செய்திகள்

காக்கா முட்டை மீது வழக்கு

மணிகண்டன் இயக்கத்தில் சென்னையின் சேரிப் பகுதி சிறுவர்களை மையமாக வைத்து ஜூன் 5ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படம் காக்கா முட்டை. படம் வெளியானது முதல் அனைத்து மக்களிடமும் பாராட்டுகளை பெற்றதோடு நல்ல விமர்சனங்களையும் பெற்றது.

இப்படத்தில் வழக்கறிஞர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் உள்பட 4 பேர் வரும் ஓகஸ்ட் 6ஆம் தேதி ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் மணிவண்ணன் என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர் தொழிலை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அவதூறு பரப்பும் வகையில் வசனங்கள் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் மணிகண்டன் மற்றும் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வரும் ஓகஸ்ட் 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.