செய்திகள்

கல்வனைஸ் குழாய் முறை தடையால் 85% மீனவ குடும்பங்கள் பாதிப்பு: பாஷையூர் கடற்றொழிலாலர் டேமியனுடனான நேர்காணல்

நேர்கண்டவர்: டீனா

கடற்றொழிலில் உயரமான பாட்டுத் தொழில்களுக்கு பயன்படுத்தும் கல்வனைஸ் குழாய் முறையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டமை 85 சதவீதமான மீனவர்களை பாதித்து இருக்கின்றது என்று சொல்கிறார் பாஷையூர் கடற்றொழிலாலர் சங்கத்தை சேர்ந்த எம்.டேமியன். பல வருடகால யுத்தம் காரணமாக கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் வடக்கு கிழக்கின் மீனவ சமூகம் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்த நிலையில் கடந்த சில வருடங்களாகத்தான் அவர்களால் சற்று வருமானம் ஈட்டும் வகையில் கடலுக்கு சென்று தொழில்செய்ய முடிந்தது. யுத்தம் காரணமாக மீன்பிடி உபகரணங்களை இழந்தும் , நவீன மீன்பிடி உபகரணங்கள் இன்றியும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தான் அவர்களால் தொழிலில் ஈடுபட முடிந்தது. இந்த நிலையில் கடல் வளத்தின் பாதுகாக்கும் நோக்கில் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவருவது இந்த மக்கள் மீது எவ்வாறு மீண்டும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது என்பதை டேமியன் கூறும் தகவல்கள் காட்டுகின்றன.

கடல் வளத்தை பாதுக்காக்கும் பொருட்டு கொண்டுவரும் சட்டங்கள் கட்டுப்பாடுகளை மீனவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. அதேநேரம், எத்தகைய நிபந்தனைகளின் கீழ் தமது தொழில் நடைபெறுகிறது இதனால் தமக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களையும் கவனத்தில் கொண்டு அதிகாரிகள் செயற்படவேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. அண்மையில் மன்னார் கடற்றொலிழாளர் சங்கம் கூட இந்த விடயத்தில் வட மாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்து ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தது.

“100%மான எமது கரையோர மக்கள் கடற்தொழிலே அவர்களது ஜீவனோபாயமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். என்னினும் அவர்கள் காலம் காலமாக செய்யும் தமது தொழில் வருமானத்தை கொண்டே தமது பிள்ளைகளை உயர் கல்வி வரைக்கும் அதற்கு மேலாகவும் படிப்பித்து வருகின்றார்கள். இந்நிலையில் உயரமான பாட்டுத் தொழில்களுக்கு பயன்படுத்தும் கல்வனைஸ் குழாய் முறையை பயன்படுத்துவது தடைசெய்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அவற்றை முற்றாக தடை செய்யாமல் அவற்றுக்குரிய மாற்று வழிகளை அமைத்து கொடுப்பது மிகவும் சிறந்த உதவியாக அமையும்” என்று கூறுகிறார் டேமியன்.

அவருடனான ஒரு சந்திப்பில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பல தகவல்களை அவர் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

Fishing in Jaffna  (1)

நீங்கள் கடற்தொழிலுக்கு செல்லும் போது எவ்விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றீர்கள் ?

பொதுவாக மழை காலங்களாகிய கார்த்திகை, ஜப்பசி மாதங்களில் மின்னல் தாக்கம் மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. அத்துடன் இடி மின்னல் தாக்கத்தினால் அனேக மீனவர்கள் இறக்கின்றனர். இதனால் எமக்கு உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றது. மேலும் கடல் வளங்களில் காணப்படுகின்ற நச்சு நீர் தாக்கமானது எமக்கு அடுத்த சவாலாக இருக்கின்றது. இதன் விளைவு மிகவும் மோசமானது, காரணம் இதில் தாக்கப்பட்ட ஒருவரை குணப்படுத்துவதற்கு எந்த விதமான மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் நாங்கள் முதலுதவியாக அந்த நச்சு நீர் பட்ட இடத்தில் உடனடியாக குளோரின் பூசி அதன் நச்சு தன்மையை குறைக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளுகின்றோம் ஆனாலும் இது நிரந்தரமான தீர்வு அல்ல.

