செய்திகள்

காணாமல் போனோர் அணைக்குழுவின் விசாரணைகளை பகிஷ்கரிக்க தமிழ் சிவில் சமூக அமையம் முடிவு

தமிழ் சிவில் சமூக அமையமும் காணாமல் போகச் செய்யப்பட்ட நபர்களின் நலன் பேணும் அமைப்பும், காணாமல் போனோர் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள சனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் அனைத்தையும் எதிர்காலத்தில் பகி~;கரிப்பதென்று முடிவு செய்துள்ளன.

எதிர்வரும் 28 பெப்ரவரி- 3 மார்ச் 2015  ஆகிய திகதிகளில் ஆணைக்குழுவின் அமர்வுகள் திருகோணமலையில் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்ற வேளையில் கடந்த 24 பெப்ரவரி 2015 இவ்விரு அமைப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கான காரணங்களையும் இவ்விரு அமைப்புக்களும் வெளிப்படுத்தியுள்ளன:

1.    இத்தகைய சனாதிபதி ஆணைக்குழுக்கள் பல காலம் காலமாக இலங்கை அரசாங்கங்களினால் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவற்றின் பெறு பேறுகள் பூச்சியமே. இவ்வாணைக்குழுவின் நோக்கங்களும் செயற்பாடுகளும் முன்னைய சந்தர்ப்பங்கள் போன்றே திருப்தி தருவதாக இல்லை: உதாரணமாக கடந்த காலத்தில் இவ்வாணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற அதே வேளையில் காணமால் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அமர்வுகளை நடத்தும் போது  காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு  பொருளாதார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைப் பற்றியே கூடுதல் கரிசனை காட்டுகின்றனரே அன்றி காணாமல் போகச் செய்யப்பட்டவர்களைத் தேடுவதில் அவர்கள் கவனம் இல்லை என்பதை அவர்கள் இந்த அமர்வுகளில் சாட்சியமளிக்க வருவோரிடம் கேட்கும் கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஆணைக்குழுவிற்கு ஆலோசனை  வழங்குவதற்காக  நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களில் ஒருவர் இலங்கை அரசாங்கத்தினால் தனது சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு சம காலத்தில் நியமிக்கப்பட்டவர் என்பது அண்மையில் அறியக் கிடைத்துள்ளது. இவை இவ்வாணைக்குழுவின் மீதான நம்பிக்கையை முற்று முழுதாக இழக்கச் செய்ய வழிகோலியது.

2.    இவ்வாணைக்குழுவின் விசாரணைப் பரப்பு ஜூலை 2014 இல் விஸ்தரிக்கப்பட்டு யுத்தத்தின் போது நிகழ்ந்த ஏனைய  குற்றங்கள் தொடர்பாகவும் விசாரிக்குமாறு  ஆணைக்குழு அப்போதைய அரசாங்கத்தால் பணிக்கப்பட்டது. இஃது இவ்வாணைக்குழுவின் பணியையும் நோக்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

அனைத்துக் குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்பதுவே எமது நிலைப்பாடும். ஆனால் இது ஒரு ஒழுங்கு முறையாகச் செய்யப்பட வேண்டும். காலத்திற்குக் காலம் தேவைக்கேற்றவாறு ஆணைக்குழுவின் விசாரணைப் பரப்பு கூட்டி குறைக்கப்படுவது அது அரசியல் மயப்படுத்தப்பட்ட ஓர் ஆணைக்குழு என்பதற்கான சான்றாகும்.

3.    ஜனவரி 9 2015 பதவியேற்ற புதிய அரசாங்கம் காத்திரமான உள்ளக விசாரணையொன்றை உருவாக்கப் போவதாகக் கூறி ஐ. நா. மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கை வெளிவருவதையும் பிற்போடச் சொல்லிக் கோரி வெற்றியும் கண்டுள்ளது. ஆனால் நடைமுறையில் முந்தய அரசாங்கத்தின் கொள்கைகளையே இந்த அரசாங்கமும் தொடர்கின்றது என்பதற்கு இவ்வாணைக்குழுவின் தொடர்ச்சியான நிலவுகை உதாரணமாகின்றது.

இவ்வாணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட  கரிசனைகள் தொடர்பில் எந்த மாற்று நடவடிக்கையும் இந்த அரசாங்கம் எடுக்காமல் அதன் அமர்வுகளை நடத்த அனுமதித்துள்ளது என்பது கவனிக்கப்பட வேண்டும்.

ஆகவே உள்ளக விசாரணை என்ற பெயரில் நீதி மறுதலிக்கப்படுவதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. காணமால் போனோர் தொடர்பான ஆணைக்குழுவைப் பகி~;கரிப்பதன் மூலம் நாம் இச்செய்தியை உலகிற்கு சொல்ல விழைகின்றோம்.