செய்திகள்

காணாமல் போன மலேஷிய விமானம்: மர்மத்துக்கு முடிவு இல்லை

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம் எச் 370இன் உடைந்த பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என அந்த விமானத்தை கண்டறியும் பணிக்கு தலைமை ஏற்றுள்ள ஆஸ்திரேலியாவின் கடல் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் மலேசியாவில் இருந்து புறப்பட்டு சீனாவுக்குப் போய்க் கொண்டிருந்த எம் எச் 370 விமானம் நடுவழியில் பாதை மாறிச் சென்றது. இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிதான் இதுவரை தனது நிறுவனம் மேற்கொண்ட மிகவும் சவாலான பணி என்று ஆஸ்திரேலியாவின் கடல் பாதுகாப்பு நிறுவனத்தி்ன் தலைமை ஆணையர் மார்டின் டோலன் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த விமானம் என்னவானது என்பது தொடர்பான புதிரை கண்டறியமுடியும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விமானத்தை தேடுவதற்காக பல நாடுகள் கூட்டாக முயற்சி செய்துவருகின்றன.

அமெரிக்க கடற்படை தன்னிடம் உள்ள நவீன தொழில்நுட்பக் கருவிகளை இந்த தேடுதல் வேட்டைக்குப் பயன்படுத்தியது; இருந்தும் இது தொடர்பில் முன்னேற்றமில்லை. காணாமல்போன விமானத்தில் 239 பேர் பயணித்திருந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார்.