந்தே தற்போதைய ~அம்பாறை மாட்டத் தமிழர்கள் எனக் கணிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் அப்போதைய (1947 – 1959) பட்டிருப்புத் தொகுதி 1959 இல் மீண்டும் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்படும் வரை தற்போதைய கல்முனைத் தொகுதியில் உள்ளடங்கியுள்ள பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற கிராமங்களையும் உள்ளடக்கியிருந்தது. அதே போல் தற்போதைய அதாவது 1976 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது ஏற்படுத்தப்பட்ட சம்மாந்துறைத் தேர்தல் தொகுதியின்கீழ் இருப்பதும் 1959 இலிருந்து 1976 வரை பழைய பொத்துவில் தொகுதியின்கீழ் இருந்ததுமான சவளக்கடை, சொறிக்கல்முனை, மத்திய முகாம், அன்னமலை, நாவிதன்வெளி, 6ம் கொலனி போன்ற தமிழ்க்கிராமங்களும் 1947 இருந்து 1959 வரை பழைய பட்டிருப்புத் தொகுதியிலேயே அமைந்திருந்தன. அப்போதைய (1947 – 1959) பட்டிருப்புத் தொகுதியில் அடங்கியிருந்த மேற்கூறப்பட்ட கிராமங்கள் யாவும் பின்னாளில் 1959 தேர்தல் தொகுதி எல்லைகளை மீளர்நிர்ணயத்தின் போது புதிய கல்முனைத் தொகுதியின் கீழும் புதிய பொத்துவில் தொகுதியின் கீழும் உள்வாங்கப்பட்டன. இவைகள் யாவும் 1947 – 1959 வரை பழைய பட்டிருப்புத் தொகுதியின் தென் எல்லையில் அடங்கியிருந்தன.

1946 இல் ஏற்படுத்தப்பட்ட அப்போதைய பொத்துவில், கல்முனை ஆகிய இரு தேர்தல் தொகுதிகளையும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளே பிரதிநிதித்துவப்படுத்தினர்.

தேர்தல் ஆண்டு பொத்துவில் தொகுதி கல்முனைத் தொகுதி

1947 எம்.எம்.இப்றாகிம் ஹாஜியார் (சுயேச்சை) எம்.எஸ்.காரியப்பர் (ஐ.தே.க)
1952 எம்.எம்.இப்றாகிம் ஹாஜியார் (ஐ.தே.க.) ஏ.எம்.மேர்சா (சுயேச்சை)
1956 எம்.எம்.முஸ்தபா (தமிழரசுக்கட்சி) எம்.எஸ்.காரியப்பர் (தமிழரசுக்கட்சி)

1948 பெப்ரவரி 4ம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது. சுதந்திர இலங்கையின் முதற் பிரதமரும் சுதந்திரத்திற்கு முன்பு விவசாய, காணி மந்திரியாகவும் இருந்தவருமான காலஞ்சென்ற டி.எஸ்.சேனநாயக்கா அவர்கள் ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபையின் கீழ் (சுiஎநச ஏயடடநலள னுநஎநடழிஅநவெ) கல்லோயா அபிவிருத்தித் திட்டம் என அழைக்கப்பட்ட (Galoya Development Project) நீர்ப்பாசனக் குடியேற்றத்திட்டத்தை உருவாக்கி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள மாவட்டங்களிலிருந்து சிங்களவர்களை அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியாக விளங்கிய பட்டிப்பளை ஆற்றுப் பிரதேசத்தில் குடியேற்றினார். காலவரையில் இக்குடியேற்றம் பெருகி தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான ~பட்டிப்பளை| ஆற்றுப்பிரதேசம் ~கல்லோயா| எனப் பெயர் மாற்றம் பெற்றுச் சிங்களமயமானது.

