செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்திக்க ஏற்பாடு?

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நீதியை பெற்றுத் தருமாறு அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ போராட்டம் நடத்தும் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெகுவிரைவில் ஜனாதிபதி காணாமல் போனோரின் உறவினர்களை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, ‘த இந்து’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையிலேயே அரசாங்கம் இவ்வாறாக காணாமல் போனோரின் உறவினர்களை சந்திப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். -(3)