காணாமல் போனவர்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக குச்சவெளியில் ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அமைக்கப்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக திருகோணமலை குச்சவெளி பிரதேச சபைக்கு முன்பாக காணமல் போனவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆணைக்குழு எதிர்வரும் நாட்களில் திருகோணமலையில் காணாமல் போனவர்கள் பற்றி மேற்கொள்ளவிருக்கும் அமர்வுகளில் தாங்கள் இனிமேல் கலந்துகொள்ளப் போவதில்லை என்றும் இவர்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் அரசாங்கத்தின் உள்ளக விசாரணைக்கும் எதிரான ஏராளமான சுலோக அட்டைகளை அவர்கள் ஏந்தி நின்றனர். அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதனால் காணமல் போனவர்கள் பற்றி கண்டறிவதற்கு ஐ. நா. விசாரணைக்குழு ஒன்றை வரவழைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆணைக்குழுவின் அமர்வு கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றிருந்தது.