பின்பு 1959 இல் மீண்டும் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்ட போது அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கில் புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளுடன், தமிழ் மக்களின் பாரம்பரியப் பிரதேசமான பட்டிப்பளை ஆற்றுப் பிரதேசத்தில் கல்லோயாத்திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்ட சிங்களவர்களின் நன்மை கருதி சிங்களப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதியாக ~அம்பாறை| எனும் புதிய தேர்தல் தொகுதியும் உருவானது.
அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதியை அதாவது 1947 – 1959 வரை அப்போதைய கல்முனை, பொத்துவில் தொகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சியில் உள்ளோரிடமிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் தங்கள் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்யும் வகையிலேயும், இப்பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்காதவகையிலேயும் திட்டமிட்டு 1959 இல் புதிதாக உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வகுக்கப்பட்டன. அம்பாறை சிங்களப் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்ட அதேவேளை புதிய கல்முனை, நிந்தவூர், பொத்துவில் தொகுதிகள் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு முஸ்லிம் பெரும்பான்மையாக வரக்கூடியவாறு உருவாக்கப்பட்டமை இப்பிரதேச மக்களுக்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளால் இழைக்கப்பட்ட அரசியல் பாரபட்சமாகும். மறைந்த எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் தமிழரசுக்கட்சியுடன் நல்ல உறவை வைத்துக் கொண்டுதான் இப்படியான தமிழர்களுக்குப் பாரபட்சமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவாறு புதிய மட்டக்களப்புத் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக்கப்பட்டது. அதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக்கப்பட்டது. ஆனால் இதே வாய்ப்பு அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு – தற்போதைய அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு – வழங்கப்படாது அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டனர். உண்மையில் என்ன நடந்திருக்க வேண்டுமென்றால் 1959 இல் உருவான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளிலொன்றை இரட்டை அங்கத்தவர் தொகுதி ஆக்கி இப்பிரதேசத்தமிழர்களுக்கு ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வழங்க ஆவன செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது இப்பிரதேசத்திலிருந்து தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படக் கூடியவாறு தமிழ்ப் பெரும்பான்மைத் தொகுதியொன்றிற்கான எல்லைகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரை இதில் அதிகம் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அரசியல் ஞானம் அற்றிருந்தார்கள் அல்லது இப்பிரதேச தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை விடத் தங்கள் கட்சிக்கென பாராளுமன்றப் பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வதில்தான் அக்கறையாக இருந்தார்கள். மக்கள் நலன்களைவிடக் கட்சி நலனுக்கே முன்னுரிமை அளித்தார்கள். தங்கள் கட்சி அரசியல் நலன்களுக்காகவும் பாராளுமன்ற அரசியல் நலன்களுக்காகவும் எம்.எஸ்.காரியப்பருடன் முகத்தை முறித்துக் கொள்ள விரும்பாத தமிழரசுக்கட்சி 1959 தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது எம்.எஸ்.காரியப்பருக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டது. இப்பிரதேசத் தமிழர்களின் அரசியல் எதிர்காலம் அக்கறையோடு கவனிக்கப்படவில்லை. இதனையிட்டு அப்போது தமிழரசுக்கட்சி அக்கறை செலுத்தாதது இப்பிரதேசத் தமிழ்மக்களுக்கு அதாவது அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு அக்கட்சி இழைத்த மாபெரும் அரசியல் தவறு ஆகும்.

