செய்திகள்

காங்கேசன் துறை வரையான இரயில் சேவை ஆரம்ப நிகழ்விற்கு இந்திய தூதரகத்திற்கு அழைப்பில்லை

KKS rail
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை  உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட போதும் இந்திய தூதரகத்திற்கு அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெற்றன. எனினும் இந்திய தூதுவர் மற்றும் துணைத்தூதரகத்திற்கோ சேவை ஆரம்பிப்பு தொடர்பிலான அழைப்போ அல்லது ஆரம்பம் குறித்த அறிவுறுத்தல் கடிதமோ கிடைக்கவில்லை என்று தூதரக வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
கடந்த கால யுத்தத்தினால் வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்படைந்திருந்தது. எனினும் 2009 ஆம் ஆண்டு போர் முடிந்த பின்னர் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வவுனியா தொடக்கம் காங்கேசன்துறை வரையான ரயில் பாதை அமைக்கும் பணியை இந்திய அரசு ஏற்று செயற்படுத்தி வருகின்றது. புனரமைப்பிற்காக பல மில்லியன் ரூபாக்களை இந்திய அரசு செலவிட்டுள்ளது. இதனடிப்படையில்   கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும்  ஜனாதிபதியின் வருகை காலதாமதம் ஆனதால் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் குமார் வெல்கம ஆகியோர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.