செய்திகள்

கல்லடியில் கப்பம் பெற்ற மூவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் கப்பம்பெறும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கல்லடிப்பகுதியில் உள்ள மதுபானசாலை ஒன்றின் உரிமையாளரை மிரட்டி கப்பம்பெற முயற்சித்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மூவரும் பெரியநீலாவனை பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் எனவும் கார் ஒன்றில் வந்திருந்து கப்பம்பெற வந்தபோதே கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை நேற்றுக்காலை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி ஐம்பதாயிரம் ரூபா பணத்தினைக்கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

பணத்தினைக்கொள்ளையிட்டு அங்கிருந்த தங்க நகைகளை அபகரிக்க முற்பட்டபோது பெண் கூக்குரல் எழுப்பவே கொள்ளையன் தப்பிச்சென்றுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.