இப்பிரதேசத் தமிழ் மக்களுக்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகளினால் திட்டமிட்டு அரசியல் பாரபட்சம் இழைக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் தனது கட்சி நலன் காரணமாகத் தமிழரசுக்கட்சி பாராமுகமாக நடந்து கொண்டமை இப்பிரதேசத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதனையுடன் பதிவு செய்யப்பட வேண்டிய கசப்பான அனுபவங்களாகும். இன்றும் இதுதான் தொடர்கிறது. தமிழ் மக்களுக்கு அரசியல் அறிவூட்டுவதைவிட அவர்களுக்கு உணர்ச்சியூட்டுவதிலேயே தமிழரசுக்கட்சி அக்கறை செலுத்துகிறது. அரசியலை விஞ்ஞானபூர்வமாக அணுகாமல் வெறும் ஏட்டுச்சுரைக்காய் அரசியலைத்தான் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததால் தமிழ் மக்கள் இழந்தவை ஏராளம். 1959 இல் இப்பிரதேசத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அரசியல் தவறு காரணமாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள், சுதந்திர இலங்கையில் 1947 இலிருந்து 1976 ம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள் நிர்ணயத்தின் போது உருவான புதிய பொத்துவில் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடந்த 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பொத்துவில் தொகுதியின் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினராகக் காலஞ்சென்ற ம.கனகரட்ணம் அவர்கள் தெரிவு செய்யப்படும்வரை சுமார் முப்பது ஆண்டுகள் (1947 – 1977) தங்களுக்கென்று தங்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதியொருவரைக் கொண்டிருக்கவில்லை. இது அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் இருப்பிற்குப் பெரும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திற்று.

அம்பாறை மாவட்டம் உருவாக்கம்.
சுதந்திர இலங்கையின் போது ~விந்தனைப்பற்றுப் பிரதேசம் அப்போதைய (1947) மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாணத்துள் அமைந்திருந்தது. இது பின்னர் மொனறாகலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு ஊவா மாகாணத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1959 இல் அம்பாறை தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்ட போது மேற்கூறப்பட்ட விந்தனைப்பற்று இத்தொகுதிக்குள் அடங்கியிருக்கவில்லை. 1959 ம் ஆண்டின் தேர்தல் தொகுதி எல்லைகள் மீள்நிர்ணயத்தின் போது உருவான அம்பாறை, கல்முனை, பொத்துவில், நிந்தவூர் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியதாக 10.04.1961 இல் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதி துண்டாடப்பட்டு புதிய ~அம்பாறை மாவட்டம்| உருவாக்கப்பட்டது.

புதிய அம்பாறை மாவட்ட உருவாக்கத்தின் போது விந்தனைப்பற்று பிரதேசம் மொனறாகலை மாவட்டத்தில் ஊவா மாகாணத்தில் அடங்கியிருந்தது. அப்போது இப்புதிய அம்பாறை மாவட்டம் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டமாக உருவானதால் இம்மாவட்டம் உருவாவதற்கு இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆதரவு கொடுத்தனர். குறிப்பாக இம்மாவட்ட உருவாக்கத்திற்குக் காலஞ்சென்ற எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் உடந்தையாக இருந்தார். மேற்கூறப்பட்ட ~விந்தனைப்பற்று பின்னர் விந்தனைப்பற்று தெற்கு (படியத்தலாவ), விந்தனைப்பற்று வடக்கு (மகாஒயா) என இரண்டு பிரிவுகளாக்கப்பட்டு பின்பு இவ்விரு பிரிவுகளும் 1976 இல் அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. இன்று அம்பாறை மாவட்டம் (திகாமடுல்ல தேர்தல் மாவட்டம்) சிங்களப் பெரும்பான்மை மாவட்டமாக ஆக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவுதான் இன்று அம்பாறை மாவட்டத்தில் அம்பாறைத் தேர்தல் தொகுதி நீங்கலான முஸ்லிம் பெரும்பான்மைக் கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையைச் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

