செய்திகள்

காணிகள் விடுவிக்கப்படா விட்டால் மக்களை திரட்டி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்: மீண்டும் மாவை எச்சரிக்கை

வடபகுதியில் தொடர்ந்தும் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாது அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் எதிர்வரும் மே மாதம் பிரதமர் ரணில் விக்கரம சிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன் ஜனாதிபதியும் விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம் மற்றும் எதிர்வரும் மாதங்களில் தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படா விட்டால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.]

N5