செய்திகள்

காணாமல்போனோர் அமர்வு ; மன்னாரில்

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அடுத்த கட்ட அமர்வை மன்னார் மாவட்டத்தில் நடத்தவுள்ளது என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆணைக்குழுவின் பதவிகாலம் மே மாதம் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ளதால், புதுவருடம் முடிவடைந்த கையோடு மட்டக்களப்பில் அமர்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

பரணகம ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. எனினும், பணிகளை இறுதிப்படுத்துவதற்காக மூன்று மாத கால பதவி நீடிப்பை ஜனாதிபதி வழங்கினார்.

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக தமது ஆட்சியின்போது ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழுவொன்றை மஹிந்த ராஜபக்ஷ அமைத்திருந்தார்.

இந்த விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், உள்ளகப் போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் அதன் விடயப்பரப்பை மஹிந்த விஸ்தரித்ததுடன், அனைத்துலக சட்டதிட்டம் தொடர்பில் பரணகம குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன் டி சில்வா தலைமையில் அறுவரடங்கிய ஆலோசனைக் குழுவொன்றையும் அமைத்திருந்தார்.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னரும் பரணகம குழுவுக்கு பணிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் வழங்கினார்.

விசாரணைகளை முன்னெடுத்த பரணகம ஆணைக்குழு போர்க்குற்றங்கள் தொடர்பிலான தமது இறுதி விசாரணை அறிக்கையை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளித்தது.

அத்துடன், காணாமல்போனோர் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டது. எனினும், காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை.

இறுதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவேதான், இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக தற்காலிக பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

n10