கல்லோயாக் குடியேற்றத்திட்டத்தின்கீழ் சிங்களவர்கள் குடியேற்றப்பட்ட போதும், 1956 இல் இக்குடியேற்றத்திட்டத்தின்கீழ் தாமாகவே காடுவெட்டிக் குடியேறிய தமிழர்கள் இராணுவத்தின் துணைகொண்டு அடித்து விரட்டப்பட்டபோதும், ~அம்பாறை|த் தேர்தல் தொகுதி உருவாக்கத்தின் போதும், ‘அம்பாறைமாவட்டம்| உருவாக்கத்தின்போதும் இப்பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் சமரசம் செய்துகொண்டு சலுகைகளை அனுபவித்தார்களே தவிர தமிழர்களுடன் இணைந்து உரிமைக்குப் போராடவில்லை. இப்பிரதேச முஸ்லின் அரசியல்வாதிகளின் தமிழர் விரோதப் போக்கும் தமிழர்களை அரசியலில் அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தாது வெறும் உணர்ச்சியூட்டும் அரசியலைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்டமையுமே இன்று இந்நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. எதிர்காலத்தில் கிழக்குமாகாணத்திலிருந்து அம்பாறைத் தேர்தல் தொகுதியைத் தாரைவார்க்கும் நிலைமை ஏற்பட இடமளிக்கக் கூடாது.

கல்முனைக் கரையோரமாவட்டத்தை அம்பாறைமாவட்டத் தமிழர்கள் விரும்பாத காரணம்.

கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக சுதந்திர இலங்கையில் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் முஸ்லிம் பெரும்பான்மைத் தேர்தல் தொகுதிகளின் கீழும், முஸ்லிம் பெரும்பான்மை நிருவாக மற்றும் உள்ளுராட்சி அலகுகளின் கீழும் உள்வாங்கப்பட்டிருந்த காலத்தில் தங்கள் வாழ்விடங்களையும், வயற்காணிகளையும், வணக்கத்தலங்களையும் படிப்படியாக இழந்தமைதான் கடந்தகால அனுபவங்களாகும். அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ்க்கிராமங்கள், தமிழ்ப்பாடசாலைகள் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டன. முஸ்லிம் அரசியல்வாதிகளின் தமிழர் விரோத நடவடிக்கைகளும் – அவர்கள் கொண்டிருந்த அரசியல் செல்வாக்கும் – அவ்வரசியல் செல்வாக்கினால் தேடிக்கொண்ட பொருளாதார பலமும் – அவ்வப்போது அவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தமிழ் – முஸ்லிம் இனக்கலவரங்களும் இத்தகைய இழப்புக்களுக்கு ஊக்கியாக அமைந்தன. ~ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்| என்பது போல் கல்முனையை இதற்கு உதாரணமாகக் காட்டமுடியும். இப்படியான இழப்புக்கள் நிகழ்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதியாகியிருந்த வேளைகளிலெல்லாம் தமிழரசுக்கட்சித் தலைவர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை வெறுமனே ஓதிவிட்டுச் சென்றார்களேயொழிய பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பரிகாரம் பெற்றுக் கொடுக்கவோ அல்லது அம்மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவோ அவர்களால் இயலாது போயிற்று. இன்றும் அதுதான் தொடர்கிறது.

இத்தகையதொரு பின்புலத்தில்தான் தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் இருப்பை எதிர்காலத்தில் தக்கவைத்துப் பேணிப்பாதுகாப்பதற்காக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்களுக்கென்று தனியான தமிழ்ப்பெரும்பான்மை நிருவாக அலகுகளையும் (பிரதேச செயலாளர் பிரிவு), உள்ளுராட்சி அலகுகளையும் (பிரதேச சபைகள்). கோரத்தலைப்பட்டார்கள். 1967 இல் கல்முனையில் நிகழ்ந்த தமிழ் – முஸ்லிம் இனக்கலவரத்தின் பின்னர் காலஞ்சென்ற திரு.தோ.அந்தோனிப்பிள்ளை அவர்களின் தலைமையிலான ~கல்முனை முன்னேற்றச் சங்கம்| அப்போதைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அமரர் மு.திருச்செல்வம் அவர்களிடம் கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு அப்போதைய கல்முனைப்பட்டின சபையை இரண்டாகப் பிரித்து இதன் பகுதியை முஸ்லிம் பெரும்பான்மை அலகாகவும், வடபகுதியை தமிழ்ப் பெரும்பான்மை அலகாகவும் உருவாக்கித் தருமாறு கோரிக்கை விடுத்ததிலிருந்து இது ஆரம்பமாயிற்று.

அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்கள் இருப்பைப் பேணிப் பாதுகாப்பதற்கும், தங்கள் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கான திட்டங்களைத் தாங்களே வகுத்து மேற்கொள்வதற்கும் தங்களுக்கென்று தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகுகள் (பிரதேச செயலாளர் பிரிவுகள்), உள்ளுராட்சி அலகுகள் (பிரதேச சபைகள்), பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கட்டுமானங்களும் அவசியம். இதற்கு அடிப்படையாக முதலில் வேண்டப்படுவது தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகுகளேயாகும். அம்பாறை மாவட்டத் தமிழர்களின் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

(i) கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தரமுயர்த்தல்.
(ii) பொத்துவில் (வடக்கு) தமிழ்ப்பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கம்
(iii) சம்மாந்துறைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு உருவாக்கம்.
(iஎ) ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவின் ஃ பிரதேச சபையின் எல்லைப்பிரச்சினை.
(எ) காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் ஃ பிரதேச சபையின் எல்லைப் பிரச்சினை.
மேற்கூறப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் கடந்த ஐம்பது வருடங்களாக எடுத்துக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு கட்டமாக 1994 – 2000 கால பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் நியமித்த ~பனம்பாலன| ஆணைக்குழுவிடம் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம் விபரமான யோசனைகள் அடங்கிய மகஜரைச் சமர்;ப்பித்ததுடன் ஆணைக்குழு முன் நேரில் சாட்சியமளித்தது. ஆணைக்குழுத் தலைவர் எமது நியாயமான கோரிக்கைகளை உடன்பாட்டு ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்த நிலையிலும் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு அப்போதைய அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாகவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கவில்லை. அப்போதைய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரோடு இது குறித்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் கலந்துரையாடிய போது எமது கோரிக்கையிலுள்ள நியாயத்தை ஏற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அப்போதைய அமைச்சருமான எம்.எச்.அஸ்ரப் அவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டிற்கு வருமாறு அறிவுரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் சார்பில் அதன் மாவட்ட இணைப்பாளரான இக்கட்டுரையாசிரியரான நான் அஸ்ரப் அவர்களைக் கொழும்பில் அவரது உத்தியோக வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன். எமது மேற்படி கோரிக்கைகளையிட்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்போது அரசியல் அரங்கில் முன்வைத்திருந்த தென்கிழக்கு அலகு சம்பந்தமான எனது கருத்துக்களுக்கும் கூர்ந்து செவிமடுத்த அஸ்ரப் அவர்கள் இதுபற்றிப் பேச அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள விரும்பியிருந்தார். துரதிஸ்டவசமாக அப்போதைய (1994-2000) பாராளுமன்றம் கலைக்கப்பட்டதும் 2000ம் ஆண்டு பொதுத்தேர்தல் காலத்தில் அவர் அகாலமாக மரணித்ததும் அவர் விரும்பியிருந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட முடியாமற் போனமைக்குக் காரணமாயிற்று. மேற்கூறப்பட்ட சந்திப்பில் சகோதரர் எம்.ரி.ஹஸனலி அவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளாவிட்டாலும் இச்சந்திப்பு பற்றி அறிவார்.