டைனமெட், மற்றும் ரோலர் படகுகளை பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதனால் மீன் வளம் அழிந்து போகின்றது இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

டைனமெட், மற்றும் ரோலர் பயன்படுத்துவது உண்மையிலேயே தடை செய்யப்பட வேண்டிய விடயமாகும். இருப்பினும் சிலர் இதனைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிக்கின்றனர். இதனால் மீன் முட்டைகள் அறவே அழிந்து போகக் கூடிய வாய்ப்புககள் அதிகமாக உள்ளது. மேலும் டைனமெற்றின் எதிரொலி சத்தத்திற்கு சிறியளவான குஞ்சு மீன்கள் இறக்கின்றன. ரோலர் பயன்பாட்டினால் கடல் தாவரங்கள் பவளப்பாறைகள் சேதமடைகின்றன. எனவே இதனைப் பற்றிய விழிப்புணர்வை மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

நீங்கள் பிடித்துக் கொண்டுவருகின்ற மீன்களை விற்பனை செய்யும் போது நீங்கள் எதிர்பர்க்கின்ற வருமானம் உங்களுக்கு கிடைக்கின்றதா? நட்டம் ஏற்படும் போது அதை எவ்வாறு ஈடுசெய்வீர்கள்?

ஆரம்ப காலங்களில் மீன் விற்பனையில் பல பிரச்சனைகள் காணப்பட்டது. தற்போது போக்குவரத்து வசதிகள் அதிகமாக காணப்படுவதனால் கொண்டு செல்லல் பிரச்சனைகள் இல்லை என்றே கூற முடியும். இதனால் உடனுக்குடனான விற்பனை செயற்பாடுகள் நடைபெறுகின்றன. மீன்களை குறித்தும் அவற்றின் விற்பனை நிலவரம் குறித்தும் அறிந்த பின்னரே எமது பட்டிகளில் உள்ள மீன்களை வெளியே கொண்டுவருவோம். ஆகவே, நட்டம் ஏற்படுதல் என்பது குறைவாக தான்காணப்படுகின்றது.

100%மான எமது கரையோர மக்கள் கடற்தொழிலே அவர்களது ஜீவனோபாயமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். என்னினும் அவர்கள் காலம் காலமாக செய்யும் தமது தொழில் வருமானத்தை கொண்டே தமது பிள்ளைகளை உயர் கல்வி வரைக்கும் அதற்கு மேலாகவும் படிப்பித்து வருகின்றார்கள். இந்நிலையில் உயரமான பாட்டுத் தொழில்களுக்கு பயன்படுத்தும் கல்வனைஸ் குழாய் தொழில்களை பயன்படுத்துவது தடைசெய்வது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். அவற்றை முற்றாக தடை செய்யாமல் அவற்றுக்குரிய மாற்று வழிகளை அமைத்து கொடுப்பது மிகவும் சிறந்த உதவியாக அமையும்.

இத் தொழில் தடையினால் கிட்டத்தட்ட 85% மீனவர்கள் பாதிக்கப்பட்டதுடன் 8 மீனவர்களின் பாடுகளும் அவர்களின் 300,000/= பெறுமதியான தொழில் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதால் பாரிய இழப்பும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய தொழில் முதலை குறித்த இழப்பீடும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவும் இல்லை. அது குறித்த தீர்வும் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. வறிய மக்களுக்கு உண்டான அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு யார் கொடுப்பது? என்பது மக்கள் மத்தியில் உண்டாகும் புதிரான கேள்வியாக இருக்கின்றது. இவ் விடயம் தொடர்பில் அணுக வேண்டிய அரச அதிகாரிகளுடனும் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டும், எந்த விதமான முடிவுகளும் இன்னும் வெளிப்படவில்லை. நாட்கள் மட்டுமே செல்கின்றன. தீர்வுகள் தாமதமாகின்றன. பொறுப்பு கூறவேண்டிய அதிகாரிகள் உடனடியாக குறிப்பிட்ட தொழில் சங்கங்களுடன் கலந்தாலோசித்து மீனவர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வை முன் வைக்கவேண்டும், அதற்கான நட்ட ஈடையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.