செய்திகள்

கழிவு ஒயில் நீர் தொடர்பில் சட்டபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தெரிவிக்க வேண்டியது எமது கடப்பாடு: வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன்

வலிகாமம் பிரதேசத்தில் கழிவு ஒயில் கலந்த தண்ணீரைக் குடிக்கலாமா?இல்லையா?என்பது தொடர்பில் சட்டபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தெரிவிக்க வேண்டிய கடப்பாட்டிலிருந்து நாம் வழுவிச் செல்ல முடியாது.இவ்வாறு சுட்டிக் காட்டினார் வடமாகாண சபை உ றுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன்.

இன்று இடம்பெற்ற வடமாகாண சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களால் எல்லாம் முடியுமென்று நாங்கள் கருத வேண்டியதில்லை.ஏனெனில்,எமக்கு வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்களே உண்டு.தண்ணீர் தொடர்பான அதிகாரங்கபை; பொறுத்த வரை மாகாண சபை அரசாங்கத்துக்கு முற்றுமுழுதான அதிகாரங்களில்லை.மத்திய அரசாங்கமே பெருமளவான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.அந்த வகையில் எமது அதிகார எல்லைகளைத் தாண்டிச் செய்ய வேண்டிய சில செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கத்திடம் அதிகாரங்களைக் கேட்டுப் பெற வேண்டும்.

ஏனெனில் மக்கள் மத்தியில் தங்களுடைய கிணற்று நீர் தொடர்பான பல்வேறு பட்ட எதிரும் புதிருமான கருத்துக்கள் காணப்படுகின்றன.அப்படியான நிலையில் அம்மக்களுக்குத் தகவல்களை வழங்ககின்ற போது மிகவும் கவனமான முறையில் சட்டபூர்வமான,உத்தியோகபூர்வமான கையெழுத்திட்ட செய்திகளையே நாம் வழங்க வேண்டும்.அப்போது தான் அதன் உண்மைத் தன்மை பற்றி யாரும் கேள்வியெழுப்ப முடியாமலிருக்கும்.இல்லாவிடில்,மக்களிடையே நிலவி வரும் குழப்பமான,தெளிவின்மையான நிலை தொடரலாம்.அதற்கு நாம் இடங்கொடுக்காமல் சட்டபூர்வமான, அதிகாரபூர்வமான அதிகாரபூர்வ தகவல்களைப் பெற்று மக்களுக்கு வழங்க வேண்டும்.

இன்றைய தினம் இக் கோரிக்கையை வலியுறுத்தி நல்லூர் வீதியிலே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடிக் கவனயீர்ப்பில் ஈடுபடவிருக்கிறார்கள்.எங்களுடைய மாண்புமிகு முதலமைச்சரவர்கள் அவர்களை அழைத்து அவர்களுடைய கோரிக்கைகளை உள்வாங்கி எங்களால் இதுவரைக்கும் எவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன?என்பன தொடர்பாகவும் எதிர்வரும் காலத்தில் நாங்கள் எவ்வாறான விடயங்கள் மேற்கொள்ளவுள்ளோம் என்பன தொடர்பிலும் பேச வேண்டுமென வேண்டுகோளொன்றை முன்வைக்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.நகர் நிருபர்-