தாங்கள் வாழும் பிரதேசத்தின் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் கலாசார, பண்பாட்டுக்கு ஏற்றவகையிலான சமூக, பொருளாதார நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளவும்; அரசாங்கம் மேற்கொள்ளும் நிருவாக மற்றும் உள்ளுராட்சிச் சீர்ததிருத்தங்கள் – சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் – புனர்வாழ்வு, புனரமைப்பு, நிவாரண கொடுப்பனவுகள் – வன்செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டுக்கொடுப்பனவுகள், சலுகைகள் – ஜனசவிய, சமுர்த்தி, திவிநெகும போன்ற வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் – அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடுகள் என்பவற்றின் பயன்பாடுகளைப் பாரபட்சமின்றிப் பெற்றுக்கொள்ளவும் அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கென தனியான தமிழ்ப் பெரும்பான்மை நிருவாக அலகுகள் அவசியமானவை. ஏனெனில் மேற்கூறப்பட்ட விடயங்கள் யாவும் நிர்வாக அலகுகள் மட்டத்தில்தான் அதாவது பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவே அமுல் செய்யப்படுகின்றன. பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் கூட பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. மாகாண அரசின் நிதியும் பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் அதன் அதனடிப்படையில் அமைந்த பிரதேச சபை ரீதியாகவும் தான் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. சில அரசாங்க நியமனங்கள் கூட பிரதேச ரீதியாகவே வழங்கப்படுகின்றன. இவற்றிலெல்லாம் பாரபட்சமின்றித் தங்களுக்கு உரித்தான நியாயமான பங்கை அனுபவிக்க இத்தனியான பிரதேச செயலகங்கள் மூலம் வாய்ப்பு ஏற்படும்.

அத்துடன் தங்கள் அரசியல் அபிலாஷைகளை எந்தவிதமான அச்சுறுத்தல்களுமின்றி வெளிப்படுத்தவும், அரசாங்கம் அவ்வப்போது அறிமுகம் செய்யும் உள்ளுராட்சி மற்றும் நிருவாக சீர்திருத்தங்களின் பலாபலன்களைப் பாரபட்சமின்றிப் பெற்றுக் கொள்வதற்கும் இத்தனியான பிரதேச செயலகப் பிரிவுகளும் அவற்றின் அடிப்படையில் அமைந்த உள்ளுராட்சி அலகுகளும் அதாவது பிரதேச சபைகளும் அவசியமானவை. மட்டுமல்ல, அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தங்கள் பாரம்பரியப் பிரதேசங்களை ~அறுக்கை| செய்வதற்கும் இத்தனியான பிரதேச செயலகப்பிரிவுகளும் பிரதேச சபைகளும் தேவையானவை. எனவே மேற்கூறப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து மேற்கூறப்பட்ட பிரதேச செயலகப்பிரிவுகள் உருவாக்கப்படுவதற்கு ஆதரவு அளித்து அவற்றை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டு அதற்குப் பின்னர் தாங்கள் போரும் கல்முனைக் கரையோர மாவட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களின் ஆதரவை நாடுவதே நியாயமானது. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மைக்காலத்தில்கூட கல்முனைத் தமிழ்ப்பிரதேச செயலகப் பிரிவு தரமுயர்த்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை நியாயமற்றதாகும்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதன் ஸ்தாபக தலைவர் எம்.எச்.அம்.அஸ்ரப் உயிர்வாழ்ந்த காலத்திலேயே அரசியல் அரங்கில் முன்வைத்த தென்கிழக்கு மாகாண அலகுக் கோரிக்கை கூட அம்பாறை மாவட்டத் தமிழர்களின் இருப்பை மறுத்தலித்ததொன்றாகும்.

தென்கிழக்கு மாகாணம் அல்லது பிராந்தியம் என அரசியல் அரங்கிலே இன்று வர்ணிக்கப்படும் முஸ்லிம்களுக்கான உத்தேச தனித்துவ அரசியல் அலகு தமிழர்களுக்குச் சமமான அதிகாரப் பகிர்வுடன் தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் பாணமைப்பற்று, அக்கரைப்பற்று, சம்மாந்துறைப்பற்று, கரவாகு-நிந்தவூர்ப்பற்று ஆகிய இறைவரி உத்தியோகத்தர் பிரிவுகளையும் வேகம்பற்று தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவையும் உள்ளடக்கிய நிலப்பரப்பில் அமையவேண்டும். இத்தனியான முஸ்லிம் அரசின் ஆளுகையின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் இனம்காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களும் கொண்டுவரப்படல் வேண்டும் என்பதே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்மொழிந்துள்ள யோசனைகளின் ஒட்டுமொத்த வடிவம் ஆகும்.

