செய்திகள்

காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மீது கடும் விமர்சனம் முன்வைப்பு

காணாமல் போனவர்கள் குறித்த முறைபாடுகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் வெளிப்படைத் தன்மை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டிருக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் ஆணை ஆகியவை, நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டுவது தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான அக்கறையை கேள்விக்குள்ளக்குவதாக தெரிவித்திருக்கிறது.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தனது கவலைகளை பட்டியலிட்டு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எழுதியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஒரு இடைக்கால அறிக்கையை வெளியிட்டதோ அதேபோல , இந்த ஆணைக்குழுவும் தனது இடைக்கால அறிக்கையை பகிரங்கப்படுத்தி முக்கிய விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடைபெற வழி செய்ய வேண்டும் என்றும் இந்த கடிதத்தில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் கேட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன உள்ளடங்கலான இராணுவ அதிகாரிகள் ஆகியோர் இரகசியமான முறையில் நேர்காணப்பட்டதாகவும் ஆனால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களுக்கு இவ்வாறு இரகசிய நேர்காணல் வசதி செய்யப்படவில்லை என்றும் குடம் சாட்டியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் இந்த ஆணைக்குழுவினால் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா , அப்படியானால் அவற்றின் தன்மைகள் மற்றும் நோக்கங்கள் என்ன எதிர் கால திட்டங்கள் என்ன என்பவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.