(ஆதாரம் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13வது தேசிய மாநாட்டு மலர் (02.04.1995) பக்கங்கள் 31,32)

மேற்கூறப்பட்ட நிலப்பரப்பானது 1976 இல் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலப்பரப்பு அம்பாறை மாவட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமமான பெரிய நீலாவணையிலிருந்து தெற்கே பொத்துவில் ஃ பாணமைவரை மக்கள் செறிந்துவாழும் சுமார் 72 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பிரதேசத்தை உள்ளடக்கியதாகும். இதில் அக்கரைப்பற்றிலிருந்து தெற்கே பொத்துவில் வரையிலான கரையோரப்பிரதேசத்தில் தமிழர்கள் முஸ்லிம் கலப்பின்றி தொடர்ச்சியாக வாழும் சுமார் 45 கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பு உண்டு. இத்தனித் தமிழ் நிலப்பரப்பு தற்போதைய ஆலையடிவேம்பு, திருக்கோவில் தமிழ்ப்பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவுகளையும் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் வடபாதியையும் (உத்தேச பொத்துவில் (வடக்கு) தமிழ்ப்பிரதேச செயலகப்பிரிவு) கொண்டுள்ளது. இதைத் தவிர உத்தேச தென்கிழக்கு அலகினுள் காரைதீவு தமிழ்ப்பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவு, கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு மற்றும் உத்தேச சம்மாந்துறை தமிழ்ப்பிரதேச செயலகப் பிரிவு மற்றும் நாவிதன்வெளி தமிழ்ப்பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவும் அடங்குகின்றன. அத்துடன் நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் ~அட்டப்பள்ளம்| எனும் பழந்தமிழ்க் கிராமமும், மாட்டுப்பளை மீனாட்சி அம்மன் ஆலயமும், அட்டாளைச் சேனை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் ~திராய்க்;கேணி| எனும் தமிழ்க்கிராமமும், இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ்வரும் (முன்பு சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ்) ~மாணிக்க மடு| எனும் தமிழ்க்கிராமமும், லகுகல சிங்களப் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் பிரசித்தி பெற்ற உகந்தை முருகன் ஆலயமும் அடங்கும். ஆனால் உத்தேச தென்கிழக்கு முஸ்லிம் மாகாண அலகின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் இனம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களும் கொண்டுவரப்படல் வேண்டும் என முன்மொழிந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உத்தேச தென்கிழக்கில் இனம் காணப்பட்ட மேற்கூறப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களையிட்டு மௌனம் சாதித்தமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோதப் போக்கினை அன்றே இனம் காட்டியுள்ளது. கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்மொழியப்பட்ட உத்தேச தென்கிழக்கு அலகின் வடிவம் அம்பாறை மாவட்டத் தமிழர்களின் இருப்பை மறுதலித்த – கேள்விக்குறியாக்கிய – ஒன்றாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரும் கல்முனைக் கரையோர மாவட்டத்தின் நிலப்பரப்பும் அது முன்னர் முன்வைத்த உத்தேச தென்கிழக்கு முஸ்லிம் மாகாண நிலப்பரப்பும் ஒன்றாகவே அமைவதால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கரையோர மாவட்டக் கோரிக்கையைத் தமிழர்கள் சந்தேகக்கண் கொண்டே நோக்க வேண்டியுள்ளது. உத்தேச தென்கிழக்கு அலகினால் சாதிக்க நினைத்ததைத் தற்போது வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட பின் உத்தேச கல்முனைக் கரையோர மாவட்டத்தினால் சாதிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முயல்வது போல் தெரிகிறது.
மேலும், கடந்த கால நிகழ்கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான உத்தேச கல்முனைக் கரையோர மாவட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் வாழும் சூழல் ஏற்படுமாயின் தமிழர்கள் மீதான முஸ்லிம் அரசியல்வாதிகளின் பாரபட்சமான செயற்பாடுகள் மேலும் செறிவாகும்; தீவிரப்படுத்தப்படும்.
தமிழர்களின் சமூக, பொருளாதார, அரசியல் அபிலாஷைகளைப் புறந்தள்ளி இன்று செயற்படும் முஸ்லிம் முதலமைச்சரையும் முஸ்லிம் அமைச்சர்களையும் (ஒரு சிங்கள அமைச்சர் தவிர்ந்த) கொண்ட கிழக்கு மாகாணசபை இதற்கோர் எடுத்துக்காட்டாகும். ஆனால் தற்போதைய சிங்களப் பெரும்பான்மை அம்பாறை மாவட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத் தமிழர்கள் தொடர்ந்திருப்பதனால் தமிழர்கள் மீதான முஸ்லிம் அரசியல்வாதிகளின் பாரபட்சமான செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் ஐதாகவே – குறைவாகவே இருக்கும். இதுவே யதார்த்தம். இந்த யதார்த்தப் பின்புலத்தில் இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கல்முனைக் கரையோர மாவட்டத்தை தமிழர்கள் நிபந்தனையின்றி ஆதரிக்க முடியாது.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அரசியல் அரங்கிலே தென்கிழக்கு முஸ்லிம் மாகாண அலகுக் கோரிக்கையையும், கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையும் முன்வைப்பதற்கு முன்னர் அவற்றின் சாதக பாதங்களையிட்டு சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் குறைந்தபட்சம் அம்பாறை மாவட்டத் தமிழர் அமைப்புக்களுடனாவது கலந்தோசியாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டமை அக்கட்சி இழைத்த பாரிய அடிப்படை அரசியல் தவறு ஆகும். இதனைவிட ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனோ அல்லது குறைந்தபட்சம் அம்பாறை மாவட்டத் தமிழர்களுடனோ கலந்தாலோசனை செய்யாது முன்னைய ஒரு காலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தென்கிழக்கு அலகு சம்பந்தமாக நிபந்தனையற்ற உடன்பாட்டிற்குத் தன்னிச்சையாக வந்தமை காலஞ்சென்ற மு.சிவசிதம்பரம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி அம்பாறை மாவட்டத் தமிழர்களுக்கு இழைத்த மாபெரும் அரசியல் துரோகமும் ஆகும். எனவே இக்கல்முனைக் கரையோர மாவட்டத்தையிட்டு தமிழரசுக்கட்சித் தலைமைப்பீடம் முன்பு போல் நடந்து கொள்ளக் கூடாது.

எது எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் தமிழ் – முஸ்லிம் ஒற்றுமை அவசியம். ஆனால் அது ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவழிப் பாதையாக அமையும் போது மட்டுமே அர்த்தமுள்ளதாக அமையும். தமிழரசுக் கட்சியினாலோ அல்லது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினாலோ இதுவரை அர்த்தமுள்ள விதத்தில் உண்மையான தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த முடியவில்லை என்பதைத்தான் கடந்த காலம் எண்பித்திருக்கிறது. பாராளுமன்ற அரசியல் நலன்சார்ந்த கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முஸ்லிம்களும், முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ் மக்களும் ஆதரிக்கக் கூடிய அக, புறச்சூழலை உருவாக்குவதன் மூலமே உண்மையான தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியுமே தவிர, தமிழரசுக்கட்சி – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தையினால் அல்ல. எனவே அம்பாறை மாவட்டத் தமிழர்களின் மேற்கூறப்பட்ட அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு எதிர்ப்புக் காட்டாது அவற்றைப் பெற்றுக்கொடுத்தால் மட்டுமே உத்தேச முஸ்லிம் பெரும்பான்மை கல்முனைக் கரையோர மாவட்டக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்ப்பது போல் தமிழ்மக்கள் ஏற்று ஆதரவளிக்க முன்வருவர்.